மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப் பகுதியில் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து மயிலத்தமடுவில் கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் பண்ணை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கிராம மக்கள் இணைந்து தொடர்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் எல்லையில் உள்ள தங்களது மேய்ச்சல் தரைப் பிரதேசமான மயிலத்தமடு, பெரியமாதவனைப் பரப்பில் தொடரும் சட்ட விரோத குடியேற்றம் தடுக்கப்பட்டு மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தருமாறுகோரி நடத்தப்படும் இந்தத் தொடர் போராட்டத்தில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கிராம சபைகளைச் சேர்ந்தவர்கள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர்.
மயிலத்தமடு கால்நடைப் பண்ணைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய மேய்ச்சல் தரையைக்கொண்ட நிலப்பரப்பு மயிலத்தனை ஆகும். 900 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மேய்ச்சல் தரையில் பல தலைமுறைகளாகத் தமிழர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்த வெளியாகவும், இயற்கையாக, கால்நடைகள் உண்ணக்கூடிய புற்கள் முளைத்து வளர்வதனாலும், காட்டு விலங்குகளிடமிருந்து இலகுவில் பாதுகாப்பைத் தரக்கூடிய விதத்தில் இவ்வெளி காணப்படுவதனாலும் இந்தப் பகுதியில் தமிழர்கள் கால்நடைப் பண்ணைகளை அமைத்துள்ளனர். இங்கு கிட்டத்தட்ட 250000 லட்சம் நாட்டுக் கால்நடைகளுக்கு உரித்துடைய 978 தமிழ் பண்ணையாளர்கள் உள்ளனர். இவர்களில் மூவர் முஸ்லிம் கால்நடைப் பண்ணையாளர்கள் ஆவர்.
மைத்திரி ஆரம்பித்து வைத்த வன்முறை
1995 ஆம் ஆண்டுவரைக்கும் இந்தப் பகுதியில் தமிழர்கள் எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா காலத்தில் விவசாய அமைச்சராக இருந்தவரும், நல்லாட்சியின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன சந்திரிகாவின் காலத்தில் விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அவரின் ஆளுகையின் கீழ் இருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையைக் கொண்டு, மயிலத்தமடு, பெரியமாதவனை ஆகிய மேய்ச்சல் தரைகளின் குறிப்பிட்ட பல ஏக்கர் நிலத்தை அபகரித்தார். அப்பகுதியில் சிங்கள குடியேற்றங்களைச் செய்யவும், தமிழ் பண்ணையாளர்களின் காணிகளை பொலநறுவை பகுதிச் சிங்களவர்களுக்கும், அம்பாறையில் குடியேற்றப்பட்டிருந்த சிங்களவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆயினும் இப்பகுதியில் இடம்பெற்ற போர் நிலமைகள் காரணமாக அந்த செயற்றிட்டத்தை அவரால் வெற்றிகரமாகச் செய்யமுடியாது போனது. அதேவேளை தமிழ் பண்ணையாளர்களும் அங்கு தொடர்ந்தும் நிலைத்திருக்க முடியாது போக, கால்நடைகளோடு, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தரவைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
போர் முடிவுற்றதும் தமிழ் பண்ணையாளர்கள் மீளத் திரும்புகையில் அங்கு மைத்திரியின் கனவு நனவாகியிருந்தது. நாலா பொலநறுவை, அம்பாறை எல்லைக் கிராமங்களின் பக்கமாகக் காடுகளை அழித்து சிங்கள குடும்பங்களை குடியேற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனவே அன்றிலிருந்து இதற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் பண்ணையாளர்கள் தற்போது, தொடர்ப் போராட்டத்தை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் பண்ணையாளர்கள் அனுபவித்த இன்னல்கள்
1995 ஆம் ஆண்டு தொடக்கம் இங்கு கால்நடை மேய்ச்சல் வேலைகளில் ஈடுபடும் பண்ணையாளர்கள், தொழிலாளர்கள் சிங்கள பேரினவாத அரச படைகளினாலும், இனவாத சிங்களவர்களாலும் சொல்லொணத் துயரத்தை அனுபவித்து வந்திருக்கின்றனர். இதுவரை பதிவுசெய்யப்பட்டவகையில், இப்பகுதியில் கால்நடை மேய்ப்பிற்காக சென்றவர்களில் 75 பேர் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு என்ன நடந்தது? யார் கடத்தினார்கள்? இப்போது உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா போன்ற எந்தக் கேள்விகளுக்கும் யாரிடமும் பதிலில்லை. தமது உறவுகளைத் தொலைத்த குடும்பத்தினர் ஒவ்வொரு காணாமலாக்கப்பட்டோர் போராட்டங்களிலும் கலந்துகொண்டிருக்கின்றனர். அதேபோல மயிலத்தமடு, பெரியமாதவனைப் பகுதிகளில் மாடு மேய்க்க சென்றவர்கள் பிணமாகவும், முண்டமாகவும் கண்டெடுக்கப்பட்ட கதைகள் இப்பகுதியில் ஏராளமாகவே உண்டு. அந்தக் கொலைகளுக்கு எந்தக் கணக்கும் இல்லை. யார் கொன்றார்கள் என்பதற்கும் சாட்சியமில்லை.
இவ்வாறு தமிழர்களை மாத்திரம் இலங்கை அரச படைகளும், இனவாத சிங்கள குடியேற்றவாசிகளும் கொன்றொழிக்கவில்லை. மாறாக வாய்பேசாத சீவன்களான கால்நடைகளை வெட்டியும், உயிரோடு வைத்து எரித்தும், தலைகளை, கால்களை அறுத்தும் கொன்று போட்டிருக்கின்றனர்.
மாடுகள் மேய்வதற்காக இயற்கையாக முளைத்திருக்கும் புல்வெளியை கோடைகாலத்தில் தீயிட்டு எரித்துவிடுவதை ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருக்கின்றனர். அந்நிலத்தில் மழை பெய்து புற்கள் பச்சைப்பசேல் எனக் காட்சி தரும் காலத்தில், இரவுகளில் பல உழவு இயந்திரங்களில் வருகைதந்து, அந்நிலம் முழுவதையும் உழுதுவிட்டுச் செல்வதை ஒரு வேலையாகச் செய்யும் இனவாதச் சிங்களவர்கள்தான் இந்தப் பகுதியில் தற்போது குடியேற்றப்பட்டிருக்கின்றனர்.
இந்த அநியாயங்கள் எல்லாம்போக, பல லட்சக்கணக்கான கால்நடைகளை இறைச்சிக்காகக் களவாடிச் சென்றிருக்கின்றனர். இதனைக் கையும்மெய்யுமாகப் பிடித்த தமிழர்களைக் காடுகளில் கட்டிவைத்துத் தாக்கியிருக்கின்றனர். அந்தக் கால்நடைக் கொள்ளையர்கள் தாக்கியதன் பின்னர், சிறிலங்கா பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்து, மீளவும் சிறையிலடைத்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.
நாட்டு மாடுகளின் அழிப்பு
சிறீலங்கா முழுவதிலும் கிட்டத்தட்ட 550000 நாட்டு கால்நடைகள் (மாடுகள் மட்டும்) உள்ளன. இவற்றில் 250000 நாட்டு மாடுகள் மயித்தனை, பெரியமாதவனை பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. நாட்டின் பால் உற்பத்தியில் பெருமளவு பங்கினை இந்தப் பண்ணையின் உரித்தாளர்களாகிய தமிழர்கள் வழங்குகின்றனர். எவ்வித ஊக்கநலத் திட்டங்களையும் இந்தப் பண்ணையாளர்களுக்கு வழங்காத அரசு, கடந்த வருடம் பெருமளவு கால்நடைகள் நோயினால் அழிவுற்றபோதும் கூட எவ்வித உதவித் திட்டங்களையும் இவர்களுக்கு வழங்கவில்லை.
பண்ணைகளை அபகரித்து, இந்த நாட்டுக் கால்நடை வளர்ப்பை அழிக்கவே அரசு முயற்சித்து வருகின்றது. அதற்குப் பிரதான காரணமே, தமிழர்களிடம் இவ்வளவு பெருந்தொகையான நாட்டு மாடுகளும், பால் உற்பத்தியினால் கிடைக்கும் பொருளாதார பலமும் இருந்துவிடக்கூடாது என்பதற்காகவே. இந்நாடு என்றுமில்லாத வகையில் பொருளாதார சிதைவுக்குள்ளாகியிருக்கின்ற இவ்வேளையில், அரிதான வளமாக மிஞ்சியிருக்கும் கால்நடை வளர்ப்பை அழிக்க அரசு முன்னிற்கிறதெனில், தமிழர்களைப் பொருளாதார ரீதியாக அழித்துவிடவேண்டும் என்பதற்காகவே. இவ்வாறான பொருளாதாரச் சிதைவையும், சிறார் ஊட்டச்சத்தின்மையையும் எதிர்கொள்ளும் வேறெந்த நாடாவது நாட்டு மாடுகள் பாரியளவில் அழிந்து போவதை செய்யுமா? நாட்டு மாடுகளுக்குரிய இயற்கைப் பண்ணைகளை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்குப் பயன்படுத்துமா? ஆனால் சிறீலங்கா மட்டும் அதனைச் செய்யும். ஏனெனில் இந்தப் பண்ணைகள் தமிழர்களுடையவை.
பௌத்த பிக்குவின் அச்சுறுத்தல்
அண்மைக்காலமாக அப்பகுதியில் குடியேறியிருக்கும் பௌத்த பிக்கு ஒருவர், சில சிங்கள காடையர்களையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு பெரும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றார். பௌத்த விகாரைகளே இல்லாத இந்தப் பண்ணைவெளியில் பௌத்த மடாலயம் ஒன்றினை அமைத்து அவ்விடத்தில் புத்தர் சிலைகளையும் வைத்துள்ளார். இவ்வளவு அநியாயங்கள் நடந்திருப்பதை ஊடகங்களோ, சிவில் சமூகப் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ சென்று பார்வையிட முடியாதளவுக்கு வன்முறைகளில் ஈடுபட்டுவருகின்றார். அவருக்குத் துணையாக அவருடன் சிங்கள காடையர்களும் காவலுக்கிருக்கின்றனர்.
ஆக, இத்தனை அநீதிகளுக்கு எதிராகவும்தான் மயிலத்தமடு, பெரிய மாதவனை பண்ணையாளர்கள் போராடத் தொடங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு இந்நாட்டு அரசினாலோ, அரச நீதி கட்டமைப்பினாலோ எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை. எனவே இதற்கும் வேண்டும் சர்வதேச கவனிப்பே.