மனித உரிமைகள் பேரவை அதனுடைய கடமை எல்லைக்குள் செயற்பட வேண்டும் – பீரிஸ்

354 Views

 

‘ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இதுவரை நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டை எடுத்துரைப்போம். எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அறிவிப்போம். அவை அனைத்தையும் இந்நாட்டு அரசியலமைப்புக்கு அமையவே மேற்கொள்வோம். மனித உரிமைகள் பேரவை அவர்களது கடமை எல்லைக்குள் செயற்பட வேண்டும். நாட்டின் உள்விவகாரத்திற்குள் தலையிட அவர்களுக்கு உரிமையில்லை’

இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். கொழும்பு, பத்தரமுல்ல, வோட்டர் எட்ஜ் ஹொட்டலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார். ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

‘கடந்த அரசாங்கம் வழங்கிய சில வாக்குறுதிகளானவை எமது அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானவை என்பதால் அப்போதைய மற்றும் தற்போதைய அரசாங்கத்தினால்கூட அவற்றை செய்யமுடியாது. அதேபோல மனித உரிமைகள் ஆணைக்குழு அவர்களது கடமை எல்லைக்குள் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். நாட்டின் உள்விவகாரத்திற்குள் தலையிட அவர்களுக்கு உரிமையில்லை.

20ஆவது திருத்தம் என்பது இந்நாட்டு மக்களுக்குரியது. முப்படையினரின் பதவிகள் நியமனம் என்பன நாட்டு அரசாங்கத்தின் பொறுப்பாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சிறந்த உதாரணமாகும். அதற்கான பொறுப்பினை யார் ஏற்பார்? வெளிநாட்டுப் பிரிவுகள் ஏற்குமா? இல்லை. அதனால் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்நாட்டு அரசாங்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

அதேபோல ஒரு நாட்டினை இலக்கு வைத்து எடுக்கப்படுகின்ற தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். அன்று இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தார்கள். நாளை எந்த நாட்டிற்கோ எனத் தெரியாது. அனைத்து நாடுகளையும் ஒரே அளவுகோலில்தான் அவர்கள் அளவிட வேண்டும். நாட்டின் அரசாங்கம் குறித்து எதிர் நிலைப்பாடா அல்லது சிறந்த நிலைப்பாடா என்பது முக்கியமல்ல. அனைத்து நாடுகளுக்கும் ஒரேவிதத்தில் அந்த ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

குறிப்பாக அரசியல் பழிவாங்கல் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு முன் அதனை விமர்சிப்பது என்பது பக்கச்சார்பான விடயமாகும். வெளிநாடுகளில் செயற்படுகின்ற புலம்பெயர் சக்திகள் மற்றும் அவர்களுக்கு சார்பான சக்திகள் எமக்கெதிராக கொண்டுவருகின்ற யோசனைகளை நாங்கள் எதிர்க்கின்றோம். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இந்த செயற்பாடானது ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதை தெரிவிக்கின்றோம்.

கேள்வி – ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் உதவியை இலங்கை நாடியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் – இந்திய- இலங்கைக்கு இடையில் பல்லாண்டு நட்புறவு உள்ளது. எமக்கெதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது என்று நம்புகிறோம். சிலர் இதனை வேறுவிதமாக நாட்டிற்கெதிராக வகையில் சிந்திப்பார்கள் என்றால், அதில் பயனில்லை. இந்திய அரசாங்கம் எம்முடன் மிகவும் நட்புறவை வலுப்படுத்தி செயற்படுகின்றது. வெளிநாட்டு ஒன்றுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றபோது சில நெருக்கடிநிலை ஏற்படலாம். ஆனால் அந்நாட்டுடன் உறவு முறிந்தது என்ற முடிவுக்கு வரக்கூடாது.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சு நடத்தினோம். மேற்கு முனையம் குறித்தும் பேச்சு நடத்தினோம். ஆகவே எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த தீர்மானத்தையும் இந்தியா எடுக்காது என நம்புகிறோம். கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து ஜெனீவா விவகாரம் குறித்து கலந்துரையாடினோம். இரண்டு வாரங்களில் மூன்று சந்திப்புக்களை நடத்தினோம். கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது.

Leave a Reply