இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர் ஒரு மாதத்தை கடந்து நீண்டு செல்லும் நிலையில் அங்கு 10,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 26000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதுடன் உலகில் உள்ள 193 நாடுகளும் பார்த்திருக்க மிகப்பெரும் மனிதப்பேரவலம் ஒன்றும் அங்கு வாழும் 2 மில்லியன் மக்கள் மீது உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடுகள் எனக்கூறிக்கொள்ளும் நாடுகளால் அரங்கேற்றப்படுகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலிய படையினர் ஏறத்தாள ஒரு இலட்சம் பேர் காசா பகுதியை இரண்டாக பிரித்து ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை கடந்த வாரம் ஆரம்பித்திரந்தனர். வான்படையினரும், ஏவுகணைப் படையினரும் 30,000 தொன் வெடி குண்டுகளை அந்த சின்னம் சிறிய பகுதி மீது வீச மிகப்பெரும் படைவலுவுடன் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட ஊடறுப்புத் தாக்குதல் 5 நாட்களின் பின்னர் வடக்கு காசாவின் மையப்பகுதியை அடைந்திருந்தது.
காசாவை இரண்டாக பிரித்த பின்னர் மேலும் பெயிற் லஹா மற்றும் பெயிற் ஹனோன் ஆகிய இரு முனைகளால் நகர்வதன் மூலம் வடக்கில் உள்ள ஹமாஸ் படையினரின் பலத்தை அழிப்பது தான் இந்த நடவடிக்கையின் திட்டம்.
ஆனால் சமர் அங்கு உக்கிரமாகவே இடம்பெற்று வருகின்றது. ஹமாசின் பல பதுங்குகுழிகளை அழித்துள்ளதாகவும், ஹமாசின் காசா பகுதிக்கான தலைவரின் பதுங்குகுழியை சுற்றிவளைத்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியபோதும் இந்த பத்தி எழுதப்படும் வரையில் அவர் கொல்லப்பட்டதாகவோ இல்லை ஹமாசினால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவோ செய்திகள் இல்லை.
எனினுத் மத்தியகிழக்கிற்கு சென்றுள்ள அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏயின் தலைவர் வில்லியம் பேர்ன்ஸ், இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் தலைவருடன் இணைந்து கட்டார் அரசுடன் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றார்.
அதேசமயம், கடந்த ஒரு மாதத்தில் 3 தடவைகள் இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் காசாவில் இருந்து ஹமாசை அகற்றி வேறு ஒரு தரப்பை அதிகாரத்திற்கு கொண்டுவருவது தொடர்பில் அரபு நாடுகளுடன் பேசிவருகின்றார். ஆனால் எகிப்தும், துருக்கியும் அதனை ஆரம்பத்திலேயே நிராகரித்துவிட்டன.
பேச்சுக்கள் இடம்பெறும் அதேசமயம், களமுனையானது மிகவும் கடுமையானதாகவே இருக்கின்றது. தொடர் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. ஹமாசின் பல பதுங்குகுழிகளை தாம் கைப்பற்றியுள்ளதாகவும், பல ஆயத உற்பத்தி நிலைகள் மற்றும் உந்துகணைகள் செலுத்தும் இடங்களை கைப்பற்றியதாக இஸ்ரேல் தெரிவித்துவருகின்றது.
அதேசமயம், தமது தொடர் தாக்குதல்களில் இஸ்ரேலிய படையினர் ஆள் மற்றும் படைக்கலங்களை இழந்துவருவதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துவருகின்றனர்.
இஸ்ரேலிய தரப்பை பொறுத்தவரையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் நாள் முதல் தற்போது வரையில் இடம்பெற்ற மோதல்களில் தமது தரப்பில் 350 படையினரும், 59 காவல்துறையினரும், 10 புலனாய்வு அதிகாரிகளும் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் வடக்கு காசா பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் லெப். கேணல் தர அதிகாரி உட்பட பல இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டிருந்தனர். ஹமாஸ் தரப்பில் பல கட்டளை அதிகாரிகள் உட்பட பெருமளவானோர் கொல்லப்பட்டபோதும் அந்த அமைப்பினர் விபரங்களை வெளியிடவில்லை. அதேசமயம், தமது தரப்பில் 65 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், கடந்த மாதம் 17 ஆம் நாளுக்கு பின்னர் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது எதிர்ப்பு படையினர் ஏவுகணை மற்றும் ஆளில்லாத விமானங்கள் மூலம் மேற்கொண்டுவரும் தாக்குதல்களில் 56 படையினர் காயமடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேசமயம், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தாக்குதலை ஆரம்பித்துள்ள யேமனின் ஹதீஸ் படையினர் நான்கு தடவைக்கு மேல் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பல ஏவுகணைகளை சவுதி அரேபியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினர் சுட்டுவீழ்த்தியுள்ளதுடன், செங்கடலில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் கானி என்ற கப்பலில் உள்ள ஏவுகணைகள் மூலமும் யேமனின் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தி இஸ்ரேலை பாதுகாத்து வருகின்றது அமெரிக்கா.
இந்த நிலையில் காசா பகுதிகளில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இஸ்ரேலின் வான் தாக்குதல்களை நெறிப்படுத்திவந்த அமெரிக்காவின் 32 மில்லியன் டொலர்கள் பெறுமதியான எம்.கியூ-9 என்ற நவீன ஆளில்லாத தாக்குதல் மற்றும் உளவு விமானம், யேமனின் படை நிலைகள் தொடர்பான தகவல்களை அறியும் முகமாக யேமன் கடற்கரை பகுதியில் பறந்தபோது ரஸ்யாவின் Soviet 2K12 “Cube” என்ற ஏவுகணை மூலம் கடந்த புதன்கிழமை (8) யேமன் சுட்டுவீழ்த்தியுள்ளது.
மிகவும் நவீன சாதனங்களை கொண்ட இந்த விமானத்தை அண்மையில் கருங்கடல் பகுதியில் வைத்து தனது சூ-27 விமானங்களின் மூலம் ரஸ்யா வீழ்த்தியிருந்தது. அதற்கு பின்னர் அமெரிக்க இழந்த இரண்டாவது விமானம் இது.
இந்த விமானம் வீழ்ந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், அது எந்த ஆயுதத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டது என்பது குறித்து தமக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு பாவனைக்கு வந்த இந்த விமானம் 50,000 அடி உயரத்தில் பறக்கும் சக்தி கொண்டதுடன், 1,400 மைல் தூரவீச்சும் கொண்டது. தரையில் இருந்து கட்டுப்படுத்தப்படும் இந்த விமானம், செய்மதி தொடர்புகளையும் மேற்கொண்டு இலக்குகளை கண்டறியக்கூடியது.
ஈராக், சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் யேமன் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள் எல்லவற்றிற்கும் பின்னனியில் ஈரான் உள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தி வருகின்றது.
அதாவது யேமன் படையினர் ஈரானின் புதிய ஆயுதங்களையே இஸ்ரேலுக்கு எதிரான களமுனைகளில் பயன்படுத்தி அதனை பரிசோதித்து வருவதாக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Nikki Haley தெரிவித்துள்ளார்.
அதேசமயம், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரையில் 123 விமானங்களும், 7 கப்பல்களும் அமெரிக்காவின் 7,000 தொன் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு இஸ்ரேலை வந்தடைந்துள்ளன. மேலும் 80,000 படையினரை லெபனான் எல்லைகளில் குவித்துள்ள இஸ்ரேல் தனது தாக்குதல் கப்பல்களையும் மத்தியதரைக்கடலுக்கு நகர்த்தியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனப்போர் ஒரு பிராந்திய போராக மாற்றம் பெறுவதை தவிர்க்க அமெரிக்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதும், தற்போது அது அமெரிக்காவின் கையை மீறிப்போகும் சந்தர்ப்பங்களே அதிகம் உள்ளது போன்று தெரிகின்றது.