மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வறட்சி – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் சுமார் 25வீதமான பகுதியானது நீர்நிலைகளினால் சூழ்ந்த பகுதியாக கருதப்படுகின்றது.கிழக்கில் அதிகளவான பகுதியில் நீர்நிலைகள் காணப்படுகின்றபோதிலும் அதிகளவான மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கிவருகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர். படுவான்கரையினைப்பொறுத்த வரையில் வறட்சியான காலநிலை ஏற்படும் பாரியளவில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் பகுதியாக காணப்படுகின்றது.

bat11 மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வறட்சி - மட்டு.நகரான்தமிழர்களின் பண்பாடு,கலாசாரத்தினைப்பொறுத்த வரையில் அனைத்தையும் தமது அத்தியாவசிய பொருட்களாக என்றும் குறைவற்ற நிலையிலேயே வாழ்ந்துவந்தான்.

குடிநீராக இருக்கட்டும்,உணவாகயிருக்கட்டும்,உறையுலாக இருக்கட்டும் தமிழன் அனைத்திலும் தன்னிறைவடைந்தவனாகவேயிருந்தான். இந்த நாட்டில் தமிழர்கள் தங்களை தாங்களே ஆளும் நிலையிருந்தபோது அவர்களின் பொருளாதார கட்டமைப்பும் அவர்களுக்கான தேவைகளும் குறைவின்றி கிடைத்தன.

அவர்களின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்டன.அதன்காரணமாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மீன்பிடியும் கொடிகட்டிப்பறந்தன

.மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் இந்த மாவட்டத்திற்கு அந்நிய படையெடுப்பு நடைபெறுவதற்கு பிரதான காரணமாகயிருந்தது இங்குள்ள வளங்களாகும்.மட்டக்களப்பு மாவட்டத்தினை வெள்ளையர்கள் முற்றுகையிட்டு கோட்டை அமைத்து இங்கு தனி நிர்வாக அலகொன்றை ஏற்படுத்தி ஆட்சிசெய்ய காரணமாகயிருந்தது இங்கிருந்த வளங்கள்.இந்த வளங்களிலிருந்து கிடைக்கப்பெற்றவற்றை இங்கிருந்தே தமது நாடுகளுக்கு கொண்டுசென்றனர்.

அவ்வாறான வளங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் இன்று ஏனையவர்களிடம் கையேந்தும் நிலைமையினை காணமுடிகின்றது.குடிநீருக்கு கூட ஏனையவர்களிடம் கையேந்தவேண்டிய நிலைமையானது இன்று மட்டக்களப்பு படுவான்கரை பிரதேச மக்களுக்கு வந்திருக்கின்றது.

bat5 மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வறட்சி - மட்டு.நகரான்படுவான்கரையினைப்பொறுத்த வரையில் யுதத்ததிற்கு முன்னரான காலப்பகுதியில் இயற்கை வளம் கொண்ட பகுதியாக இருந்துவந்தது.கிழக்கு தமிழீழத்தினை தமிழர்கள் ஆட்சிசெய்தபோது அதன் தலை நகரங்களாக அதிகளவில் படுவான்கரையே இருந்துவந்தது. மட்டக்களப்பு வாவியானது மட்டக்களப்பு மாவட்டத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளதுடன் அது மட்டக்களப்பு பிரதேசத்தினை இரு பிரிவுகளாக பிரிக்கின்றது.

வாவியின் மேற்குப் பகுதியிலிள்ள நிலப்பரப்பே படுவான்கரை பிரதேசம் என அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்று அழைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். அதனால் இப்பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அதிகமாக விவசாயத்தினையே தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இங்கு அதிகமாக நெல் பயிரிடப்படுகிறது. மேலும் நிலக்கடலை, சோளம், பயறு போன்ற தானியங்களும், பல மரக்கறி வகைகளும் இப்பிரதேசத்தில் பயிரிடப்படுகின்றன.

படுவான்கரை பிரதேசம் வாவியினால் எல்லையிடப்பட்டுள்ளதுடன், பல ஆறுகளும் ஏரிகளும் படுவான்கரை பிரதேசத்தினூடாக வந்து வாவியில் கலப்பதால் விவசாயத்திற்கு அடுத்ததாக இங்கு மீன்பிடித்தல் கைத்தொழில் கணிசமான அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

.அத்துடன் படுவான்கரையில் அதிகளவான நிலம் காணப்படுவதன் காரணமாக கால்நடை வளர்ப்பும் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றது.பண்டைய காலத்தில் போர் வீரர்கள் தங்கும் பகுதியாக படுவான்கரை பகுதியே இருந்தது.
அத்துடன் படுவான்ரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுளங்கள் இருந்திருக்கின்றன.

மழை காலங்களில் இக்குளங்களில் நீர் சேகரிக்கப்பட்டு வறட்சியான காலப்பகுதியில் அவை பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.ஆனால் இக்குளங்கள் பல கைவிடப்பட்டும் பல குளங்கள் அழிக்கப்பட்டும் உள்ளன.இதன்காரணமாக மழைகாலங்களில் மழை நீர் வெறுமனே வெள்ள நீராக கடலுடன் கலக்கும் நிலைமையே காணப்படுகின்றது.

படுவாகரை பகுதியை எடுத்துக்கொண்டால் போரதீவுப்பற்றில் நவகிரிகுளமும் வவுணதீவில் உன்னிச்சைகுளமும் ஏறாவூர்ப்பற்றில் கித்துள்,உறுகாமம்குளங்களும் வாகனேரியில் வாகனேரி குளமுமே இன்று ஓரளவு நீர் சேமித்துவைக்கப்படுகின்றது.

bat3 மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வறட்சி - மட்டு.நகரான்இதன்மூலம் ஓரளவ விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதிலும் உன்னிச்சைகுளத்தின் மூலம் மட்டுமே மக்களுக்கான குடிநீர் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இந்த குடிநீர் திட்டமானது மட்டக்களப்பின் எழுவான்கரை பகுதியை நோக்காக கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.ஆனால் படுவான்கரை மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையென்பது கவலைக்குரியதாகவுள்ளது.

ஆண்டுதோறும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலகப்பிரிவுகள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகின்றது. போரதீவுப்பற்று,மண்முனை மேற்கு,மண்முனை தென்மேற்கு,கோறளைப்பற்று மேற்கு,கோறளைப்பற்று மத்தி,ஏறாவூர்ப்பற்று,

கோறளைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகள் தொடர்ச்சியாக வறட்சியான காலப்பகுதியில் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் கஸ்டங்களை எதிர்கொள்ளும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேச செயலகப்பிரிவுகளும் படுவான்கரை பகுதியிலேயே வருகின்றது.

அனைத்து வளங்களும் கொண்ட படுவான்கரை பகுதியில் ஏன் இந்த நிலைமையென்பது கவலைக்கிடமானதாகவேயுள்ளது.இப்பகுதியில் உள்ள 10ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த நீர் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த காலங்களில் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்தபோதிலும் அரசாங்கத்தின் அசிரத்தை காரணமாக அவை செயற்படுத்தப்படாமல் சென்றது.

குறிப்பாக கித்துள்,உறுகாமம் இரு குளங்களையும் இணைத்து புனரமைத்து அதன் மூலம் குடிநீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கும் விவசாய நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டபோதிலும் எவையும் நடைபெறவில்லை.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுகுளங்கள் புனரமைக்கப்பட்டு அவை மழை நீரை சேகரிக்கும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமானால் எதிர்காலத்தில் குடிநீர் பிரச்சினைகளை ஒரளவு தீர்க்கமுடியும்.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மணல் அகழ்வுகளும் இதற்கான காரணங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் உள்ள ஆறுகளை அண்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மணல் அகழ்வுகள் காரணமாக ஆறுகள் ஆளப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப்பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் எதிர்கொள்ளப்பட்டுள்ளதுடன் கிணற்று நீரும் வெயில்காலங்களில் விரைவிலேயே வற்றிவிடும் நிலைமையினையும் காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திலுள்ள உன்னிச்சைகுளத்திலிருந்தே மட்;டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் கஸ்டங்களையே எதிர்நோக்கிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சி நிலையுடனான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடியமடு, பாவக்கொடிசேனை உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரின்றி தாம் தினமும் சிரமப்படுவதாகவும், குடிநீருக்காக மிக நீண்ட தூரம் பயணித்து குடிநீரைப் பெற்றுக் கொள்ள வேண்டி துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேசமாகவும் கடந்தகால யுத்த பாதிப்புக்களை எதிர்கொண்ட அம்மக்கள் தினமும் அதிகாலை வேளையில் குடிநீர் எடுப்பதற்காக மிக நீண்ட தூரம் கால் நடையாகச் செல்லும்போது காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உட்படுவதாகவும், தொடர்ந்து அச்சத்துடன் பயணித்து குடிநீரைப் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தமது பிள்ளைகள் உரிய நேரத்துக்கு பாடசாலைக்கு செல்வதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தொடரும் வறட்சி நிலைமை காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் 2000க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் பிரதான தொழிலாக காணப்படும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பும், என்பன இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கால்நடைகளுக்குரிய பச்சைப் புற்கள் தற்போது கருகிய நிலையில் காணப்படுவதாகவும் கால்நடைகள் குடிநீர் இன்றி அலைந்து திரிவதாகவும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான வறட்சி நிலைமைகளானது யுத்ததின் பின்னரே இப்பகுதி மக்கள் அதிகளவில் எதிர்கொள்கின்றனர்.படுவான்கரையின் இயற்கை வளங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன.காடுகள் அழிக்கப்பட்டன.

பெரியளவிலான மரங்கள் அழிக்கப்பட்டன.இதன்காரணமாக படுவான்கரையில் வறட்சியின் கோரத்தாண்டவம் நிலவுகின்றது.இதனை போக்குவதற்கு பசுமை வேலைத்திட்டங்களும் சிறிய குளங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கவேண்டும்.