மட்டக்களப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய காவல்துறை முயற்சி

387 Views

சர்வதேசத்திடம் நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைது செய்வதற்கும் மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

சர்வதேசத்திடம் நீதிகோரி சுழற்சி முறையில் முன்னெடுக்கப் பட்டு வரும் போராட்டம் 13வது நாளாகவும் இன்றும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

IMG 20210315 WA0106 மட்டக்களப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய காவல்துறை முயற்சி

இந்த நிலையில் இன்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகை தந்த பெருமளவு காவல்துறையினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்துசெல்லுமாறும் இல்லாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு தலைமைய காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினரும்  இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற தடையுத்தரவு கட்டளை உள்ளதன் காரணமாக குறித்த பகுதியில் போராட முடியாது எனவும் கொரோனா நடைமுறைகளை மீறிய வகையில் போராட்டம் நடைபெறுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் போராட்டம் நடாத்த முடியாது என்றும் அதற்கான நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் மீறி போராட்டம் நடாத்தினால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் காவல்துறையினர்  எச்சரித்துள்ளனர்.

நாங்கள் அமைதியான முறையில் போராடும்போது காவல்துறையினர் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இதுதான் இன்றைய இலங்கையின் நிலமையெனவும் இதனை சர்வதேச சமூகம் சிந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கவேண்டும் எனவும் இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களளால்  வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

IMG 20210315 WA0102 மட்டக்களப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய காவல்துறை முயற்சி

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டிய கடுமையான எதிர்ப்பு காரணமாக காவல்துறையினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நீதிமன்ற தடையுத்தரவு போராட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்ற போதிலும் தங்களிடம் எந்த தடையுத்தரவும் காண்பிக்கப்படவில்லையென போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேநேரம் இன்று மாலை அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு காவல்துறையினர் ஏற்படுத்தி வரும் இடையூறுகளுக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

IMG 20210315 WA0103 மட்டக்களப்பு: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய காவல்துறை முயற்சி

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமக்கான நீதியைக்கோரி அமைதியான முறையிலும் சாத்வீகமான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துவருவோர் மீது அடாவடித்தனங்களையும் போலியான குற்றச்சாட்டுகளையும் காவல்துறையினர் முன்வைப்பதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply