மசோதாவை நிறைவேற்றி விட்டு இப்போது கருத்துக் கேட்பது தவறான அணுகுமுறை – பழ.நெடுமாறன்

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்றி விட்டு இப்போது கருத்துக் கேட்பது தவறான அணுகுமுறை என்று தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய முன்னணியின் 40ஆவது ஆண்டு விழா மாநாடு மதுரையில் நடைபெறுகின்றது. தமிழகத்தில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெற்றுள்ளது. குடியுரிமை மசோதாவிற்கு எதிராக அனைத்து மாநிலங்களில் எதிர்ப்பு உள்ளது. இஸ்லாமியர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கிடைக்காதது இந்தியாவின் அடிப்படை அரசியல் சட்டத்திற்கு எதிரானது. குடியுரிமை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். ஈழத் தமிழர் அகதிகளாக வந்துள்ளதற்கும், பிற நாடுகளிலிருந்து அகதிகள் வந்துள்ளதற்கும் வேறுபாடு உண்டு.

ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். 70 நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளளது. தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம் சிறை முகாம் போல உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது அவர்களை ஐ.நா.ஆணையகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்தியாவிற்கு ஹிந்துஸ்தான் என்கிற பெயரை சூட்ட மத்திய அரசு முயல்கின்றது. பாஜக ஒரே மதம், ஒரே நாடு என்கின்ற இலக்கில் செயற்படுகின்றது. பாஜக ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வார்கள் எனத் தெரியாமல் பலபேர் பாஜகவோடு கூட்டுச் சேர்ந்து ஆட்சியில் அமர வைத்தார்கள்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் 1000 கோடியும், பாஜக ஆட்சிக் காலத்தில் 1000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஈழத் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இலங்கையின் மத்திய அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் சிங்களவர்கள் குடியிருந்து வருகின்றனர். குடியுரிமை மசோதாவை நிறைவேற்றி விட்டு இப்போது மக்களிடம் கருத்துக் கேட்பது தவறான அணுகுமுறை எனத் தெரிவித்தார்.