மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

04 1 மக்களை நினைவு கூர்ந்தவர்கள் அநாகரீகமான முறையில் கைது - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிப்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கண்டிக்கின்றோம்.

உரிமையை வேண்டி போராடிய ஒரு இனத்தின் மீது, சர்வதேச நாடுகளை தவறாக வழி நடாத்தி இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனவழிப்பினால், இறுதி எட்டு மாதங்களில் 146679 க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டனர்.

அந்தவகையில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை கொண்டு கொன்றொழிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்கள், அப்பாவி பொதுமக்களுக்கு 15 ஆண்டுகள் கழிந்தும் நீதி வழங்கப்படாத நிலையில் தமிழரின் உரிமைகள் இலங்கை அரசினாலும் அதன் ஆதரவில் இருக்கும் பெரும்பான்மை சமூகத்தினாலும் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில், இலங்கை அரசினாலும் அரச படைகளாலும் கொன்றுகுவிக்கப்பட்ட எமது மக்களை நினைவுகூறும் உரிமையிலும் இலங்கை அரசாங்கம் கை வைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூறும் முகமாக ஞாயிற்றுக்கிழமை (12.05.2024) திருகோணமலை சம்பூர், சேனையூர் புவனகணபதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா(வயது 40), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது40), பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43) ஆகியோருடன் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள கலைப்பிரிவு மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதனை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைக்கூட மறுக்கும் இலங்கை அரசை சர்வதேசம் கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அழுத்தம் வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.