மக்களின் உயிரை பாதுகாக்க அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் – அரசுக்கு ரணில் ஆலோசனை

பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்யலாம் ஆனால் உயிர்களிற்கு ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கின்றார். 

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“எமது நாட்டு மருத்துவ நிபுணர்கள் பலருடன் நடத்திய ஆலோசனையின் பின்னர் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அடுத்த சில வாரங்களுக்கு நாட்டில் வேகமாகப் பரவும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது” என ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மற்றொரு விடயத்தையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். எமது நாட்டில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இவ்வருடம் இறுதி வரையில் செல்லலாம். அல்லது அடுத்த வருடமும் செல்லலாம். அதுவரையில் இந்த நாட்டு மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்” எனச் சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்கிரமசிங்க, “அதனால், மருத்துவ ஆலோசனையின்படி அரசாங்கம் செயற்பட வேண்டும். நாட்டை முடக்குமாறு மருத்துவர்கள் சொன்னால், அதனை அரசாங்கம் செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் உயிர்களை காப்பாற்றுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ள அவர், “ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சரிசெய்ய முடியும் ஆனால் உயிர்களிற்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவுவது ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்திற்கு பாரிய அடியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி உயிர்களை காப்பாற்றுவது அவசியம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.