மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழர் நிலங்கள் ; வடக்கு ஆளுநர் கள ஆய்வு

645 Views

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளின் பிரச்சனை தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று(03) நடைபெற்றது.

அதன் பின்னர் பிரச்சினை காணப்படும் குறித்த பிரதேசத்திற்கும் கண்காணிப்பு விஜயமொன்றை ஆளுநர் மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தின் போது 1984இற்கு முன்னர் இந்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் போர் காரணமாக நீண்டகாலம் இடம்பெயர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் மகாவலி எல் வலயம் ஏற்படுத்தப்பட்டு பின்னர் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டதனால் 2012 ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் தங்கள் காணிகளுக்கு செல்லும்போது அக்காணிகளை பயன்படுத்தமுடியாத நிலை காணப்பட்டதாகவும், அக்காணிகளில் சில காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும் குறித்த பிரதேச மக்களால் வழங்கப்பட்ட முறையீட்டை தொடர்ந்து இந்த கூட்டம் ஆளுநர் தலைமையில் கூட்டப்பட்டது.

இதுதொடர்பில் ஆளுநரும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகளும் நேரடியாக சிவந்தாமரைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்து அப்பகுதி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

பொதுமக்களின் காணிகள் மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதன் காரணமாகவும் அவற்றில் சில காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதனாலும் அவற்றிற்கு பதிலாக மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற அப்பிரதேச மக்களின் கோரிக்கை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் எல் வலயத்தில் இருந்தும் மக்களுக்கு கொடுக்கப்படாத பொதுமக்களின் காணிகளை மீண்டும் வர்த்தமானி மீளறிவித்தலின் மூலம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மகாவலி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இணைந்து கரைத்துறைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஊடாக விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மகாவலி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடனும் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

 

Leave a Reply