பௌத்தபிக்குகள் நீராவியடியில் நீதித்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளனர்- (முன்னாள் கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளர்

976 Views

நீராவியடியில் நீதிமன்றத் தீர்ப்பினையும் மீறி பௌத்த பிக்கு ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமையானது நீதித்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயலாகும், இந்h நாட்டில் பௌத்தபிக்குகளும் ஒரு சட்டம் சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமாகவே இருக்கின்றது. என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

நேற்றைய தினம் மண்டூர் கணேசபுரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்ற தியாகதீபம் திலீபனின் 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது போராட்டங்கள் ஆரம்பத்தில் அகிம்சைப் போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டே பின்னர் ஆயுதப் போராட்டத்திற்கு வந்தது. இருப்பினும் அந்த ஆயுதப் போராட்டத்தினுள்ளும் அகிம்சையைக் காண்பித்தவர் தியாகதீபம் திலிபன். ஆனால் எமது அகிம்சைப் போராட்டம் உட்பட எதனையும் சர்வதேசமும் சரி இலங்கை அரசும் சரி கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்த நாட்டு ஆட்சியாளர்களிடம் எதனையும் நாங்கள் பெற முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நாட்டில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.

அண்மையில் எமது முல்லைத்தீவுப் பிரதேசத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் மீறி பௌத்தபிக்கு ஒருவரின் சடலம் தகனம் செய்யப்பட்டது. இது மிகவும் பாரிய குற்றச் செயலாகும் என்பதோடு ஒரு மதத்தின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் செயலாகவுமே பார்க்கப்படுகின்றது.

இதெற்கெல்லாம் முக்கிய கார்த்தாவாக இருந்தவர் ஞானசார தேரர் அவர்கள். இதற்கு முன்னரும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திலேயே தண்டனை அனுபவித்து வந்த இவரை ஜனாதிபதி அவர்கள்தான் பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார். அவ்வாறு விடுதலை பெற்றவர் மீண்டும் இவ்வாறானதொரு நீதிமன்றத்தின் தீர்ப்பினை அவமதிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுளார்.

ஒரு தமிழரின் உடலை நீதிமன்றத் தீர்ப்பினை மீறி புதைத்தமைக்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை சிறையில் அடைக்க முடியும் என்றால் இதேபோன்றதோரு நீதிமன்றத் தீர்ப்பினை மீறிச் செயற்பட்ட பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை இந்த அரசும் நீதித்துறையும் கண்டும் காணாமல் இருக்கப் போகின்றதா? இந்த நாட்டில் பௌத்த துறவிகளுக்கு ஒரு சட்டம் சாதாரண பொது மக்களுக்கு ஒரு சட்டமா?

அத்துடன் இவ்வாறன பௌத்தபிக்குகளின் செயற்பாட்டினால் தற்போது சட்டத்தரணிகள் உட்பட சாதாரண பொது மக்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது. நீராவியடியில் ஒரு சட்டத்தரணி பௌத்தபிக்குகளால் தாக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டோம். இவ்வாறான பௌத்த மேலாதிக்கவாதம் தடுக்கப்படல் வேண்டும்.

இந்த நாட்டில் ஆட்சியமைத்த அரச தலைவர்களும் பேரினவாதக் கட்சிகளின் தலைவர்களும் பௌத்த மதத்தினை முறையாகக் கடைப்பிடித்திருப்பார்களானால் ஆயுதப் போராட்டம் ஒன்று ஏற்பட்டிருக்காது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1985ம் ஆண்டு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தமையை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.


.

Leave a Reply