1990 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடப்பெயர்வுகளைச் சந்தித்த மக்கள் வவுனியாவில் பூந்தோட்டம், அடப்பங்குளம், சிதம்பரபுரம் போன்ற பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாம்களிலும், இந்தியாவிலும் அகதிகளாக வாழ்ந்தனர்.
அவர்களின் ஒரு தொகுதியினருக்கு மதவாச்சியையும், வவுனியாவையும் இணைக்கும் பிரதான வீதியில் வவுனியா நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீற்றர் தொலைவில் செட்டிகுளம் பிரதேச செயலகர் பிரிவில் 2000ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டு 100 குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணி வழங்கப்பட்டு புதிய குடியேற்றம் உருவாக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு மெனிக்பாம் படிவம் 1 படிவம் 2 என இரண்டு பகுதிகள் உருவாக்கப்பட்டு, 300 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. பின் 2006 ஆம் ஆண்டு 100குடும்பங்களும், 2012ஆண்டு 60 குடும்பங்களும் குடியமர்த்தப்பட்டன.
தற்போது உப குடும்பங்களென அனைத்தையும் சேர்த்து 1000இற்கு மேற்பட்ட குடும்பங்கள் செட்டிகுளம் மெனிக்பாம் கிராமத்தில் வசித்து வருகின்றன.
நாட்டில் சிதறிக்கிடந்த பல சமூகங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் குடியமர்த்தப்பட்டமையால் பல்வேறு வாழ்க்கை முறைகள் பழக்கவழக்கங்களென ஒரு சீரழிந்த கிராமமாகவும், கள்ளச்சாராய உற்பத்தி, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களும், இளவயதுத் திருமணம், பாலியல் துஸ்பிரயோகமென பல சமூகத்துக்கு முரணான வன்முறைப் பிரதேசமாக செட்டிகுளம் மெனிக்பாம் கிராமம் அமையப்பெற்றிருந்தது.
2009ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதி ஆயுதவழிப் போரில் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் ஒட்டுமொத்தமாக செட்டிகுளம் மெனிக்பாம் கிராமத்தின் பிரதான வீதிக்கு முன் புறம் மல்வத்து ஓயா நதிக்கரையில் காடுகள் வெட்டப்பட்டு தற்காலிக முகாம் அமைக்கப்பட்டு முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அக் காலப்பகுதியில் நாட்டில் அரச சார்பற்ற பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவாகி மக்கள் சேவையில் ஈடுபட்டனர். அந்த நிறுவனங்கள் வெறுமனே உணவுத் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் மக்களின் உளரீதியான பிரச்சனைகளை குறைக்கும் வகையில் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தில் மெனிக்பாம் கிராமத்திலும் மேலும் ஒரு தொகுதி மக்கள் குடியமர்த்தப்பட்டனர். மக்கள் சார்ந்து சேவைசெய்த பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மெனிக்பாம் கிராம மக்களையும் வழிப்படுத்தினர். அவர்களின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக குழுக்களாகவும் தனித்தனியாகவும் சுய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்தனர்.
பல சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் கிராமமாக இருக்கும் மெனிக்பாம் கிராமத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதென்பது அரச நிறுவனங்களாலேயே முடியாத காரியமாகி விட்டது.
இந்நிலையில் கடந்த வருடம் நாட்டுக்குள் ஊடுருவிய கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டது. மக்கள் தொழில் வாய்பின்றி அன்றாட உணவுத் தேவைக்கே சிரமப்பட்டனர், இந் நிலையில் வீடுகளுக்குள் முடக்கப்பட்ட மக்கள் தமக்குத் தேவையான உற்பத்திப் பொருட்களை தாமே உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர்.
வீட்டுத்தோட்டங்களில் அதிக நாட்டம் செலுத்தினர். வீடுகளில் பெண்களும் சிறு தோட்டங்கள் செய்வதற்கு ஆர்வம் காட்டினர். கிராமத்தில் போதைப் பொருட்களின் பாவனை சற்று குறைய ஆரம்பித்துள்ளது. வீட்டுத்தோட்டங்களில் கச்சான், மிளகாய், வெள்ளரி, வெங்காயம், பயிற்றை, பப்பாசி, போன்ற பல பயிர்களை உற்பத்தி செய்து தமக்கு தேவையான வருமானத்தை ஈட்ட ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் கெக்கெரிகாய் உற்பத்தியை செட்டிகுளம் மெனிக்பாம் மக்கள் ஆரம்பித்துள்ளனர். பெண்தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தொழில்வாய்பின்றி இருக்கும் இளைஞர்களும் சிறுதோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் சிறுதோட்டப் பயிர்ச் செய்கையில் ஆர்வம் காட்டிவரும் மக்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள். தமது இயல்பிற்கு ஏற்றவகையில் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாம் தொடர்ச்சியாக தோட்டங்கள் செய்வதற்கு நீர்பாசனம் என்பது சவாலான விடயமாக உள்ளது. கோடை காலங்களில் கிணற்று நீர்மட்டம் குறைவடைந்து செல்கின்றது. இதனால் தமது பயிர்ச் செய்கைக்கு சொட்டு நீர்பாசனத்துக்கான வசதிகளும், அதேவேளை அரச மானிய விலையில் பசளைகளையும் வழங்கினால் தமக்கு தேவை யான உற்பத்திகளை தாமே உற்பத்திசெய்து தன்னிறைவும், தமக்குத் தாமே முதலாளிகளாக வாழ முடியுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வடக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கலந்துரையாடல் ஒன்று அமைச்சரின் பங்கேற்புடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 18.03.2021 அன்று நடைபெற்றது. இதன்போது வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 3314 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டதிற்கு 1352 மில்லிய னும், முல்லைத்தீவிற்கு 1699 மில்லியனும், மன்னார் மாவட்டத்திற்கு 262 மில்லியனுமாக பிரித்து வழங்கியுள்ளோமெனத் தெரிவித்திருந்தார்.
சிறீலங்கா அரசினால் விவசாயத்துக்காக பாரியளவு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன. தென் பகுதியில் வாழும் சிங்கள மக்களுக்கு அதிகளவில் பகிரப்பட்டபின் வடபகுதிகளுக்கும் ஒரு பகுதி நிதி ஒதுக்கப்பட்டாலும், அரச அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்கள் அவற்றை சரியாகப் பயன்படுத்தவதில்லையென மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
விவசாயத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்ட குறித்த நிதி கிராமப்புறங்களில் வாழும் உண்மையான விவசாயிகளுக்கும் முயற்சியாளர்களுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே..
இவ் விடையம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கிராம மக்களின் நலன் களில் அக்கறை செலுத்த வேண்டுமென்பதே இலக்கு ஊடகத்தின் எதிர்பார்ப்பாகும்.