போரில் தந்தையை இழந்த மாணவி மருத்துவ உபகரணம் கண்டுபிடிப்பு – வீடியோ இணைப்பு

வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

வவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் 12 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவி இரத்தப்பரிசோதனைக்காக இரத்தத்தினை தானியங்கி முறையில் நோயாளர்களிடம் பெறும் ரோபோ இயந்திரத்தினை கண்டு பிடித்துள்ளார்.

மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் பங்கேற்பதற்காக பாடசாலை அதிபர் திருமதி பி.கமலேஸ்வரியின் ஒத்துழைப்புடனும் பாடசாலை ஆசிரியர்களின் துணையுடன் கழிவுப்பொருட்களின் ஊடாக ரேபோ ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் குறித்த மாணவி ஈடுபட்டிருந்தார்.

யுத்தம் காரணமாக 2009 ஆம் ஆண்டு களமுனையில தனது தந்தையை இழந்த இம் மாணவி தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தபோதிலும் விஞ்ஞான தொழில்நுட்ப பாடத்தினை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுவருகின்றார்.
இந் நிலையிலேயே மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க ஆர்வம் கொண்டு இக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட போதிலும் போதியளவு நிதிவசதிகள் இல்லாமையினால் அதிபரினூடாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சிறு தொகை பணத்தினை பெற்று தனது முயற்சியை ஆரம்பித்திருந்தார்.

இதன்போது கழிவுப்பொருட்கள் என பயன்படுத்தாது எறியப்பட்ட பொருட்களையும் தனது கண்டுபிடிப்புக்கு மாணவி பயன்படுத்தியிருந்தார்.

இந் நிலையில் குறித்த மாணவி இரத்தபரிசோதனைக்காக இரத்தத்தினை நோயாளியிடம் இருந்து பெறுவதற்கான தானியங்கி முறைமையை (AUTO NEEDELINJECTOR) கண்டுபிடித்தார்.
இக் கண்டுபிடிப்பினை மாகாண மட்டத்தில் இடம்பெற்ற ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்க வைத்ததன் ஊடாக மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட இம் மாணவி தேசிய மட்டத்தில் இடம்பெறும் போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.

குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
ரோகிதா புஸ்பதேவன் மாகாண மட்டத்தில் ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்பதற்காக ரோபோ ஒன்றினை செய்ய விரும்பமுள்ளதாக தெரிவித்திருந்தார். அத்துடன் கழிவுப்பொருட்களுடாக அதனை செய்யவுள்ளதாகவும் சில பொருட்களை வாங்க வேண்டியுள்ளதனால் சிறுதொகை நிதி தேவை எனவும் தெரிவித்தார்.

எனவே நிச்சயமாக அதனை செய்யுமாறு நான் தெரிவித்ததுடன் நிதியுதவியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக பெற்று தரலாம் என தெரிவித்தேன். அதன் பிரகாரம் நான்காயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை மாத்திரம் வெளியில் வாங்கியிருந்தார். மற்றைய பொருட்கள் எல்லாவற்றையும் கழிவுப்பொட்களில் இருந்து பெற்றுக்கொண்டார்.
அந்த மாணவிக்கும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர் குழாமிற்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

இந்த மாணவி ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயற்பட்டு பெண்களாலும் முடியும் என வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் மாகாண மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றமை வவுனியா மாவட்டத்திற்கும் எமது வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெருமையைத்தேடித்தந்துள்ளார்.

அத்துடன் இந்த மாணவி குறித்த கண்டுபிடிப்பை மேலும் மேருகூட்டி அதனை அனைவரும் பயன்படுத்தும் விதமாக உருவாக்குதவற்கு சில பொருட்களை வெளிநாட்டில் இருந்து பெற வேண்டியுள்ளது. அதனை குறித்த மாணவி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் குறித்த கண்டுபிடிப்பை பதிவு செய்வதற்கான முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply