போரின் பின்னரான மன அழுத்தம் – முன்னாள் போராளி தற்கொலை

மட்டக்களப்பு, ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் மாவீரர் தினமான நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு காளிகோயில் வீதியில் உள்ள வீடு ஒன்றின் பின்புற பகுதியில் இருந்தே குறித்த சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

வன்னியில் விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பிரிவின் காணி பிரிவில் கடமையாற்றிய கானகன் என இயக்கத்தில் அழைக்கப்படும் சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இறுதிப்போர் வரையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வன்னியில் செயற்பட்ட இவர் பின்னர் குடும்ப வாழ்வில் இணைந்து இயல்பு வாழ்கையில் இருந்துவந்தார்.

இந்த நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆரையம்பதிக்கு வந்து உறவினர் வீட்டில் வசித்துவந்த அவர் வறுமை நிலை மற்றும் இறுதி யுத்தம் தொடர்பில் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவருக்கு சிறு வயதில் இரண்டு பிள்ளைகளும் வறுமை நிலையில் வன்னியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை குறித்த விடுதலைப்புலி போராளியின் உடலம் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply