மாந்தை – வெள்ளாங்குளம் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட மரமுந்திரிகை காணிகளை சிறிலங்காவின் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் கையாடல் செய்ய முற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அறிவித்துள்ளது.
இந்தக் காணிகளை போரால் கணவனை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்குவது என எட்டப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெளிவுபடுத்தினார்.
1994இல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், 2008இற்குப் பின்னர் இவை இராணுவத்தினர் வசம் இருந்ததையும் சபையினர் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். குறித்த 275 ஏக்கர் காணியை போரால் கணவனை இழந்த பெண்கள், மற்றும் முன்னாள் போராளிகளுக்கு பகிர்ந்தளித்துவிட்டு, வன இலாகா திணைக்கள அதிகாரத்தின் கீழ் இருக்கும் காணிகளை மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறும் கேட்டுள்ளார்.