போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் – மட்டு.நகரான்

கிழக்கில் இன்று பல்வேறு அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்கள் தமது இருப்பினை பாதுகாப்பதற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வி இன்று பலமாக எழுந்துள்ளது.கிழக்கில் இன்று பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புகள்,பௌத்தமயமாக்கல் என்பனவற்றை தடுத்து நிறுத்தமுடியாத வகையில் தமிழ் தேசியம் அல்லாடி நிற்பதை காணமுடிகின்றது.

batti monk 161116 seithy 3 போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் - மட்டு.நகரான்இவ்வாறான நிலையில் கிழக்கில் போராட்டங்களை மழுங்கடிக்கவும் போராட்ட அமைப்புகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி தமிழர்களின் போராட்ட கட்டமைப்பினை சிதைத்து தமிழர்கள் தமக்கான உரிமையினை போராட்டம் மூலம் நிலைநாட்டுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் பலமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமது பகுதியை தாங்களே ஆட்சிசெய்யவும் தமக்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் தமிழர்கள் கடந்த 60வருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் போராடிவருகின்றனர்.

அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தமது போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நிலையில் அவ்வாறான போராட்டங்களை ஒடுக்குவதற்கு அல்லது தீர்ந்துபோகச்செய்வதற்கு தொடர்ச்சியான செயற்பாடுகள் சிங்கள அரசுகள் முன்னெடுத்துவருகின்றன.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு எதிராக தமிழர்கள் தொடர்ந்து போராடவேண்டிய நிலையேற்பட்டது.
யுத்த காலத்தின்போது பாதுகாக்கப்பட்ட கிழக்கின் பல பகுதிகள் இன்று பேரினவாதிகளினால் இலகுவாக அபகரிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.இன்று நில ஆக்கிரமிப்பு என்பது பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்பட்டாலும் கிழக்கினைப்பொறுத்த வரையில் இன்று பல்வேறு வழிகள் இந்த நில ஆக்கிரமிப்பிற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கிழக்கில் இனியொருபோதும் தமிழர்கள் தமது பகுதிகளில் இருப்பினை தக்கவைக்கமுடியாது என்பதை பறைசாற்றுகின்றது.

இன்று கிழக்கு மாகாணத்தில் தமது இருப்பிற்காக போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையினை இன்று காணமுடிகின்றது.இவ்வாறான போராட்டங்கள் என்பது தமிழர் பகுதிகளில் முன்னெடுப்பதானது இருப்பினை பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அமையும்.

Batti 30 8 2020 3 போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் - மட்டு.நகரான்கடந்த காலத்தில் மஹாவலி என்னும் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் வளமாக காணிகளை கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுவந்தன.இன்றும் கிழக்கில் இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு அபகரிப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இலங்கையில் மஹாவலி அபிவிருத்திட்டம் என்ற பெயரில் உலர்வலயப் பகுதிகளின் நீர்ப்பாசனம் மற்றும் விவசாய அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பலநோக்கு அபிவிருத்தித் திட்டமாகும். ஆனால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இதன்மூலம் இனப்பரம்பலைச் சிதைப்பதே முக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதுறுஓயாவிலிருந்து கிடைக்கும் நீரை வாய்க்கால் வழியாகக் கொண்டு வந்து மகாவலி பி வலயத்திட்டத்தை அதிகார சபை தயாரித்து வருகின்றது.

 

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்போகும் விளைவுகளாகப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

  1. மகாவலி அதிகார சபையின் கீழ் மட்டக்களப்பின் கோறளைப்பற்று தெற்கு, ஏறாவூர் பற்று பிரதேசத்தின் விவசாய நிலங்கள் கட்டுப்பாட்டிற்குள்  அடங்கிவிடும். அவ்வாறு அமைந்தால் அந்த நிலங்களை

2 ஏக்கர் காணித்திட்டமாகப் பிரித்து அங்கு விரும்பியர்களுக்கு அதிகார சபை கொடுக்கலாம்.

  1. குடியேற்றம் எனும்போது இலங்கையின் இனவிகிதாசாரப்படி 75 சதவீத காணிகள் சிங்களவர்களுக்கும், 15 சதவீத காணிகள் தமிழர்களுக்கும், 10 சதவீத காணிகள் முஸ்லிம்களுக்கும் வழங்கபப்படும். எடுத்துக்காட்டாக 10000 குடும்பங்கள் குடியேற்றப்படுவதாக எடுத்துக்கொண்டால்  7500 குடும்பங்கள் சிங்களவர்களும், 1500 குடும்பங்கள் தமிழர்களும், 1000 குடும்பங்கள் முஸ்லிம்களும் குடியமர்த்தப்படுவுள்ளார்கள்.
  2. குடியமர்த்தப்படுபவர்களுக்கான நகரம், பாடசாலை, மதவழிபாட்டு நிலையங்கள் விகாரைகள் என்பனவும் இங்கு அமைக்கப்படலாம்.
  3. மட்டக்களப்பில் தற்போது இப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் காணிகள் பறிக்க்பபட்டு புதிய திட்டத்தின்படி 2 ஏக்கர் காணி மாத்திரமே வழங்கப்படும். இதன்மூலம் பல விவசாயிகளின் பரம்பரைக் காணிகள் இல்லாது மட்டக்களப்பு தமிழர்கள் ஏழ்மை நிலைக்கு செல்லவேண்டிய நிலைக்கு உள்ளாக்குவார்கள்.

மட்டக்களப்பின் அரசுடன் இருக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரின் தலைமையில் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மகாவலி அதிகாரசபை திரைமறைவில் காய்களை நகர்த்தி வருகின்றது. பொதுமக்களும், விவசாய அமைப்புகளும், தமிழ்த்தேசிய அரசியல் வாதிகளும் இதனைக் கருத்திலெடுக்கப்படாவிட்டால், மட்டக்களப்பில் தமிழர் அரசியல் குழிதோண்டப்படும்.அவ்வாறான நிலைமையேற்படுமானால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இருப்பு என்பது இல்லாமல்செய்யப்படும்.

இவ்வாறான நிலைகளிலேயே கிழக்கில் வெகுஜனப்போராட்டங்களை அடக்குவதற்கும் அவ்வாறான போராட்டங்கள் ஏற்படும்போது அதற்கு எதிரான சக்திகளை உருவாக்குவதுமான செயற்பாடுகள் மற்றும் போராட்ட அமைப்புகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தல்,கிழக்கில் தற்போது பரவலாக முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பில் தற்போது பெரும் பிரச்சினையாக இருப்பது மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியேற்றம் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடாகும்.இந்த செயற்பாடுகள் பல்வேறு வகையிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இதுவரையில் மறைமுகமாக இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளுக்கு பின்னணியாக செயற்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் இன்று வெளிப்படையாகவே பௌத்தமயமாக்கலைசெய்யும் நிலைக்கு சென்றுள்ளார்.அப்பகுதியில் இராணுவ முகாம்கள் பலமானதாக உள்ள நிலையிலும் மேய்ச்சல் தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்படுகின்றது.இந்த துப்பாக்கிசூடு என்பது அப்பகுதியில் உள்ள அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களாலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

Batti paddy2 போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் - மட்டு.நகரான்இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும்போதும் மேய்ச்சல் தரை பகுதியில் சிங்களவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துவருகின்றன.
இவ்வாறான நிலையில் கடந்த 37நாட்களையும் தாண்டிய வகையில் மழை.வெயில் என்று பாராது மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் போராட்டத்தினை முன்னெடுத்துவருகி;ன்றனர். இவ்வாறான நிலையில் குறித்த போராட்டத்தின் வேகத்தினை இல்லாமல்செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அரசாங்கத்தின் அடிவருடிகளாக கொண்டுள்ளவர்கள் இந்த செயற்பாடுகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்துள்ளனர். இதன்கீழ் கடந்த காலத்தில் கால்நடை பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளை அந்த ஆதரவு தளத்திலிருந்து அகற்றியுள்ளது. இதற்கு பின்னணியாக இராஜாங்க அமைச்சர் பிள்ளையானும் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகனும் இருந்து செயற்படுகின்றனர்.

இவர்கள் பண்ணையாளர்களுக்குள்ளும் பிரிவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தபோதும் அது பலனளிக்காத நிலையில் இன்று அவர்களுக்கு ஆதரவு வழங்கும் அமைப்புகளை அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்கீழ் நேற்று வெள்ளிக்கிழமை வடகிழக்கு முழுவதும் நடாத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தின்போதும் கிழக்கில் ஹர்த்தாலை குழப்புவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முகநூல் ஊடாக பொய்யான செய்திகள் பரப்பப்பட்டன.கொழும்பிலிருந்து புலனாய்வுத்துறைக்காக செயற்படும் அரசியல் கட்சியொன்றின் பிரதிநிதி வருகைதந்து ஹர்த்தாலுக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுத்திருந்தார்.

எவ்வாறாயினும் கிழக்கில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை தடுப்பதற்கு ஒன்றணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.அதற்காக தமிழ் தேசியம் சார்ந்தவர்கள் முன்னெடுக்கவேண்டும். கிழக்கு மாகாணத்தில் செயற்படும் அனைத்து செயற்பாட்டாளர்களையும் தமிழ் தேசியம் சார்ந்த அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வலுவான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.

இல்லாதுபோனால் கிழக்கில் பல இடங்களில் மயிலத்தமடு, மாதவனைபோன்று சம்பவங்கள் ஏற்படும்.அவ்வாறு ஏற்படுமானால் அதனை தடுக்ககூடிய வழிமுறைகள் எங்களிடம் இல்லையென்பதே கவலையான விடயமாகும்.