போராட்டங்களை நிராகரிப்பதையே ஒரு கோட்பாடாக வல்லரசுகள் செய்து வருகின்றனவா?

விடுதலைப்புலிகளைப் பயங்கவாதப் பட்டியலில் வைத்திருப்பதோ அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதோ விடுதலைப்புலிகளை நிராகரிப்பதற்கல்ல; அவர்கள் தலைமையேற்று நின்று வழிப்படுத்திய தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நிராகரிப்பதற்காகத் தான்! இந்தப் பொறிக்குள் மாட்டுப்பட்டுள்ள நாம் , விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கினால்தான் எமது போராட்டத்தை சர்வதேச நாடுகள் அங்கிகரிக்கும் என்று அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருக்கின்றோம்.

பலஸ்தீனத்தில் மூன்றில் இ்ரண்டு பெரும்பான்மையுடன் சனநாய முறையில் வெற்றி பெற்ற ஹமாஸ் இயக்கத்தை மேற்குலகம் நிராகரித்தது. இன்று ஹமாஸ் இயக்கம் பயங்கரவாத நடவடிக்கைகளை செய்யவேண்டிய கையறு நிலைக்கு வந்ததற்கு யார் பொறுப்பு? பயங்கரவாத்த்தை உருவாக்கி முத்திரை குத்தி நியாயமான போராட்டங்களை நிராகரிப்பதையே ஒரு கோட்பாடாக வல்லரசுகள் இன்று செய்து வருகின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது!

நீங்கள் வன்முறையை விரும்பவில்லை என்றாலும் உங்கள் கையில் ஆயுதங்களை திணித்து பயங்கவாத நடவடிக்கையில் ஈடுபடவைத்து, உங்களை அழித்தொழிப்பற்கான வாய்ப்பினை அவர்கள் உருவாக்கி விடுவார்கள்.

அரசுகளின் பயங்கரவாதத்திற்கு அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்ட உரிமை இருப்பதாக கண்டுகொள்ளப் படுவதில்லை. நடந்து கொண்டிருக்கும் ஹமாஸ்- இஸ்ரேல் மோதுகை, எதார்த்தம் எதுவென்பதை நாம் தெட்டத்தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

பயங்கவாத முத்திரை குத்தும் நாடுகளின் நியாயம் சொல்லும் தகைமைகளும் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் அவர்களே தலைகுனிய வேண்டியதாக இருக்கும்.

விடுதலைப் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்திய இயக்கங்களும் தலைவர்களும் ஒரு காலகட்டத்தில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவர்கள் தான். தென்னாபிரிக்க நெல்சன் மண்டேலா, பிரான்சு சார்ல்து கோல், கியூபா பிடெல் கஸ்ரோ… இந்தப் பட்டியல் நீளும். ஆனால் அவர்களின் விடுதலைப் போராட்டங்களின் வெற்றிகளே அவர்களை விடுதலை செய்தன. மக்கள் திரள் அரசியலை பலப்படுத்தவேண்டும். ஒன்றுபட்ட மக்களின் சனநாயகப் போராட்டங்கள் வழி எமக்கான நீதியையும் விடுதலையையும் நாம் பெற்றாக வேண்டும்.

மோகனதாசன் வினாசித்தம்பி