மூன்று பௌத்த பீடங்களை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள், கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் இன்று மாலை ஈடுபட்டனர்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொடு ஶ்ரீ ஞானரத்தன தேரரின் தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் மகா சங்கத்தினர் கூடினர்.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் 15 விடயங்களின் கீழ் கலந்துரையாடப்பட்டுள்ளது.
சில விடயங்கள் தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதுடன், ஒன்றிணைந்த அறிக்கையொன்றையும் மகா சங்கத்தினர் வௌியிடவுள்ளனர்.
இன்று எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில், மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட ஶ்ரீ விஜிதசிறி தேரர் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார்
சிங்களம், தமிழ் , முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்ற ஸ்திரமான தகவலை உறுதிப்படுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். அதுவே எமது கோரிக்கையாகும். தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை, இடம்பெற்று இருக்கக்கூடாத ஒரு விடயமாகும். அதனால் தங்களின் பொறுப்புக்களை ஏற்குமாறு குறித்த தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அந்த தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கான தீர்மானத்தையும் நாம் எடுத்துள்ளோம். அத்துடன், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் இருப்பின், தாம் சுற்றவாளிகள் என்பதை அரசிற்கும் பாதுகாப்பு பிரிவிற்கும் நிரூபியுங்கள். இந்த நிலைமையை நாம் புரிந்து செயற்படாவிடின், வௌியே இருந்து எமது நாட்டிற்கு அழுத்தங்கள் நிச்சயமாக விடுக்கப்படும். எமது நாட்டின் அமைதி சீர்குலைக்கப்பட்டு பாரிய அபாயத்தை நாம் எதிர்நோக்க நேரிடும்.