பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் – காவல்துறை B அறிக்கை தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று   தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் காவல்துறையினரால் ஏற்கனவே தடையுத்தரவு பெறப்பட்டிருந்த AR  வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு புதிய B அறிக்கையிலான வழக்குகள் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான போராட்டத்தை நடாத்தியவர்களிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த B அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், துரைராசா ரவிகரன் உள்ளிட்டோரின் பெயர்கள், மதத்தலைவர்களின் பெயர்களும் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் பேரணியில் பங்குபற்ற முடியாது, பேரணியை முன்னெடுக்க முடியாது என தடை கோரி காவல்துறை தடையுத்தரவை பெற்றிருந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திற்குள்ளும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.