பொது வேட்பாளருக்கான கோரிக்கை – பி.மாணிக்கவாசகம்

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படுகின்ற கோத்தாபாய மற்றம் சஜித் பிரேமதாசா ஆகிய இருவருமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலான தமது நிலைப்பாடு குறித்து எழுத்தில் எந்தவிதமான உத்தரவாதத்தையும் தர முடியாது என கூறியுள்ளனர்.

அவர்கள் சார்ந்த பிரதான அரசியல் கட்சிகளாகிய பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளும்கூட இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.

பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள தமிழ் மக்கள் தொடர்பில் உறுதியான ஓர் அரசியல் கொள்கையை அல்லது நிலைப்பாட்டை வேட்பாளர்களும் கொண்டிருக்கவில்லை. அவர்கள் சார்ந்த கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என்பதையே இது வெளிப்படுத்தி உள்ளது.

இதனால் தேர்தலில் என்ன செய்வது, யாரை ஆதரிப்பது என்று தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்துக்கான சிந்தனையை கடுமையாக்கி உள்ளது. மிகவும் கடுமையாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்.

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாட்டின் அதி முக்கிய அரச தலைவராக – ஜனாதிபதியாகப் போகின்றவர் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார், அவர் தங்களுக்கு என்ன செய்யப் போகின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. இதனைத் தட்டிக்கழித்துவிட்டு, அவர்களின் ஆதரவை எந்தவொரு வேட்பாளரும் பெற முடியாது. இது தேர்தல் காலத்தின் பொதுவான யதார்த்தம்.

புறந்தள்ளிய செயற்பாடுகள்

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும், புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதுமட்டுமன்றி, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஜனாதிபதியாகிய பின்னர் வழங்கிய உறுதிமொழிகளையும் அவர் நிறைவேற்றவில்லை.

தமிழ் மக்களைப் புறந்தள்ளியது போன்ற அவருடைய செயற்பாடுகளினால் தமிழ் மக்கள் துன்பத்துக்கு மேல் துன்பங்களை அனுபவித்து, அரசியல் ரீதியாக நிம்மதி இழந்துள்ளார்கள். இந்த நிலையில் அந்த மக்கள் தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் எத்தகைய கொள்கையை –நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை தமிழ் மக்கள் உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளார்கள்.

civil tna பொது வேட்பாளருக்கான கோரிக்கை - பி.மாணிக்கவாசகம்கடந்த தேர்தல் கால படிப்பினையின் அடிப்படையில் அவர்கள் தங்களுக்காக உறுதியாகச் செயற்படுகின்ற ஒருவரையே தெரிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அதிகாரங்கள் குறைக்கப்பட்ட போதிலும், ஆட்சி நிர்வாகத்தில் கூடிய செல்வாக்கைச் செலுத்தக் கூடிய வல்லமையைக் கொண்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எழுந்தமானமாக  வாக்களிக்க முடியாது.

ஏனெனில் இந்தத் தேர்தலில் வாக்களிப்பது என்பது அவர்களுடைய அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற ஒரு முக்கிய கைங்கரியமாகும். அத்தகைய பொறுப்பான விடயத்தில் ஏனோ தானோ என்று அவர்களால் இருக்க முடியாது. செயற்படவும் முடியாது. எனவே, மிகவும் கவனமாகவும் மிகுந்த பொறுப்போடும் செயற்பட வேண்டியவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில் பிரதான வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தாத நிலையில் தேர்தலில் வாக்களிப்பதா இல்லையா என்று சிந்திக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கின்ற வல்லமையைக் கொண்டுள்ள தமது வாக்குகளைப் பயனுள்ள வகையில் பிரயோகிக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு உள்ளது.

ஆகவே தேர்தலை, மாற்று வழிகளில் எதிர்கொள்ளவேண்டிய கட்டாய நிலைமைக்கும் அதுபற்றி சிந்திப்பதற்கும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நடைமுறை அரசியல் நியதி

நாட்டின் அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகவோ அல்லது பிரமராகவோ வருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் கிடையாது. அத்தகைய ஒரு நிலையை உருவாக்குவதற்கு பேரின அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. அதற்கான சிந்தனையும் அவர்களிடம் எழுந்ததும் இல்லை.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் உரிமைகள் உரிய முறையில் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்தகைய தெளிவான ஆணித்தரமான உறுதிப்பாட்டைக் கொண்ட அம்சங்கள் அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றே கூற வேண்டும்.

Neeravi Therer பொது வேட்பாளருக்கான கோரிக்கை - பி.மாணிக்கவாசகம்பேரினத்தவராகிய சிங்கள மக்களை, அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுடைய அரசியல் அதிகார உரிமைகளை மேன்மையான நிலையில் வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளே அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாகத்தான் இலங்கையின் அரசியலமைப்பில் சிறுபான்மை இன மக்கள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றார்கள். நம்பிக்கை கொள்ள முடியாதவர்களாக உள்ளார்கள்.

இத கால வரையிலான அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் சிறுபான்மை இன மக்களுடைய அரசியல் குடியியல் நன்மை குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் அவர்களையும் பங்காளிகளாகக் கொள்ளவில்லை. அவர்களுடைய அபிலாசைகள், அரசியல் நிலைப்பாடுகள், அவை பற்றிய கருத்துக்களும்கூட உருவாக்கப்பட்ட அரசியலமைப்புக்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதற்கும் அப்பால் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவர் ஒருவரே –அதுவும் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக முடியும் என்ற நியதி எழுதப்படாத அதேநேரம் மாற்றப்பட முடியாத ஓர் அரசியல் நியதியாக நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அக்கறை கொள்ளாத அரசியல் போக்கு

இத்தகைய ஒரு சூழலில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் ஜனாதிபதியாக வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே அதுவும் பிரதான கட்சிகளாகிய ஐக்கிய தேசிய கட்சி அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக முடியும் நடைமுறை யதார்த்தம் இதுகால வரையில் இருந்து வந்துள்ளது.

ஆனால் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தில் அந்த நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தை பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி கைப்பற்றி கோத்தாபாய என்ற வலிமை மிக்க ஒருவரை தனது வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தொடர்பில் அந்தக் கட்சிக்குள் எழுந்த போட்டி, பூசல்கள் காரணமாக அந்தக்கட்சி செல்வாக்கிழந்து போயுள்ளது.

அதன் முன்னாள் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் அரசியல் அரங்கில் மிகப் பலம்வாய்ந்த ஒருவராகத் திகழ்ந்த மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்த பொதுஜன பெரமுன செயற்படத் தொடங்கி சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. இந்த அரசியல் செல்வாக்கு கடந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் முதன்மை நிலையில் வெளிப்பட்டிருந்தது.

gota mahi பொது வேட்பாளருக்கான கோரிக்கை - பி.மாணிக்கவாசகம்ஆனாலும் இந்தக் கட்சியின் வேட்பாளராகிய கோத்தாபாய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பிலான கேள்வி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பூதாகரமாக எழுந்து அச்சுறுத்தி உள்ள போதிலும் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டிய தீர்மானத்தில் எந்தவித செல்வாக்கையும் செலுத்தவில்லை. கோத்தாபாய வேட்பாளராகினாலும் சரி வேட்பாளராகா விட்டாலும்சரி தமிழ் மக்கள் தமக்கு சாதகமான ஒருவரைத் தெரிவு செய்வதில் சிக்கலான நிலைமைக்கே முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் உத்தி

பேரின அரசியல் தலைவர்கள் எவரும் சிறுபான்மை இன மக்களின் அரசியல் நலன்களில் அக்கறை கொள்ளாத ஓர் அரசியல் போக்கைக் கொண்டிருப்பதனால், அவர்களில் எவரையுமே நம்ப முடியாத நிலைமைக்கே தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். விடுதலைப்புலிகளை யுத்தத்தில் மௌனிக்கச் செய்ததன் பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. இதுவே நாட்டின் அரசியல் செல்நெறியாக நிலைபெற்றுள்ளது.

சம்பந்தனுடனான சந்திப்பு

இந்த நிலையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளும் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய கடப்பாட்டை தட்டிக்கழிக்க முடியாத பொறுப்பாகக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் அவர்கள் அந்த விடயத்தில் அக்கறை அற்றவர்களாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால் மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரியாசனம் ஏறுகின்ற பேரின அரசியல் தலைவர்கள் மீதும், அவர்களின் கட்சிகளின் மீதும் தாங்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதை இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய ஒரு நிலைமைக்குள் தமிழ் மக்கள் இப்போது தள்ளப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் தங்களின் நம்பிக்கையற்ற நிலைப்பாட்டை சிங்கள மக்களுக்கும் பேரின அரசியல் கட்சிகளுக்கும் வெளிப்படுத்துவதற்காக தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரைக் களமிறக்கி அவருக்கே வாக்களிக்கின்ற ஒரு தீர்மானத்திற்கு ஒரு சாரார் ஏற்கனவே வந்துள்ளார்கள்.

இந்த வகையில் தமிழ் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓர் அணியில் திரட்டி தேர்மலை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவையின் முன் முயற்சியில் சுயாதீன தமிழ்க்குழு ஒன்று இறங்கியுள்ளதாகத் தெரிகின்றது. இந்தக் குழு இதுவிடயம் தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தி பொது வேட்பாளராக அவரை நிறுத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தரப்பை இந்தத் தேர்தல்காலச் சூழலில் ஓரணியில் அரசியல் ரீதியாக ஓர் அணியாக ஒன்றிணைப்பது சிங்களத் தரப்பைத் தமிழ்த்தரப்புக்கு எதிராக ஒன்றிணைவதற்கு வழிவகுத்துவிடும் என்ற ஆபத்தான நிலைமை குறித்து சம்பந்தன் இந்தச் சந்திப்பின் போது சுயாதீன தமிழ்க்குழுவினருக்குச் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகின்றது.

உத்தரவாதமற்ற பன்னாட்டு நிலைமை

சம்பந்தன் எடுத்துக் கூறிய ஒரு நிலைமையுடன், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தமிழர் தரப்பின் ஒன்றிணைவு, அடுத்து வருகின்ற பொதுத் தேர்தலிலும் சிங்களத் தரப்பு முன்னெடுக்க வேண்டிய நிலைப்பாட்டில் செல்வாக்கு செலுத்த வல்லது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த செல்வாக்கு பொதுத் தேர்தலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் அல்லது உருவாகப்போகின்ற புதிய அரச தரப்பினருடைய ஆட்சிக் கொள்கைக்கான தீர்மானத்திலும் முக்கியத்துவம் பெறக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது.

அதேநேரம் இந்தத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற தேர்தல் நடைமுறையில் வெற்றி பெறுபவரைத் தீர்மானிப்பதில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் எந்த வகையிலும் அந்த வாக்குகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் தேர்தல் கால உத்திகளையும் பேரின அரசியல்வாதிகள் கைக்கொள்ளத் தவறமாட்டார்கள்.

எனவே வெற்றியாளரைத் தீர்மானிக்கின்ற தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுடைய அரசியல் நலன்கள் சார்ந்த தேவைக்காக, தங்களுக்குப் பயன்படாத வகையில் பிரயோகிக்கப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். இது ஒரு விடயம். தங்கள் மீது நம்பிக்கை வைக்காமல் ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டை மீறிய வகையில் தனிவழியில் செல்வதற்கான ஒரு சமிக்ஞையாக அதனைக் கருதி அவர்கள் அரசியல் ரீதியாகக் கோபமடையவும் கூடும்.

உணர்வு நிலை அரசியல் போக்கைக் கொண்டுள்ள பேரின அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இதற்காகத் தமிழ் மக்களைப் பழிவாங்குவதற்கும் முயற்சிக்கலாம். ஜேஆர் ஜயவர்தன காலத்தில் 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் ஒன்றிணைந்து வாக்களித்ததன் பின் விளைவாகவே 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த வரலாற்றுப் பாடத்தையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கவனத்திற் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் அவற்றை அரசு வழங்க வேண்டும் என்றெல்லாம் பேச்சுக்களிலும், பொது அரங்குகளிலும் அறிக்கைகளிலும் ஐநாவும் சர்வதேச நாடுகளும் வலியுறுத்தலாம். ஆனால் அவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக செயல் வடிவத்திலான அழுத்தத்தை அவைகள் இலங்கை மீது இதுவரையிலும் பிரயோகித்ததில்லை. இனிமேலும் அது நடக்குமா என்பதற்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

ஒன்றிணைவார்களா……?

தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓர் அணியாக ஒன்றிணைய வேண்டும் என்பதைப் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளனர். இந்தப் பத்திகளிலும் அதன் அத்தியாவசிய தேவை, அதன் அரசியல் அவசியம் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய ஒன்றிணைவு இல்லாவிட்டால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டிருந்ததை மறக்க முடியாது.

saji TNA பொது வேட்பாளருக்கான கோரிக்கை - பி.மாணிக்கவாசகம்தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் இறுக்கமான ஓர் அரசியல் கட்டமைப்பில் ஒன்றிணைகின்ற அதேவேளை, துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சமூக முக்கியஸ்தர்கள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டல் குழுவொன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்பதும் ஏற்கனவே, இங்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.

தேர்தல் கால தேவைக்காக என்றில்லாமல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கான அரசியல் பயணத்தை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுப்பதற்கு இந்த ஒன்றிணைவும் வழிகாட்டல் குழுவும் அவசியம். ஆனால் இது குறித்து ஆலோசிக்கப்படவுமில்லை.

அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாவும் தெரியவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற மிகக் குறுகியதொரு காலப்பகுதியில் அந்த வழிகாட்டல் குழு போன்றதை ஒத்த சுயாதீன தமிழ்க்குழு உருவாக்கப்பட்டு ஒற்றுமைக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. காலம் தாழ்த்திய செயற்பாடாகிய போதிலும், இது பாராட்டுக்குரியது. ஊக்குவிக்கப்பட வேண்டியது.

அதேநேரம் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் என்பதற்கும் அப்பால் தமிழ்த்தேசியத்தைத் தமது அரசியல் கொள்கையின் அடிநாதமாகக் கொண்டுள்ள அரசியல் கட்சிகளாவது ஓரணியில் ஒன்றிணையுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சுயாதீன தமிழ்க்குழு முன்வைத்த யோசனைகளைச் செவிமடுத்த சம்பந்தன் அது குறித்து தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். நானும் யோசிக்கிறேன். நீங்களும் யோசியுங்கள என்றவறாகப் பதிலளித்துள்ளதாகத் தகவல். அத்துடன் இந்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சிக்குள் கலந்தாலோசிக்க வேண்டும். அதற்கும் அப்பால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிகின்றது.

அதேநேரம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ரீஎம்கே என்ற தமிழ் மக்கள் கூட்டணி போன்ற கட்சிகளுடனும் சுயாதீன தமிழ்க்குழு பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக அமைந்தன என்பது அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு விரல்விட்டு எண்ணுகின்ற நாட்களே இருக்கின்ற ஒரு குறுகிய கால வேளையில் தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரைக் களமிறக்குவதற்கான இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது கவனத்திற் கொள்ள வேண்டியதாகும். அதேவேளை, இந்த முயற்சிக்கு செவிகொடுத்து அரசியல் கட்சிகள் உடனடியாக ஓரணியில் ஒன்றிணைவார்களா என்பதும் கேள்விக்குரியதே.

மொத்தத்தில் இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாட்டின் பிரதான கட்சிகள், தென்பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகள், தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களும்கூட குழப்பகரமான நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த குழப்பரமான நிலைமைகளில் இருந்து மீண்டு அனைவரும் எவ்வாறு இந்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் காண முடியும்.