பொது மன்னிப்பின் அடிப்படையில்  அப்பாவிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது-மூதூர் பிரதேச சபை உப தவிசாளர்

446 Views

மரண தண்டனை கைதிகளைக்கூட ஜனாதிபதி தனது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை ஏன் பிணையிலாவது விடுதலை செய்ய முடியாது என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம்  கேள்ளி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான்கு கொலைகளைப் புரிந்த குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றத்தினாலும், உயர் நீதிமன்றத்தினாலும் மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட மரண தண்டனைக் கைதியைக்கூட ஜனாதிபதி தனது பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் என்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இன்றைய நிலையிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றியும், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையிலும் பல வருடகாலமாக தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை ஜனாதிபதியால் ஏன் விடுதலை செய்ய முடியாது?

நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை மரண தண்டனை கைதியின் விடுதலையை சமன் செய்யவா? என்ற கேள்வியும் மக்களிடத்தே எழுந்துள்ளது அத்துடன் ஏற்கனவே இவரது விடுதலைக்காக முயற்சிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சந்தர்ப்பத்தை ஜனாதிபதி அவர்கள் பயன்படுத்திக் கொண்டாரா? என்ற சந்தேகமும் மக்களிடத்தில் எழுந்துள்ளது.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக பாற்சோறு உண்டுவரும் இன்றைய நிலையிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுகள் இடம்பெற்றுவருவதும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுலில் இருப்பதும் பாற்சோறு உண்பதை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பதிவுகளை மேற்கொண்டுவந்த பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனினும் இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை தோற்று விக்கின்ற நிலையில் எமது இளைஞர்கள் இல்லை அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் இருக்கின்றது அந்த வகையில் இளைஞர்களின் எதிர்காலத்துக்காக பல திட்டங்களை உருவாக்கியுள்ள ஜனாதிபதி அவர்கள் இவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இளைஞர்களின் எதிர்காலத்துக்கு உதவ வேண்டும்.

எமது நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுதலை செய்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கியும் அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் இது நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply