பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை கோரிய சரத் – ரணிலுடனான சந்திப்பின் போது இதுதான் நடந்ததாம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா சந்தித்த போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியினை கோரியதாக சிங்கள வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை வெளிவந்த சிங்கள வார ஏட்டின் அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதி பணிமனையில் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மாரசிங்கவினால் ரணிலை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அரச தலைவர் உரையாற்றிய நாளன்று நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற போதே சரத் பொன்சேகாவின் பிரசன்னம் அஷுவினால் தெரிவிக்கப்பட்டது. ரணிலுடன் என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்படாத போதிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியினை சரத் பொன்சேகா கோரியதாக தெரிய வருகின்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சரத் பொன்சேகவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்த நேரத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க வந்திருந்தனர். சரத் ​​பொன்சேகாவுடன் என்ன விடயம் உரையாடினீர்கள் என்று ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டனர். சிரித்துக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க எதுவும் உரையாடவில்லை என்று தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.