பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுவது அவசியம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

குரோதத்தை தூண்டும் பேச்சுகள் வன்முறைகளை தூண்டுவதற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து எந்த பிரச்சினையுமில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு தெரிவித்துள்ளது.

கோவிட் 19 நடவடிக்கைகளை தடுத்தல் மற்றும் ஒற்றுமையின்மை, வெறுப்பு போன்றவற்றைத் தோற்றுவிக்கும் போலிச் செய்திகள்,புகைப்படங்கள், காணொளிகளின் பகிரல் தொடர்பில் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களின் விமர்சனங்கள் மற்றும் இணங்காதிருத்தல் ஆகியவற்றினை நேர்மையாக வெளிப்படுத்தும் முயற்சிகளை ஒடுக்குவதற்கு சட்டங்களை பயன்படுத்த கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

போலிச்செய்தி எது என்பதை  காவல்துறையினரை தீர்மானிக்க அனுமதிப்பது மற்றும் அதனடிப்படையில் நபர்களை கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதற்கு அனுமதிப்பது குறித்தும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.

சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் ஏற்பாடுகளை காவல்துறையினர் கருத்துசுதந்திரத்தினை கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தினை ஒடுக்குவதற்கு பயன்படுத்தலாம் எனவும் கரிசனை வெளியிடடுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்,  கொரோனா வைரஸ் காரணமாக நாடு போக்குவரத்து கட்டுப்பாடுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் பொதுமக்களின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படுவதும் இணங்க மறுப்பதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.

Leave a Reply