பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா

குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…”

“தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும் புகழ் உரைகள்…”

ஆகவே இன்றைய இளைஞர்கள் “சிகரட் குடிக்கிறான், தெருவில் நிற்கிறான், குடிக்கின்றான், ஒரே நண்பர்களுடன் திரியுறான், அதிகமாக Phone பாவிக்கின்றான், Game விளையாடுறான்” என நிதம் வசை பாடுகின்றோம். இவை எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளின் பிழையென கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பிள்ளையின் நடத்தையை பெற்றோரின் வளர்ப்பே தீர்மானிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் அதிகமான பெற்றோர்கள் வேலை நிமித்தம் தம் பிள்ளைகளின் நிலையை மறந்து, பிள்ளைகளின் கனவுக்காக தங்களை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் திரைப்படங்கள், நாடகம், முகநூல் என தம் வேலைக்கு பின்னரும் இதனுடன் தம்காலத்தை கழிக்கிறார்கள். பிள்ளைகளின் காசுத் தேவைகளை நிறைவேற்றும் பெற்றோர், எந்தளவு தூரம் ஒரு குழந்தையின் அன்பு, பாதுகாப்பு என மாஸ்லோ சொல்லும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் என்பது பல பெற்றோர்களுக்கு கேள்விக்குறியே. பிள்ளைகள் படித்தால் சரி டொக்டர், இஞ்சினியர் என்று வேலைக்கு சென்றால் சரி என்று சிந்திக்கிறார்களே தவிர, தன் பிள்ளை சமூகத்தில் சிறந்த பிரஜையாக வர வேண்டும்; நல்ல ஆளுமை உடையவனாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கின்றது என்றால் எம்மில் பலரின் விடை????

பெற்றோர் தான் பிள்ளைகளின் உலகம். பெற்றோர் ஆகிய நீங்கள், எந்த வகையில் தங்களுடன் நேரத்தை செலவிடுகிறீர்கள். எவ்வாறு தங்களுடன் அன்பு உறவை வளர்க்கிறீர்கள் எப்படிக் கவனம் செலுத்துகிறீர்கள் என உங்கள் பிள்ளைகள் அவதானிப்பார்கள். இதைவிடுத்து எந்தப் பிள்ளையும் எவ்வளவு பணத்தை தம் பெற்றோர் உழைக்கின்றார்கள் என பார்ப்பது இல்லை. பெற்றோர் குறைந்தது ஒரு நாளில் மூன்று முறையாவது பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒருதாய் தன் பிள்ளையுடன் 8 முறைகள் தொட்டுக் கதைக்க வேண்டும். பெற்றோர் நீங்கள் பிள்ளைகள் மீது கொண்ட அன்பை மனதிற்குள் வைத்திருந்தால், மட்டும் போதாது. அதை பிள்ளைகளிடம் வெளிப்படையாக காட்டுங்கள்.

நீங்கள் சிறந்த பெற்றோரா? நீங்கள் சிறந்த பெற்றோர் ஆவதற்கு, பின்வரும் திறன்கள் முக்கியமானவை.

Listening – உங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகள், நாளாந்த வேலைகள் தொடர்பாக பெற்றோர் உங்கள் பிள்ளைகளிடம் கதையுங்கள். அவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேளுங்கள். பிள்ளைகள் தமது கருத்தைக் கூறும் போது, குறுக்கிடுவதை விடுத்து, முற்றுமுழுதாக அவர்கள் கூறவரும் கருத்தைக் கேளுங்கள். அது பிள்ளைகளைப் பொறுத்தவரை தம் பெற்றோர் தமக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள்; தங்களை அவர்கள் நேசிக்கின்றார்கள் என்பதை ஆழமாக பிள்ளைகளின் மனதில் பதியவைத்து விடுகிறது. பின் பிள்ளைகள் உங்களிடம் இருந்து எந்த விடயங்களையும் மறைக்க மாட்டார்கள். தம் பிரச்சினைகள், கவலைகள், சந்தோசம் என எதையும் முதலில் பகிரும் நபர்களாக பெற்றோராகிய நீங்கள் திகழ்வீர்கள்.

observation – உங்களது பிள்ளைகள் செய்யும் செயலை நிதானமாக அவதானியுங்கள். அவர்கள் எவ்வகையான செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள், எதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், யாருடன் அதிகம் பழகின்றார்கள், எவ்வகையான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்களென பெற்றோர் உற்றுநோக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தையில் பிழை இருந்தால், அவதானியுங்கள். ஆனால் பிழைகளை மட்டும் அவதானிக்காதீர்கள். குழந்தைகளின் சொற்கள் மற்றும் சொற்கள் சாராத விடயத்தையும் அவதானியுங்கள்.

Manifest – பிள்ளைகளுக்கு இப்படி செய், அப்படி செய் என உத்தரவு இடுவதை விடுத்து பெற்றோர் ஆகிய நீங்கள், அவர்களுக்கு அதை முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அவர்கள் உங்களை மதிக்கும் அளவுக்கு நீங்கள் செயற்படுங்கள். பிள்ளைகள்  நீங்கள் சொல்வதைவிட நீங்கள் செய்வதை அதிகம் பின்பற்றுகிறார்கள். நீங்கள் செய்வதையே அவர்கள் செய்வார்கள். நீங்கள் உங்கள் குடும்ப அங்கதவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், சமூகத்தில் காட்டும் அக்கறை போன்றவற்றை பிள்ளைகளும் கடைப்பிடிப்பார்கள். பெற்றோரான நீங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் முதுமைப் பகுதியில் பிள்ளைகளின் நடத்தையில் அவதானிக்க முடியும்.

Story telling – உங்களது பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தால், அவர்களுக்கு நல்லுரைகள், நீதிக் கருத்துகள், சட்டதிட்டங்கள், ஒழுக்கவிதிகளை கதைகளின் மூலம் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். சிக்மன்பி ரைட் உளப்பகுப்பு கோட்பாட்டில் குறிப்பிட்ட கருத்திற்கு அமைவாக ஒரு பிள்ளையின் EGO, SUPER EGO எனும் நிலைகளை உருவாக்குவதில் கதை கூறுதல் அத்தியாவசியமானது.

Self Sufficiency – பெற்றோரான நீங்கள் பிள்ளையின் முயற்சிக்கு, தேவைக்கு உதவிட வேண்டுமே தவிர, அவர்களது தேவைகளை நீங்கள் நிறைவேற்றக் கூடாது. பிள்ளை தனக்கு தேவையானதை தான் எடுத்துக் கொள்ளத் தூண்ட வேண்டும். அவர்களுக்கு இயலாத வேளையில்  உதவ வேண்டும். பொதுவாக பிள்ளைகள் கீழே விழுந்தால், பிள்ளை எழமுன் நாம் ஒடிப்போய் தூக்கி விடுகின்றோம். பிள்ளை நடைபழகும் போது பிள்ளை விழாமல் நடைபழக வேண்டுமென நினைக்கும் பெற்றோர்களும் உள்ளனர். அது பிழையான சிந்தனை. பிள்ளை விழுந்தால் தானே எழும். பிள்ளை நடப்பது என்பது அதற்கு பெரிய சவால். அந்த சவாலை பிள்ளை வெற்றி கொள்ள வேண்டும். விழுந்தாலும் தன்னால் யாரின் உதவியும் இன்றி எழும்புவேன் என்ற நம்பிக்கை, தன்னைத் தானே பார்த்துக் கொள்வேன் போன்ற சுய மதிப்பீடு நிலைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். நீங்கள் பிள்ளையைத் தூக்கி விடும் போது, பிள்ளைகள் தங்கி இருக்கும் பழக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கிறார்கள். பிள்ளையின் முயற்சிக்கு ஊக்கம் ஊட்டி விடுபவராக இருங்கள்.

Teaching Compassion – பிள்ளைகளுக்கு மற்றவர்களில் கவனம் செலுத்த வேண்டும்; உயிர்களை மதிக்க வேண்டும்; பிறர் மகிழ்ச்சிக்கு நாம் எம்முடைய வாழ்வில் சிறு பகுதியையாவது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். பிள்ளைக்கு நாம் மட்டும் மகிழ்சியாக இருக்கக் கூடாது; நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலமாக பிள்ளைகள் பெற்றோரான உங்களையும், தன் எதிர்கால குடும்பத்தையும், தன் உறவினர்களையும், தன்னைச் சார்ந்த, சாராதவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துகொள்ள முயல்வார்கள்.

Appreciotion – பிள்ளைகளை பாராட்டுங்கள். அவர்கள் நல்ல செயல்கள் செய்யும் போது, அவற்றை தேடித் தேடிப் பாராட்டுங்கள். அவர்கள் குற்றம் இழைத்தால் தண்டிக்காமல் அதை ஒரளவு கண்டு கொள்ளமால் விடுங்கள். அப் பாராட்டு இன்றிய நடத்தையானது, சிறிது காலத்தில் அழியும் சாத்தியக்கூறு உண்டு. பாராட்டுதல் எனும் போது பிள்ளைகளுக்கு மகிழச்சி தரக்கூடிய சொற்களை பயன்படுத்தல், பரிசுப்பொருட்கள் கொடுத்தல், வெளி இடங்களுக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுதல், அவர்களுக்கு பிடித்தவற்றை செய்தல் என்பன சிறப்பான விடயம் ஆகும். ஒரு நாளும் பாராட்டுகளை வழங்குவதற்கு தயங்கி நிற்காதீர்கள்.

இவ்வாறாக திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, உங்களால் உங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த பெற்றோராக வாழ முடியும். அத்துடன் ஆளுமையுடன் கூடிய ஒழுக்கப் பண்புகளை பிள்ளைகளிடையே வளர்த்தெடுக்க முடியும். உங்கள் பிள்ளையின் Role model பெற்றோர் ஆகிய நீங்கள் தான். பிள்ளைகளின் முன்மாதிரியான நீங்கள், நேரான மனப்பான்மை கொண்டவராக விளங்க வேண்டும். பிள்ளை மூன்று வயதில் மாதிரியை பின்பற்ற அதாவது உங்களைப் போல செய்ய ஆரம்பிக்கின்றது. பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பது தான் பிள்ளையின் நடத்தைக்கு காரணம். பிள்ளைகளிடம் குற்றம் காணாதீர்கள். எனெனில் இக் குற்றங்கள் உருவாக பெற்றோரான நீங்களே காரணம். ஆகவே எமது சமூகத்தில் நீங்கள் சிறந்த பெற்றோராக உருவாகுங்கள். சிறந்த பிள்ளைகள் தானாக உருவாகுவார்கள்.

செல்வி.டிலக்சனி.மோகராசா

உளவியல் துறை மாணவி(யாழ்பல்கலைக்கழகம்)