பூஜா பூமி என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் – ஸ்ரீ பிரசாத்

திருகோணமலை புல்மோட்டை பகுதியில் முஸ்லீம் மக்களுக்கு  சொந்தமான வயல் நிலங்கள் பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு  அப்பாவி பொதுமக்கள் புத்த பிக்கு தரப்பினரால் தாக்கப்பட்ட சம்பவம்  தமிழ், முஸ்லீம், மக்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை அமைப்பாளர் ஸ்ரீ பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (26) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.

ருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றது.  விகாரைகள் என்ற பெயரில் தமிழ் முஸ்லீம் மக்களின் வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் குடியிருப்புக்களுக்கு மத்தியில்  விகாரைகள் அமைக்கப்படுகின்றது. அதே நேரம் எல்லை கிராமங்களில் வயல் நிலங்கள் குடியேற்றங்கள் என்ற பெயரில் அபகரிக்கப்படுகின்றது

புல்மோட்டை பகுதியிலும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான வயல்நிலங்கள் புத்தபிக்குகளினால் “பூஜா பூமி” என்றபெயரில் ஆக்கிரமிக்கபட்டுள்ளது அங்கு  முஸ்லீம் விவசாயிகள் மற்றும் பெண்கள் காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

திருகோணமலை மாவட்டத்தில் திட்டமிட்டு இனக்கலவரத்தை தூண்டும் வகையில் இனவாத செயற்பாடுகள் அதிகரித்தவன்னம் உள்ளது அரச இயந்திரமும் பாதுகாப்பு தரப்பினரும் வேடிக்கைபார்ப்பவர்களாக இருப்பது தமிழ், முஸ்லீம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

புல்மோட்டையில் ஆக்கிரமிக்கபடும் விவசாயநிலங்கள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். திட்டமிட்டு தமிழ், முஸ்லீம் மக்கள் மீது  நடத்தப்படும்  இனக்குரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.