புல்மோட்டையில் தொடரும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் வாழ்வாதார உதவித்திட்டம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பிலால்நகர், சதாம் நகர், பட்டிகுடா ஆகிய கிராமங்களுக்கான முன்மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழ்வாதார மேம்பாட்டு  திட்டத்தின் ஒரு பகுதியாக முஸ்லிம் எய்ட் ஸ்ரீ லங்கா நிறுவனம் 20 மீனவர்களுக்கு மீன்பிடி வல்லங்கள்  மற்றும் உபகரணங்களை இன்று(07)  வழங்கி வைக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கு 2.5 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலை 10.30 மணி அளவில் பட்டிகுடா, களப்பு பகுதியில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் புல்மோட்டை 4 ஆம் வட்டார கிராம, பொருளாதார உத்தியோகத்தர்கள் மற்றும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்
எம்.ஏ.எம். அஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வாதார உதவி பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.
 இந்நிகழ்வில் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்  உரையாற்றுகையில், இத்திட்டத்தை நீங்கள் வெற்றிகரமாக செயற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, முஸ்லிம் எயிட் நிறுவனமும் பிரதேச செயலகமும் இத்திட்டத்தினை தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவே வழங்கப்பட்ட உபகரணங்களை  முறையாக பயன்படுத்தி உச்சபயனை அடைந்து கொள்ள வேண்டும் என்று வலியுருத்தினார்.
  முஸ்லிம் எய்ட்   நிறுவனம்  வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.