புர்கா போன்ற ஆடைகளுக்கு தடை கூடும் போது இறப்பமே தவிர அரசுக்கு அடி பணியோம் -முனாஜித் மௌலவி

அரசு இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வேண்டி எடுத்த நடவடிக்கைதான் இந்த புர்கா போன்ற ஆடைகளை தடை விதிப்பது. இப்படியான தடை கூடும் போது நாங்கள் இறப்போமே தவிர, இவர்களுக்கு அடிபணிந்து இருக்க மாட்டோம் என முனாஜித் மௌலவி தெரிவித்தார்.

‘இலக்கு’ மின்னிதழிற்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரின் நேர்காணலின் முழுமையான வடிவம்.

கேள்வி : அண்மையில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் தற்காலிகமாக புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இனிவரும் காலங்களில் இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவதை தடை செய்யவிருப்பதாக ஒரு செய்தி வெளியாகிருக்கின்றது. இது தொடர்பாக இஸ்லாமிய மத குரு என்ற அடிப்படையில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் : அண்மையில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலிற்கும், தற்போது புர்கா போன்ற உடைகளுக்கு தடை செய்து முஸ்லிம்களுடைய ஆடைகளிலே கை வைத்திருப்பதற்கும் இடையிலே எந்த தொடர்பும் கிடையாது. இது  இவர்களுடைய ஆரம்ப காலத்தில் இருக்கக்கூடிய ஒரு பழக்கம் தான். சம்பந்தமில்லாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவது.  இது தான் இவர்களின் பழக்கம்.  அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட முறைகளில் இதுவும் ஒன்று.  ஈஸ்ரர் தாக்குதல் என்பது மிருகத்தனமானது, மிகவும் மோசமானது. அது மனிதாபிமானமற்ற செயல் என்பதை நாங்கள் அன்றிலிருந்து இன்றுவரை சொல்லிக் கொண்டு வருகிறோம். இந்த இடத்திலே நான் மீண்டும் ஞாபகப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.   ஈஸ்ரர் தாக்குதல் நடத்திய அந்த சஹ்ரானுக்கு  நான் ஆதரவு தெரிவித்ததாக பல வதந்திகள், பொய்யான தகவல்கள் வெளியாகியது.  ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அவன் அப்படி செய்திருக்க மாட்டான் என்று தான் சொல்லியிருந்தேன். இதனால்தான்  நான் ஐந்து மாதமும், பதிமூன்று நாட்களும் சிறையில் இருந்து வந்தேன். இப்பொழுது அதை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதன் பின்னர் தான்  நான் வெளியிலே இருக்கிறேன்.

முதலில் இந்த புர்கா என்றால் என்ன என்பதை சொல்கின்றேன். புர்கா என்பது ஒரு ஒழுக்கமான,  கிரசமான ஒரு  ஆடை.  பெண்களுடைய அங்கங்கள், அலங்காரங்கள்    தன்னுடைய கணவரைத்தவிர யாரும் பார்க்ககூடாது என்பதற்காக அணிவதுதான் புர்கா. இது வெறுமனே இஸ்லாம் சம்பந்தப்பட்ட ஆடை அல்ல, இதனை பிழையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அண்ணன், தம்பி, தாய், தகப்பன், தன்னுடைய பிள்ளைக்கு ஒழுக்கமான ஆடையை உடுத்தி விட வேண்டும், அவள் அணிந்திருக்க வேண்டும் என்ற ஆசைதான். அதை இஸ்லாம் கொஞ்சம் பற்றுருக்கமாக, ஆணித்தரமாக சொல்லுகிறது. முகத்தையும், மணிக்கட்டையும் தவிர, ஏனைய பாகங்களை மூடுங்கள் என்று அவ்வளவுதான்.

ஆடவருக்கு  பெண்ணைப் பார்த்தால்  எங்கு ஆசை வருமோ, அந்த பக்கங்களை, மூடுங்கள்.  இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உண்டானதல்ல. கண்ணியமாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். இஸ்லாம் அதை கண்டிப்பாக சொல்லுகிறது. அரசு இஸ்லாமியர்களுக்கு  எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வேண்டி எடுத்த நடவடிக்கைதான் இந்த புர்கா போன்ற ஆடைகளை தடை விதிப்பது. இதனை இவர்கள் தடை விதித்தாலும் நம் ஒழுக்கமான பெண்கள் திறந்து கொண்டு வெளியே திரிய மாட்டார்கள். இப்படியான தடை கூடும் பொழுது நாங்கள் இறப்போமே தவிர, இவர்களுக்கு அடிபணிந்து இருக்க மாட்டோம் என்பதை நான் ஒரு மதகுரு என்ற வகையிலே மிக ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.

கேள்வி : இலங்கையில் ஆயிரக்கணக்கான மதரசா பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நாட்டில் காணப்படும் மதரசா பாடசாலைகள் அனைத்தும் நாட்டின் கல்விக்கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது எனவும் இப்பாடசாலைகளை விரைவில் தடைசெய்யப் போவதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது. இது எந்தளவுக்கு பொருத்தப்பாடுடையது? சாத்தியமாகுமா?

பதில் : இலங்கையில் ஆயிரக்கணக்கான மதரசாக்கள், பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையிலே நாட்டிலே காணப்படுகின்ற இந்த மதரசாக்கள் அனைத்தும் நாட்டின் கல்விக் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது என்ற விதத்திலே மதரசாக்களை மூட வேண்டும் என்ற கோஷம் மதரசா என்றால்  என்னவென்று தெரியாதவர்களால் சொல்லப்பட்டு வருவதை நாங்கள் பார்க்கிறோம்.  மதரசா என்ற அரபு சொல்லிற்குரிய நேரடி கருத்து பாடசாலை. அது அரபிகள் கூடுதலாக குர் ஆன்  அரபு மொழியிலே இருக்கிறது. இந்த அரபு மொழியிலே இருக்கின்ற அந்த குர்ரானை ஒரு மனிதன் விளங்குவதாக இருந்தால், அரபு மொழி தெரிய வேண்டும் அதை கற்றுக் கொடுப்பதாக இருந்தால், அந்த ஆசான்கள் உருவாகுவதற்கு, அரபு மொழி படிக்க வேண்டும். அது பத்து பாடங்களில் ஒரு பாடமாக, நாற்பத்தைந்து நிமிடம் செலவழித்து, ஒரு மொழியை, பதினைந்து வயதிலே போகின்ற ஒரு மாணவன், பத்து வருஷத்துக்குள் இம் மொழியை கற்க முடியாது. முழு பாடங்களும்  அரபியில் நடத்தப்பட்டால் தான் இந்த மொழி திறன் வரும். அதற்காக வேண்டி தான் அந்த அரபு மொழியிலே மதரசாக்கள் இருப்பதே தவிர அது தீவிரவாதத்துக்கோ,  இந்த நாட்டுடைய கல்வி திட்டத்திற்கோ அப்பாற்பட்டதல்ல. இது சம்பந்தமாக நான் இந்த மின்னிதழூடாக  ஒரு விடயத்தினை கூற  ஆசைப்படுகிறேன்.

அண்மையில் ஞானசார தேரர் மிகக்கடுமையாக இதை சொல்லிக் கொண்டு வருகிறார். அந்த விவாதங்களுக்கு யார் வந்தாலும் நான் சந்திக்கிறேன் என்று சொல்லுகிறார்.  இறைவன் நாடினால் மிக விரைவில் அவரை நான் நேரடியாக இது சம்பந்தமான விளக்கங்களுடன் சந்திப்பேன் என்று இந்த செய்தியின் ஊடாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி : எந்த மதமாக இருந்தாலும் சரி அவர்களின் முகத்தை மூடுவதற்கு உரிமை இருக்கின்றது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிவது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இது மதவாதத்தை ஏற்படுத்தும் செயற்பாடு எனவும், புர்கா அணியும் கலாசாரம் சமீப காலத்திலேயே கொண்டுவரப்பட்டது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கின்றார். இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

பதில் : எந்த மதமாக இருந்தாலும், அவர்களுடைய முகங்களை மூடுவதற்கு அனுமதி இருக்கிறது என்பது பொது விதி. மூடலாம், திறக்கலாம் விருப்பமான ஆடைகளை அணியலாம். இன்று ஆண்கள் பெண்களுடைய ஆடையையும், பெண்கள் ஆண்களுடைய ஆடையையும் அணிந்து கொண்டு செல்கிறார்கள். அவர்களுக்கெதிராக யாருக்கும் வழக்கு போடவும் இல்லை. அவர்களை யாரும் ஒன்றும் சொல்லவில்லை. இந்த புர்கா போட்டதை வைத்துக் கொண்டு அதனை மத சார்பாக வைத்து  ஒவ்வொரு விதமாக சொல்லுகிறார்கள். அண்மைக்காலமாக  கொண்டுவரப்பட்ட ஆடைதான் புர்கா என்று சரத் வீரசேகர என்கின்ற பாதுகாப்பு அமைச்சர் சொல்லி இருக்கிறார்.  இவருடைய அப்பா இவருடைய தந்தையின் அப்பா பிறப்பதற்கு முதலே இந்த முகம் மூடுகின்ற கலாச்சாரம் எல்லாம் இருந்திருக்கிறது.

இஸ்லாமும் முகத்தை மூடுங்கள் என்று வலியுறுத்தி சொல்லவில்லை. ஆண்களே உங்களுடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், பெண்களே உங்களுடைய பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுகின்றது. எந்த ஒரு  ஆணுடைய பார்வை,  மனிதர்களின் பார்வை முதன்முதலாக ஒரு பெண்ணையோ, இன்னொரு மனிதரை நோக்கி முதலாவது முகத்துக்கு போகும். இரண்டாவது பார்வை, அந்த கதிர் வீச்சு, அந்த பெண்ணுடைய மார்பகங்களை நோக்கியிருக்கும்.  எனவேதான், குர் ஆன் சொல்கின்கிறது உங்களுடைய மார்பகங்களை, முந்தானைகளால் மூடிக் கொள்ளுங்கள் என்று. எனவே இதற்கும் மதவாதத்துக்கும், மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது.  நான் ஏற்கனவே சொன்னது போன்று ஒழுக்கமான ஆடைகளை அணிய வேண்டும். சரத் வீரசேகர பாதுகாப்பு அமைச்சர்   அவரின் மனைவிக்கும், அவரின் பிள்ளைகளுக்கும் ஆடைகளை குறைத்து உடுத்தினால் அது அவருக்கு பிரச்சனை இல்லை. ஆனால் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை மிக ஒழுக்கமான முறையில் தான் வைத்திருப்போம். இது மதம், ஒழுக்கம், பண்பாடு, நாகரீகத்தோடு சம்பந்தப்பட்டது. இவர்களால் அதை தடை செய்யவே முடியாது என்பதை உறுதியாக கூறி கொள்கிறோம்.

கேள்வி : கொவிட் – 19  தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனசாக்களை புதைக்க கூடாது; எரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு சிறீலங்கா அரசு கட்டாயப்படுத்தியது. இதையடுத்து ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் தொடர் அழுத்தத்தாலும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களாலும் அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சிறீலங்கா அரசு சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கெதிரான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது. இது தொடர்பாக உங்களின் நிலைப்பாடு?

பதில் : உண்மையில் கண் கலக்க வைக்கின்ற ஒரு கேள்விதான். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முஸ்லீம்களின் ஜனஸாக்களை புதைக்க கூடாது, எரிக்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக மட்டும் சொல்லியுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதில் மறைத்து பேசுவதற்கு எதுவும் கிடையாது. சுகாதார அமைச்சர், உலக நாடுகள் எல்லாம் சொல்லிவிட்டார்கள். இன்னும் இங்கு உள்ள ஆணைக்குழுவெல்லாம் சொல்லிவிட்டார்கள். இருந்தாலும், இவர்கள் தங்களுடைய எண்ணக் கருவை இவ்வாறாக பதிவு செய்துவிட்டு கடைசியாக பல ஐ.நா என்னும் பக்கத்து நாடுகளுடைய அழுத்தத்தின் காரணத்தினால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இது இல்லாவிட்டாலும், இனியும் வேறு பிரச்சினைகளை கொண்டு வந்து திணிப்பார்கள். நாங்கள் இந்த நாட்டிலே சிறுபான்மையினராக வாழுகின்றோம். சிறுபான்மையினராக இருந்தாலும் இந்த நாட்டு மக்கள் மன்னர்கள், இந்த நாட்டின் மைந்தர்கள், மற்றவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமை எங்களுக்கும் இருக்கின்றது. நாங்களும் ஒரு தாய், தகப்பனுக்கு பிறந்தவர்கள் தான். நாங்களும் இந்த நாட்டிலே பிறந்திருக்கிறோம். இறைவன் தந்ததே உடல், உணர்வுகள். எனவே மனிதர்களுக்கு அடிமை அல்ல, நாம் இறைவனுக்கே அடிமை. யார் ஆண்டாலும், யார் சிறுபான்மை பெரும்பான்மையாக இருந்தாலும், எங்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது அதை உரிய முறையிலே நாங்கள் தட்டி கேட்போம். இறைவன் நாடினால், அதற்குண்டான தீர்ப்புகளை எங்களுக்கு தருவான். இல்லையேல் எங்கள் சந்ததிகளுக்கு தருவான் என்று நாங்கள் நம்பி இருக்கிறோம்.

கேள்வி : நீங்கள் முன்னாள் அமைச்சர் ரிஸாத் பதியுதீன்  கட்சியில்  இருக்கிறீர்கள். அண்மைக்காலமாக  அரசாங்கம் அவரை உள்வாங்குமா?  அல்லது சேர்ந்து விடுவாரா? இப்படி சந்தேகங்கள் பல இருக்கிறது. நீங்கள் காரசாரமாக இந்த அரசை தாக்கி பேசியவர், இவர்களுடைய அநியாயங்களை எதிர்த்து பேசிய நீங்கள் கடுமையாக அரசை விமர்சித்துவிட்டு உடன்பட்டு போய்விடுவீர்களா? உடன்பட்டால் நீங்கள் பேசியதெல்லாம் வீணாகப் போய்விடும் என்று நான் நினைக்கிறேன். இது குறித்து உங்களின் நிலைப்பாடு?

பதில் : உண்மையில் என்னுடைய நாடி நரம்போடு சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியையே கேட்டு இருக்கிறீர்கள். அதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று சொல்லக்கூடிய முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவருடைய தலைமையிலான கட்சி அபிவிருத்திக்கும், உரிமைக்கும் உண்டான கட்சியாகவே  அந்த கட்சியை நான் பார்க்கிறேன்.  குறிப்பாக மதவாச்சிக்கு இங்கால்  இருக்கின்ற மக்கள் அனைவரையும் மக்களாக பாருங்கள்.  சமயம்,  மொழி  என எல்லாவற்றையும் கடந்து  மக்களாக எல்லோரையும் பாருங்கள். வெறுமனே அரசியல் காலங்களில் மட்டும் அண்ணன், தம்பி என்று உறவாக சொல்வதும், வாக்கெடுப்பதற்காக அபிவிருத்திகளுக்காக தன்னினம்  என்று சொல்லி செயற்படுகின்ற இந்த கறுப்பு குணங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்று அவருக்கு சொல்லியபின்னரே தான் அந்த கட்சியில் நான் சேர்ந்தேன், இன்றும் செயற்பட்டுக் கொண்டு வருகிறேன்.

என்றும் இல்லாதவாறு   இந்த  அரசு, மகிந்த ராஜபக்ஸ அரசினுடைய  ஆணைகளுக்கு மத்தியிலே அண்மைக் காலமாக முஸ்லிம்கள் ஜனசாக்கள் எரிக்கப்பட்டது.  மீண்டும் புர்கா என தொடர்ந்து இன்னும் இன்னும்  எவ்வளவோ விடயங்களுக்கு தடை விதித்திருக்கின்ற  இந்த நிலைமையில் உயிரே போனாலும் இந்த அரசோடு என்ன அபிவிருத்திகள் தந்தாலும் இவர்களுடன் நாங்கள் சேர்ந்து நடக்க முடியாத அளவுக்கு அநியாயமாக பல உயிர்களை எரித்துவிட்டார்கள். சடலங்களை எரித்து விட்டார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு அவர்கள் ஒன்றே ஒன்று செய்ய வேண்டும். எரிக்கப்பட்ட ஜனசாக்களின்  அத்தனை  சொந்த வீடுகளுக்கும் போய் இந்த அரசு நாங்கள் செய்தது பெரும் பிழை என்று சொல்லி, மன்னிப்பு கேட்காத வரையில், எரிக்கப்பட்டவருடைய குடும்பங்கள் உள்ளம் குளிராத வரையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினுடைய தலைமை ஒரு பொழுதும் சேராது என்று நான் நம்பி இருக்கிறேன். அப்படி சேருவார் என்றால் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் சேருவார்கள் என்றால் அரசோடு உடன்படுவார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக  என்னுடைய அரசியல் பிரச்சாரம் இருக்கும் என்பதையும் இந்த வேளையில் நான் மிகத் தெளிவாக கூறி கொள்கின்றேன்.