புதிய பெயரை ஈ பி ஆர் எல் எப் தெரிவு செய்ய மத்தியகுழுவே தீர்மானித்தது

கட்சியினுடைய பெயரையும் சின்னத்தையும் மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய மத்திய குழுவினுடைய தீர்மானம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற சிறந்த விவசாயிகள் பண்ணையாளர் கெளரவிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,

வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறது.
எவ்வாறு தேர்தலிற்கு முகம் கொடுக்க தீர்மானித்துள்ளீர்கள்?

உண்மையிலே இந்த பாராளுமன்ற தேர்தலிலே எங்களுடைய கட்சியான ஈழ மக்கள் விடுதலை முன்னணி, விக்னேஷ்வரன் ஐயாவுடைய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி, அதேமாதிரி ஸ்ரீகாந்தா ,சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, அனந்தி தலைமையிலான தமிழர் சுயாட்சி கழகம் உட்பட இன்னும் பல கட்சிகளும் அதே போல மத தலைவர்கள், தமிழ் மக்கள் பேரவை, வடக்கு கிழக்கிலே இருக்கக்கூடிய நூற்றிற்கு மேற்பட்ட சிவில் அமைப்புகள் அனைவரும் இணைந்து ஒரு புதிய சின்னம் ஒரு புதிய கூட்டமைப்பாக நாங்கள் எதிர்வரும் தேர்தலில் நாங்கள் போட்டியிட இருக்கின்றோம்.

விடுதலை முன்னணி தமிழர் ஐக்கிய முன்னணி என்கின்ற பெயரோடு தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு முனைப்பு காட்டி இருப்பதாக அறிகின்றோம். இது என்ன காரணத்திற்காக ஈழமக்கள் என்ற பெயர் வரக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவா?

கடந்த பல வருடகாலமாக எங்களுடைய கட்சிக்குள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்பது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாகவே அது தொடர்ந்து இருக்கும். அதே நேரத்தில் எங்களுடைய கட்சியினுடைய பெயர் ,சின்னம் மாற்றப்பட வேண்டுமென்று நாங்கள் எங்களுடைய கட்சியினுடைய மத்திய குழு அரசியல் உயர்பீடம் உட்பட நீண்ட காலமாக இது சம்பந்தமாக எங்களுக்குள்ளே நாங்கள் விவாதித்து வந்திருக்கிறோம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகவே இருக்கும் . அதே நேரத்தில் தேர்தலை நாங்கள் போட்டியிடுவதற்காக எங்களுடைய கட்சியினுடைய பெயரையும், கட்சியினுடைய சின்னத்தையும் மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய மத்திய குழுவினுடைய தீர்மானம்.

ஆகவே அந்த தீர்மானத்தின் படி எங்களுடைய பெயர் நாங்கள் தேர்தல் களத்திலே நாங்கள் மாற்றம் செய்வதற்காக கொடுத்திருக்கிறோம். அதை எதிர்வரும் தேர்தல் காலத்திலே எங்களுடைய கட்சியின் சின்னமும் தேவைப்படுகிற பட்சத்திலே பாவிக்கிறதுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

நாங்கள் உண்மையிலேயே நிறைகுடம் சின்னம் தேவையென்பதை கொடுத்திருக்கிறோம். ஆனால் அதனுடைய இறுதி முடிவு தேர்தல் திணைக்களம் தான் எடுக்கும்.

தமிழர் ஐக்கிய முன்னணியின் ஊடாக ஒரு கூட்டத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா?

நாங்கள் எங்களுடைய இந்த கட்சிகளினுடைய கூட்டு அதனுடைய சின்னம் என்பது தொடர்பாக இன்னும் நாங்கள் நிரந்தரமான ஒரு சரியான முடிவு எடுக்கவில்லை. ஆனால் நாங்கள் தேவைப்படும் பட்சத்தில் நாங்கள் எங்களுடைய கட்சியையும் சின்னத்தையும் இந்த பொதுவான எங்களுடைய கூட்டணிக்காக நாங்கள் வழங்கவும் தயாராக இருக்கிறோம்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் எப்போது இடம்பெறும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்புக்கள் பாராளுமன்றத்திலே காணப்படுகிறது?

உண்மையிலேயே மாசி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியின் நான்கரை வருடங்கள் நிறைவடைகின்ற இந்த காலகட்டத்திலே இந்த பாராளுமன்றத்தை கலைத்து ஒரு பொதுத்தேர்தலுக்கு போகக்கூடிய நிலைமை இருக்கிறது.

ஆனால் இன்றைய ஒரு செய்தி ஒன்று பார்க்கும் போது பசில் ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கவிற்கு சொல்லப்பட்டதாக அதாவது ஓகஸ்ற் மாதம் வரையும் இந்த பாராளுமன்ற தேர்தலை நீடிப்பதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

ஆகவே ஐந்து வருட காலத்திற்கு பிற்பாடு பாராளுமன்றம் கலைக்கிறதாக இருந்தால் அது வரையும் இருக்கும் நான்கரை வருடத்திற்கு உள்ளே கலைப்பதாக இருந்தால் பங்குனி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி இதை கலைக்கிறதற்கான சூழ்நிலை இருக்கிறது‌.

ஆகவே இந்த முடிவு நான்கரை வருடத்தில் கலைக்க போகிறார்களா? அல்லது ஐந்து வருட காலம் நிறைவடைகின்ற காலத்திலே கலைக்க போகிறார்களா என்பது தொடர்பாக இன்னும் சரியாக தெரியவரவில்லையென மேலும் தெரிவித்தார்.