புதிய ஆளுநரிடம் மக்களால் கையளிக்கப்பட்ட மகஜர்! நடவடிக்கை எடுப்பாரா?

486 Views

வட பகுதியில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் குழுவொன்றை அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாண ஆளுநர் எதிர்பார்த்துள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வயாவிளான் உள்ளிட்ட மற்றும் படையினர் வசமுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று (22) புதன்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர்.

இதன்போது கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரைச் சந்தித்து தமக்கு தாம் வாழ்ந்த பூர்வீக நிலம் வேண்டுமெனக் கோரியதுடன் இது தொடர்பிலான மகஜரையும் கையளித்தனர்.

அத்துடன், ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எதிர்க்கட் சித் தலைவர் ஆகியோருக்குக் கையளிக்குமாறு கோரிய மகஜர்களையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

இந்நிலையில் நாம் கேப்பாபுலவில் சிறுபகுதி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விடுவித்துத் தருமாறு கோரியதாக மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.சந்திரலீலா தெரிவித்தார். இதற்கு ஆளுநர் தன்னால் இயன்றளவு முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் சந்திரலீலா தெரிவித்தார்.

இதேவேளை, வயாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்களும் ஆளுநரைச் சந்தித்துப் பேசினர். இதன்போது வயாவிளான் கிழக்கு ஜே/244 மற்றும் வயாவிளான் மேற்கு ஜே/245 ஆகியவற்றின் ஒருபகுதி மற்றும் பலாலி தெற்கு ஜே/252 முழுமையாகவும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகக் கூறி ஆவணங்களைக் கையளித்தனர்.

இந்நிலையில் மேலதிக விபரங்கள் தேவையாயின் தொலைபேசி இலக்கத்தையும் ஆளுநரின் செயலாளர் பெற்றுக்கொண்டதாக சந்திப்பில் பங்குபற்றிய ஞானலிங்கம் தெரிவித்தார்.

இந்நிலையில் காணி விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் முகமாக குழு அமைக்க எதிர்பார்த்துள்ளதாக ஆளுநர் அலுவலக தரப்பினர் தெரிவித்தனர்.

Leave a Reply