புதிய அமைச்சரவை புதன்கிழமை பதவியேற்கும்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால அமைச்சரவை இன்று(25) பதவியேற்க இருந்த வேளையில், அது நாளை மறுதினம் பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகியதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர்  பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் வரை  15பேர் கொண்ட  இடைக்கால அமைச்சரவை ஒன்று நிறுவப்பட்டது. அந்த அமைச்சரவை இன்று பதவியேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறுமென அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான சிறிசேன அமரசேகர இன்று காலை 10.40 மணிக்கு அமைச்சரவை செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அத்துடன் நிதி, பொருளாதார அலுவல்கள், கொள்கை அபிவிருத்தி, புத்தசாசனம், கலாசாரம், நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு வசதிகள் அமைச்சராக கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக இதுவரை உறுதியாக உரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படாமையே இன்றைய அமைச்சரவை பதவியேற்காமைக்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த கிழமை நியமனம் பெற்ற அமைச்சரவை அமைச்சர்களின் விபரம் வர்த்தமானி மூலம் இன்னமும் வெளியிடப்படவில்லை.

மேலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலர் உள்ளடங்கலாக இராஜாங்க அமைச்சர்கள் 20பேர் புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.