பிரியங்கா பெர்னான்டோவிற்கு எதிராக புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் 04.02.2018 அன்று ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் தமிழர்களின் கழுத்து அறுக்கப்படும் என பிரிகேடியர் பிரியங்கா பெர்னான்டோ சைகை மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று(19) வெஸ்மினிஸ்டர் மெஜிஸ்டேர்ட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ் மக்களுக்கு ஓர் நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தின் முன்னால் புலம்பெயர் அமைப்புக்கள் ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். காலை 10 மணிமுதல் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, பிற்பகல் வரை தொடர்ச்சியான கோஷங்களை முழக்கமிட்டபடி இப்போராட்டத்தை நடத்தினர்.

இனப்படுகொலை செய்த யுத்தக் குற்றவாளிகளை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்காதே, இலங்கைக்கு வழங்கும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்து, பிரித்தானியாவில் ஜனநாயக ரீதியில் போராடுபவர்களின் விபரங்களை இலங்கை தூதரகம் சேகரிப்பதை அனுமதியாதே என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.

மேலும் பிரித்தானிய நீதித்துறையில் அரசியல் இருக்கக்கூடாது என்றும், போர்க் குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்கா பெர்னான்டோவை உடனடியாக கைது செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தற்போது ஜனாதிபதியாக பதவியேற்ற கோத்தபயா ராஜபக்ஸவின் பதவியேற்பு நிகழ்வில் தேசியகீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இலங்கை பௌத்த அரசின் செயற்பாடுகள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது என்பதை உறுதியாகக் கூறலாம் எனவும் போராட்டத்தில் இருந்தவர் கூறினர்.