பிரித்தானியா காணொளி தொடர்பில் விசாரணை – இலங்கை

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் இலங்கை அரசியல்வாதிகள்இ இலங்கை இராணுவ புலனாய்வுத்துறை மற்றும் துணை இராணுவக் குழுவினருக்கு உள்ள தொடர்புகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற குழு அமைக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஆறு தற்கொலை தாக்குதலாளிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டு வெடிப்புக்களில் 43 வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரித்தானியாவின் சனல் போர் என்ற செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (5) வெளியிட்ட காணொளியில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வு அதிகாரிக்கும் உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குமிடையில் பிள்ளாயான் குழு எனப்படும் துணை இராணுவக்குழுவின் பேச்சாளர் மௌலானா என்பவரால் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டதாகவும், அதில் தாக்குதலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் பின்னர் வெளியிடப்பட்ட காணொளிகளில் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டதை தான் உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கோத்தபாயா ராஜபக்சாவின் தேர்தல் வெற்றிக்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.