பிரித்தானியா அமைச்சர் இலங்கை – இந்தியா பயணம்

பிரித்தானியாவின் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன் மேரி றிவில்யன் இன்று (10) இலங்கை வந்துள்ளார்.

இலங்கையின் சூழல் பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் மனித உரிமை தொடர்பில் பிரித்தானியா மேற்கொண்டுவரும் இருதரப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுக்களை மேற்கொள்வதே அமைச்சரின் பயணத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்துசமுத்திர பிராந்திய வளைய அமைப்பு நாடுகளின் நடவடிக்கையில் பிரித்தானியா தொடர்ந்து தனது கவனத்தை செலுத்திவருகின்றது. கடல் பாதுகாப்பு தொடர்பிலும் பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. இந்த பயணத்தின் போது அவர் இலங்கையின் அரச தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதுடன், யாழ் மாவட்டத்திற்கும் பயணம் செய்யவுள்ளார்.

யாழ் செல்லும் அமைச்சர் வடமாகாண ஆளுநர் மற்றும் அந்த பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் வர்த்தக சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

இதனிடையே, அவர் தனது பயணத்தின் போது இந்தியாவுக்கும் செல்லவுள்ளதாக பிரித்தானியா தூதரகம் தெரிவித்துள்ளது.