பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறும் ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறுவதற்குள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் குடியுரிமை அனுமதியைப் பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்குள் விண்ணப்பிக்கத் தவறுபவர்கள் உடனடியாக நாடு கடத்தப்பட மாட்டார்கள்.

ஐரோப்பிய பாராளுமன்ற பிரெக்ஸிற் ஒருங்கிணைப்பாளர் கய் வெர்ஹோஃப்ஸ்டாட் இது குறித்து தனக்கு இங்கிலாந்து அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகக் கூறியதையடுத்து இந்த உறுதிப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தீர்வுத் திட்டத்தின் கீழ், இங்கிலாந்தில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் பிரெக்சிற்றுக்கு பின்னர் நாட்டில் தங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதுவரை இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.

இவர்களில் ஏறக்குறைய 2.5 மில்லியன் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்களுக்கு பிரெக்ஸிற்றுக்கு பின்னர் இங்கிலாந்தில் வாழவும் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆறு தீவிரமான அல்லது தொடர்ச்சியான குற்றவாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 30 ஜூன் 2021 ஆகும்.

ஆனாலும் இந்தக் காலக்கெடுக்குள் விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக நாடு கடத்தப்பட மாட்டார்கள் என பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.