‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர்

“பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்று விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கிய மருத்துவ சங்கமான அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், சுகாதாரத்துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

Sampathnuwara வில் உள்ள மாவட்ட  மருத்துவமனைக்கு பிரிகேடியர் பெராகும் சென்ற பொழுது இந்த மோசமான செயலில் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இதன் காரணமாக மருத்துவமனையின் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம், வைத்தியசாலையின் பணிகளில் இருந்து பணியாளர்கள் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது.

யுத்தகாலத்தின் போது போராடிய படையினர், பொலிஸாரிற்கு உளவியல்ரீதியான மருத்துவ ஆதரவை வழங்குவதற்காக மருத்துவர்கள் படைத்தரப்பினரை கௌரவத்துடன் நடத்தினார்கள் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட அதிகாரி தனது நடத்தைகள் மூலம் படைத்தரப்பிலிருந்து எதிர்பர்ர்க்கப்படும் நடத்தையின் தராதரத்தை எட்டதவறிவிட்டார் என்றும் மருத்துவர்கள் மக்களின் கௌரவத்தை உறுதி செய்ய தவறிவிட்டார் என்றும் அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply