பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் – பகுதி ஒன்று

நூல் அறிமுகம்: விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஒரு கோட்பாட்டுடன் நந்திக்கடலில் நிறுத்தினார்கள் என்பதைப் புரிந்து எதிரிகள் அதை மடைமாற்ற படாதபாடுபடுகிறார்கள்.

விளைவாக எமக்குள்ளிருந்தே 2009 இலிருந்து உற்பத்தியான இணக்க, அவல, அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியல் முகவர்களைக் கொண்டு நந்திக்கடல் அரசியலை தொடர் கேள்விக்குட்படுத்திக் கெண்டேயிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் நாம் இல்லை..ஏனென்றால் நந்திக்கடலே இன அழிப்பின் பின் இப்படியான உதிரிகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுவார்கள் என்பதை ஒரு கோட்பாடாகவே முன்னறிவித்திருக்கிறது.

புலிகளிடம் ஒரு பண்பு இருக்கிறது. நாம் தெளிவாக அறத்துடனும், அதே நியாயப்பாட்டுடனும் தெளிவாக உள்ளபோது மாற்றுக் கருத்து, எதிர்க்குரலுக்குக் காது கொடுக்கலாம், ஆனால் அவற்றை எமது அறத்துடன் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதுதான் அது.

அதனால் இவை எது குறித்தும் கவனப்படுத்தாமல் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள் கொண்டு நந்திக்கடலை கோட்பாட்டுருவாக்கம் செய்தோம் – இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆழக்கடலை சிறு குச்சி கொண்டு அளக்கும் முயற்சி இது – ஆனாலும் பணி தொடர்கிறது.

இந்தப் பணியில் எம்மோடு அமெரிக்காவிலிருந்து இறுதியாக இணைந்து கொண்டவர்தான் முனைவர் சு.சேதுராமலிங்கம்.

அவர் எழுதிய ” தமிழ்த் தேசியத்துக்கான பெருந்திட்டம்” நூல் அறிவாயம் வெளியீடாக சென்னை கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

நந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கிய ஒரு தமிழ்த் தேசிய சிந்தனையாளனின் செறிவான பார்வை இந்த நூல்.

அவரை அறிமுகம் செய்வதில் “நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி” பெருமிதம் கொள்கிறது.

பரணி கிருஸ்ணரஜனி.

பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் – பகுதி ஒன்று

புலிகளின் உத்திகளைப் பற்றி ஒருவருடன் இணையத்தில்  உரையாடும்பொழுது அவர் “புலிகள்தான் தோற்றுவிட்டார்களே, அப்படி என்றால் அவர்களின் உத்திகள் சரியில்லை என்றுதானே பொருள்” என்று கூறினார். இதுபோன்ற கருத்துக்கள் உத்திகளைப் பற்றிய எளிமையான பார்வையினால் உருவாவது. நாம் உலகிலேயே சிறந்த உத்திகளைப் பயன்படுத்தினாலும், அது நமது வாய்ப்புகளைத் தான் கூட்டமே ஒழிய உறுதியாக வெற்றியடைவோம் என்ற உறுதியைத் தரமுடியாது. அதுபோன்ற நிலைதான் புலிகளுக்கு ஏற்பட்டது. புலிகளைப் பற்றி பலர் உணராதது என்னவெனில், புலிகள் பலவகைகளில் உத்திகளில் உலகிலேயே முன்னோடிகளாக இருந்தவர்கள். இந்நூலிற்கான கரு என்பதே  புலிகளின் உத்திகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எழுதிய கட்டுரைகளின் வழியேதான் எனக்குக் கிடைத்தது. இந்த உத்திகளுக்குச்  சரியான பெயர் வைக்க வேண்டுமானால் அது “பிரபாகரன் சட்டகம்” என்பதே பொருத்தமானதாக இருக்கும். அவர்களின் உத்திகள் என்பது அடிப்படையில் நாம் இதுவரை இந்நூலில்  பார்த்த உத்திகளே. இனி புலிகள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்று பார்ப்போம்.

  1. புலிகளின் அடிப்படைக் குறிக்கோள்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உலகிற்கே தெரிந்த ஒன்று.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

“கல்வியும் மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள்” – பிரபாகரன் அவர்கள்

புலிகள் இயக்கம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நடத்திய அனைத்து செயல்பாடுகளும் மேலுள்ள குறிக்கோள்களை நோக்கியதே.  இந்தியா வந்து மிரட்டிய போதும் குறிக்கோள்களை விட்டுக்கொடுக்கவில்லை;  பின்பு உலகமே வந்து மிரட்டியபோதும் அடிபணியவில்லை. ஏனென்றால் இந்த அடிப்படைக் குறிக்கோள்களைக் கைவிட்டால் தேசியம் என்பதே இருக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிந்ததுதான். எதில் வேண்டுமானாலும் ஒரு தேசியம் சமரசம் செய்யலாம், ஆனால் அடிப்படைக் குறிக்கோள்களில் சமரசம் செய்யமுடியாது.

IMG 20200124 WA0022 பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் - பகுதி ஒன்று“தமிழினம் வெறுமனே நிலத்துக்காக மட்டும் இதுவரை போராடவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற போராட்டமானது மண்மீட்புக்கானது மட்டுமல்ல. கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்று எமது தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போல தமிழ் மக்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே கடந்த 30 வருடங்களாக இடம்பெற்றது… யுத்தத்துடன் மட்டும் நின்றுவிடாமல் சம காலத்திலேயே எமது அடையாளங்களைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும் தேசியத் தலைவர் முனைப்புடன் செயற்பட்டார். அதற்காக பல அமைப்புகளை உருவாக்கி அவற்றைத் திறம்படச் செயற்படுத்தியிருந்தார்.”

  1. புலிகள் இயக்கம் என்பது முழுத்திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. அது ஈழ சூழலுக்கேற்ப படிப்படியாக பரிணமித்த தனித்துவமான இயக்கம். யாரையும் நகல் எடுத்து உருவாக்கப்பட்ட இயக்கமல்ல. ஒரு மனிதன் ஒரு கைத்துப்பாக்கியுடன் ஆரம்பித்து ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து படிப்படியாக பல்வேறு படையணிகளையும் கட்டமைப்புகளையும்   வளர்த்த  இயக்கம்.
  1. புலிகள் எப்பொழுது ஈழத்தை அடைவோம், எப்படி ஈழத்தை அடைவோம் என்று கூறவில்லை. அதுபோன்ற பாதையை யாராலும் இச்சிக்கலான உலகில் வகுக்க முடியாது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவர்கள் பல்வேறு படையணிகளை அமைப்புகளைக் கட்டி எழுப்பி வெற்றிக்கான வாய்ப்புகளைக் கூட்டுவதன் அடிப்படையிலே செயல்பட்டார்கள்.
  1. புலிகள் தங்களை ஒரு குழுக்களின் குழுவாக கட்டமைத்துக் கொண்டார்கள். அவர்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன், ஒரே உணர்வுடன், இறுக்கமான நட்புடனும் நம்பிக்கையுடனும் குழுக்களின் குழுவாகச் செயல்பட்டனர். அவர்களைப் போல சிறந்த குழுக்களை உலகில் வேறு எவராலும் உருவாக்கமுடியுமா என்பது ஐயமே.
  1. புலிகளை ஒரு ஒற்றைத் தலைமையினால் கட்டப்பட்ட சர்வாதிகார இயக்கம் என்று பலர் தவறாக புரிந்து கொள்கின்றனர். குழுக்களின் குழு அவ்வாறு இயங்க முடியாது. அதற்கான தலைமைப் பண்புகளே வேறு. இவற்றை குழுக்களின் குழு பகுதியில் பார்த்தோம்.

ஒரு குழுக்களின் குழுவில் தலைமையின் முதற் கடமை என்பது அமைப்பு செழிப்பதற்கான பண்பாட்டு சூழலை உருவாக்குவதுதான், சதுரங்க ஆட்டத்தைப்போன்று  காய்களை  நகர்த்துவது அதற்குப்பின்புதான்  வரும். பிரபாகரன் அவர்களின் செயல்பாடுகளை  கூர்ந்து கவனித்தால் இத்தன்மை விளங்கும். அவர்தான் இயக்கத்திற்கு அடிப்படையான புலிப்பண்பாட்டை உருவாக்கினார், நெருக்கமான குழுக்களை கட்டி அமைத்தார், பல படையணிகளை உருவாக்கி இணைத்தார், வலைப்பின்னலை உலக அளவில் பெரிதாக்கினார், தொடர்ந்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காத்தார்.  அவரின் பேச்சும் செயலும் எப்பொழுதும்  ஒத்திருக்கும், முரண்கள் இருக்காது.

praba 00 பிரபாகரன் சட்டகம்: விடுதலைப் புலிகளின் உத்திகள் - பகுதி ஒன்றுஈழத்திலிருந்து பின்வாங்கினால் தன்னை சுட்டு விடுங்கள் என்று கூறியது, தனது குடும்பத்தை இறுதிவரை களத்திலேயே வைத்திருந்தது, எளிமையாக வாழ்ந்தது, முன்னின்று போர் புரிந்தது  என்று மற்ற வீரர்களுக்கு முன்னதாரணமாக திகழ்ந்தார். அவர் உருவாக்கிய சூழலில் நூற்றக்கணக்கான திறமையான தளபதிகளும், ஆயிரக்கணக்கான ஓர்மை கொண்ட புலிவீரர்களும் உருவாகினர். புலிப்படை என்பது பிரபாகரன் என்ற தோட்டக்காரர் உருவாக்கிய விளைச்சல், ஒர்  அதியுச்ச திறமை கொண்ட  குழுக்களின் குழு. இதுதான் இருப்பதிலேயே பிரபாகரன் அவர்களின் முக்கியமான தலைமைச் செயல்பாடு. போர் உத்திகள் வகுப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதை அவரின் படைத்தளபதிகளே பெரும்பாலும் பார்த்துக்கொள்வார்கள்.

பிரபாகரன் அவர்கள் அதிகாரத்தை தளபதிகளிடம் பகிர்ந்தளித்து குழுக்களின் குழுவாக செயல்பட்டவர். அவரின் முக்கிய வேலை என்பது தோட்டக்காரர் போன்றது, கட்டளை இடுவது அல்ல. புலிகளின் ஆற்றல் என்பது   குழுக்களின் குழுவில் உள்ளடங்கிய சனநாயகப் பண்புகளிலிருந்தே வருகிறது.

தொடரும்…..