வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாள் 108 பானைகள் வைத்து உரிமை பொங்கல் விழா கோலகலமாக நடைபெற்றுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று நேற்று பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.
அந்தவகையில் ஆலய வளாகத்தில் 108 பானைகளில் பொங்கல் பொங்கி விசேட பூஜை நிகழ்வுகளுடன் பொங்கல்விழா நிகழ்வுகள் இடம்பெற்றது.
காலை11 மணிக்கு ஆரம்பமாகிய பூயை நிகழ்வுகளில் வவுனியா மற்றும் யாழ்பாணம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,சட்டத்தரணி மணிவண்ணன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
இதேவேளை ஆலயவளாகத்தில் அதிகளவான காவல்துறையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், ஆலயத்திற்கு வருகை தரும் பக்கதர்கள் பதிவுசெய்யப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் ஆலயத்திற்குள் உட்செல்வதற்கான சந்தியில் ஒலுமடு பிரதான வீதியின் அருகில் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொங்கல் விழாவிற்கு வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பினால் 53 பானைகள் உபயமாக வழங்கப்பட்டுள்ளதுடன், அன்பாலயா இளைஞர்களால் தண்ணீர் பந்தலும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இதேவேளை ஆலயத்தில் தியாகி தீலிபனை நினைவுகூர்ந்து தீபம் ஏற்றி நிகழ்வுகள் எதனையும் மேற்கொள்ளவேண்டாம் என வவுனியா நீதிமன்றால் வழங்கப்பட்ட தடை உத்தரவு கோரிக்கை ஒன்றின் பிரதியை நெடுங்கேணி காவல்துறையினர் ஆலயத்தின் நிர்வாகத்தினருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.