மட்டக்களப்பில் சிறிலங்கா காவல்துறையினரால் அமைதி வழியில்
தமிழர்க்கு நீதி கேட்டுப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிப்போம்!
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை அரச பயங்கரவாத அடக்குமுறையாகும்!
மட்டக்களப்பு மயிலந்தனை மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள விவசாயிகளால் அரச மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரின் ஆதரவுடன் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டதனைக் கண்டித்துப் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களால் 50 நாட்களாகத் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறுகின்றது.
இப்போராட்டத்திற்கு சமூக ஆதரவு பெருகிவரும் நிலையில், இன்றைய நாள் இப்பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் யாழ் மற்றும் வந்தாறு மூலை பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை பண்ணையாளர்களுடன் இணைந்து நடாத்தி இருந்தனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ் திரும்பும் வேளையில் சந்திவெளி காவல்துறையினரால் வந்தாறு மூலை பல்கலைக்கழக மாணவர் உட்பட 5 மாணவர்கள் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மாணவரில் கைவைத்த இக்கொடும் அடக்குமுறையை வன்மையாகக் கண்டிப்போம்!
இனவாதக் கருத்துக்களை வெளியிடும் பௌத்த பிக்குகளைக் கைது செய்யத் தயங்கும் சிறிலங்கா சிங்கள காவல்துறையினர்…
சட்டவிரோத சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க முயலாத காவல்துறையினர்…
யாழில் இருந்து வருகை தந்து பண்ணையாளர்களுக்கு ஆதரவு வழங்கிய மாணவர்களைக் கைது செய்துள்ளமையானது இன வன்மத்தின் உச்சம் என்பதனையும் இனத்துவ அடிப்படையில் நீதி ஈவிரக்கமின்றி வளைக்கப்படும் என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றது!
தமிழ் மாணவ சமூகத்தின் மீது இனவெறிப் பாய்ச்சலை நிகழ்த்தும் அரச இயந்திரத்தை வன்மையாகக் கண்டித்துப் போராட்டங்கள் நீதி வேண்டித் தொடர வேண்டும் என்பதே உணர்வாளர்களின் தேடல்!
போராடும் மக்களே நீதியை வென்றெடுப்பர்!