பண்ணையாளர்களுக்கு ஆதரவாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

சிங்கள மக்களாலும், இலங்கை அரசினாலும் திட்டமிட்ட வகையில் கையகப்படுத்தப்படும் தமிழ் மக்களின் மேச்சல் தரை காணிகள் மற்றும் விவசாய நிலங்களை மீட்பதற்கான போராட்டத்தை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த போரட்டம் தொடர்பில் இலங்கை அரசு அக்கறைகொள்ளவில்லை என்பதுடன், அதனை முறியடிக்கும் திட்டங்களை சிங்கள பௌத்த துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளை கொண்டு அது முன்னெடுத்து வருகின்றது.

தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ இது தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர நகர்வை மேற்கொள்ளாத நிலையில், அனைத்துலக சமூகமோ அல்லது இந்தியாவோ இந்த விடையத்தில் தமிழ் மக்களுக்கு எந்த உதவிகளையும் வழங்க முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பண்ணையாளர்களுக்கு ஆதரவான அறவழிப்போராட்டம் ஒன்றை  வியாழக்கிழமை(2) முன்னெடுத்திருந்தனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களின் பேரணி காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி சித்தாண்டி போராட்டக்களத்தை சென்றடைந்தது.