மட்டக்களப்பில் தமிழ் மக்களின் வாழ்வு அழிவடையும் நிலையில் உள்ளதையே மாதவனை மற்றும் மயிலத்தமடு கால்நடைவளர்ப்போர் மேற்கொண்டுவரும் போராட்டம் எடுத்துக்காட்டுகின்றது. சட்டவிரோத குடியேற்றம், படைத்துறை ஆக்கிரமிப்பு, தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசின் செயற்திறனற்ற நடவடிக்கை, சிங்கள மக்களின் ஆக்கிரமிப்புக்கு வழங்கப்படும் இலங்கை அரசின் ஆதரவு இவற்றுக்கு எதிராக அங்கு மக்கள் கடந்த இரண்டு மாதமாக போராடி வருகின்றனர்.
அம்பாறை மட்டக்களப்பு எல்லையில் உள்ள இந்த கிராமங்கள் 1972 ஆம் ஆண்டில் இருந்தே கால்நடைவளர்ப்பை தொழிலாக கொண்ட கிராமங்கள். 2009 ஆம் ஆண்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பின்னரே அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்தன. மதத்தையும், மொழியையும் பயன்படுத்தி அங்கு பாரிய அளவில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த கிராமங்கள் 200,000 கால்நடைகளின் மேச்சல் நிலங்களை கொண்டது. அங்கு வாழும் 3,000 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமாக அவை விளங்குவதுடன், உள்ளூர் பொருளாதாரத்திலும் அது கணிசமான பங்கை வகிக்கின்றது. அடர்ந்த காடும், அதனை சூழவுள்ள தென்னைமரங்களும், பொருளாதாரத்தில் மட்டுமல்ல சூழலின் உயிரினப்பரம்பலுக்கும் முக்கியமானது.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் அங்கு 4000இற்கு மேற்பட்ட கால்நடைகள் சுட்டுக் கொல்லப்பட்டும் காணாமலும் போயுள்ளன, ஆனால் இதுவரையில் அதற்கு பொறுப்பானவர்கள் கைதுசெய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. அந்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தமிழ் பண்ணையாளர்களை அடித்து துரத்துவது, பயமுறுத்துவது, தாக்குதவது, அவர்களுக்கு செந்தமான வீடுகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்துவது, உடைமைகளை களவாடுவது, விவசாய உற்பத்திகளை கொழுத்துவது, வயல்களுக்கு தீயிடுவது, கால்நடைகளை பலவந்தமாக அபகரிப்பது போன்ற செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செயற்பாடுகளால் அங்கு நாளொன்றிற்கு உற்பத்தி செய்யப்படும் 5500 லீற்றர் பாலின் அளவு தற்போது 300 லீற்றர்களாக குறைந்துள்ளது. இது அந்த மக்களுக்கான பாதிப்பு மட்டுமல்ல இவ்வாறான வன்முறைகளில் இருந்து மீளமுடியாமல் அந்த பிராந்தியத்தையே பாதித்துள்ளது. சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க இலங்கை அரசு தவறியதே இந்த பிரச்சனைக்கான மூல காரணம்.
சிங்கள காவல்துறையினரும், பௌத்த துறவிகளும், அரசியல்வாதிகளும் அத்துமீறிய குடியேற்றங்களுக்கு துணைபோகின்றனர். அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. 1930 ஆம் ஆண்டுக்குரிய ஆவணங்களின் படி இது வனத்துறைக்கு செந்தமான பிரதேசம், அது மேச்சல் நிலங்களாக வரையறுக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் 1978 ஆம் ஆண்டு அது மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் வந்தாலும், சிங்களவர்களின் குடியேற்றம் அங்கு சட்டவிரோதமானது. 2022 ஆம் ஆண்டு மேல் நீதிமன்றம் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் தீர்ப்புக்களை வழங்கியபோதும், அது அங்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை. கிழக்கின் முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத் மற்றும் அரசியல்வாதிகள் அங்கு சட்டவிரோதமாக குடியேறிய கிராமங்களின் பெயர்களை மாற்ற முற்பட்டதுடன், அங்கு பௌத்த ஆலையத்தையும் அமைக்க முற்பட்டிருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை அந்தபிரதேசத்தில் மேலும் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது.
அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை இலங்கை அரசு உடனடியாக வெளியேற்றி அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே தற்போதைய பிரச்சனையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரும். இழப்புக்களை சந்தித்த பண்ணையாளர்களுக்கு இலங்கை அரசு இழப்பீடுகளையும் வழங்கவேண்டும். மேலும் எதிர்காலத்தில் அங்கு அவ்வாறு ஏற்படாது இருக்க தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதனை தான் தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புக்களும் வலியுறுத்த வேண்டும். அந்த மக்களின் வாழ்வையும், இருப்பையும் காப்பது எமது இன்றைய கடமை என்பதை நாம் அனைவரும் மறந்துவிடலாகாது.