பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் – மனோ

தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குண்டர்கள் அந்த சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் செல்லமுத்து என்பவரது மகன்கள் மூலம் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்று, தூஷண வார்த்தைகளால் பேசி, பயமுறுத்தல் விடுத்துள்ளார்கள்.

இச்சம்பவம் நேற்று கண்டி புசல்லாவையில் நிகழ்ந்தது.

ஆலய நிகழ்வு ஒன்றுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரை இடை மறித்து இந்த காட்டுமிராண்டி நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

பொலிஸாரின் தலையீட்டினால் வன்முறை தடுக்கப்பட்டுள்ளது.

தமது அரசாங்க பங்காளிகளை ஒழுக்கத்துடன் நடந்துக்கொள்ள அறிவுரை வழங்குமாறும், இவர்கள் இனி இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறி வைக்க விரும்புகிறேன்“ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.