நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் ஞானசாரதேரர் தலமையிலான சில பெளத்த தேரர்கள் இன்று செய்த அடாவடித்தனமானது இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் நீதிமன்ற தீர்பையும் மதிக்காமல் சில பெளத்த தேரர்கள் நடப்பது வேதனைக்குரிய விடயமாகும்
என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் -;
சிறைவாசம் அனுபவித்த ஞானசார தேரர் அவர்கள் திருந்தி நடப்பார் என ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தார்.அனால் அவர் நன்னடத்தையை சரியான முறையில் பயன்படுத்தாமல் நீதிக்கு அச்சுறுத்தும் வகையிலும் இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலும் செயற்பட்டு வருகின்றது மிகவும் பாரதூரமான விடயமாக இருக்கின்றது.இந் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக செயற்பட்டு வரும் என்றால் இவரை விசாரணை செய்து கைதுசெய்ய வேண்டும். இந் நாட்டில் நீதி என்பது யாவரிக்கும் சமத்துவம் ஆனது.
ஞானசாரதேரர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவர் வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் இன்நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் நீதியை மறுக்கின்ற செயற்பாடாக இருக்கின்றது.
மனிதாபிமான ரீதியில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என செயற்பட்ட போது பாலித்த தேவப்பெரும நீதி மன்றத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் கீழே கைது செய்ப்பட்டார். இன் நாட்டில் தேவப்பெருமவிற்கு ஒரு நீதி ஞானசார தேரருக்கு ஒரு நீதி வழங்கப்பட முடியாது.இன் நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் ஒரு நீதி
என்கின்ற எண்ணக்கருவிற்கு அமைய அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவினை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்ற பொலிஸாரின் செயற்பாடு இந்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படிப் பாதுகாப்பது என்று கேள்விக் குறியாகின்றது.
இவர் கடந்த காலத்தில் கல்முனை பிரதேசத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலகத்தை ஒரு மாதத்திற்குள் தரம் உயர்த்தி தருவதாக மக்களை ஏமாற்றியிருந்தார்.அவருக்கு
கல்முனையில் இருக்கின்ற அடிவருடிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.எமது
கலாச்சாரத்தை அழிக்கின்ற இப்படிப்பட்ட நபர்களோடு சேர்ந்து ஒருசில வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களும் செயற்படுவது கவலையழிக்கின்றது.
மகிந்த ராஜபக்சவின் அரசியலுக்கு ஆதரவு வழங்குகின்ற அரசியல் வாதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஞானசார தேரருக்கு ஆதரவு வழங்கி வருகின்றார்கள்.
எமது கலாச்சாரத்தினை அழிக்கின்ற ஞானசார தேரருக்கு ஆதரவு வழங்குகின்ற அரசியல் வாதிகளை இனம் கண்டு எமது மக்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு தகுந்தபாடத்தை புகட்ட வேண்டும் என தெரிவித்தார்.
இன்று முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வழாகத்தினுள் நீதிமன்ற உத்தரவை மீறி ஞானசார தேரர் தலமையிலான தேரர்கள் பெளத்த பிக்குவின் உடலை தகனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.