வல்லாண்மைகளின் நிலாவில் நீர் இல்லையென்ற விண்வெளிக் கோட்பாட்டை தன்சிந்தனையைச் செயலாக்கி நிலாவில் நீர் உண்டென நிறுவிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை
- அன்னாரின் “பெரியாரும் அறிவியலும்” உரை தமிழ் மக்களுக்குச் சத்தியளிக்கிறது
- ஈழத்தமிழ் மக்களுக்குச் செயற்பாட்டுப்பலமளிக்கிறது
– மூத்த அரசியல் ஆய்வாளர் சூ. யோ. பற்றிமாகரன் –
அமெரிக்க இரஸ்ய விண்வெளி ஆய்வில் நிலவில் நீர் இல்லை என்ற நிலைப்பாடு நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் தரைஇறங்கிய பொழுது கொண்டு வந்த கற்கள் மணல் என்பவற்றின் சான்றாதரங்களுடனும் 50 முதல் 70 வரை நிகழ்த்தப்பட்ட 99 நிலவுக்கான விண்கலங்களின் பயணங்கள் வழியாகவும் உறுதியாக்கப்பட்டது.
ஆனால் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை தான் வானத்தைப் பார்த்து இந்தப் பிரபஞ்சம் பல பில்லியன் கோடி கி.மீ தொலைவுக்குப் பரந்து விரிந்து இருக்கையில் நமக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய வகையில் வெறும் 3 இலட்சம் கி. மீ. இல் தானே இருக்கிறது எனவே சாஸ்திரத்தில் பழமையான அறிவில் நிலவில் நீர் இல்லை என்று எழுதப்பட்டாலும் அந்த சாஸ்திரத்தை பழமை அறிவை மாற்றக் கூடிய வகையில் இதில் நீர் இருக்கலாம் என நான் எண்ணிய எண்ணத்தை அமெரிக்கா இரஸ்ய நிலவில் நீரில்லை என்ற கருத்துக்கு எதிர்கருத்தாக முன்வைத்து அதனை உறுதியுடன் பரிசோதனை ரீதியாக வாய்ப்புப் பார்ப்பதற்கு எடுத்த உழைப்பான வானவெளி ஆய்வு முறைமைகளே இன்று நிலவில் நீர் உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிறுவச் செய்துள்ளது எனச் சிங்கப்பூரில் “பெரியாரும் அறிவியலும்” என்ற மையப்பொருளில் பெரியார் சமூகசேவை மன்றத்தின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இம்மாதம் 5ம் திகதி உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கூடவே தன்னுள் தனது வானத்துடனான நெருக்கமான தொடர்பால் ஏற்பட்ட நிலவில் நீர் இருக்கலாம் என்ற எண்ணத்தை வாய்ப்புப் பார்ப்பதற்கு “நிலவில் இறங்கு நீரைத் தேடு” என்ற அமெரிக்க ரஸ்ய செயன்முறைக்கு மாறாக “ நீரைத் தேடு பின்னர் நிலவில் இறங்கு” என்ற கோட்பாட்டுடன் அவர்கள் அனுப்பிய ரோவரை அனுப்பாது சந்திரயான் 1 என்னும் வெறும் செயற்கைக் கோளை மட்டும் அனுப்பி முன்னர் மற்றைய கோள்கள் சுற்றிய இடமிருந்து வலமாக நிலவைச் சுற்றாது, நிலவை மேலிருந்து கீழாகச் சுற்றவைத்து தகவல்களைத் தரவுகளைப்பெற்று புதிய முறைமையைச் செயற்படுத்தியதால் நிலவில் நீர் உண்டு என்பது இன்று அறியப்பட்டுள்ளது.
என்றும் தெரிவித்தார். இப்படி முன்னர் உள்ள முறைமைக்குள்ளேயே சுழலாது புதிய முறைமைகளால் எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் சிந்தனை என்பது தன்னில் பெரியார் அவர்கள் “ யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் விளக்குமாத்தை விட உன் அறிவு பெரியது.
அதை சிந்தி” எனப் பெரியார் கூறிய வார்த்தைகள் தான் தன் நெஞ்சில் சிந்தித்துச் செயற்படும் தன்மையை உருவாக்கியது எனக் கூறியுள்ள விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை திருக்குறளில் “ எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என வள்ளுவரும் தெளிவாகச் சொல்லியிருப்பதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
இன்று தமிழர்களிடை பொதுவாகவும் ஈழத்தமிழர்களிடை சிறப்பாகவும் உள்ள இன்றைய சமகாலத்துப் பிரச்சினைகளுக்கு எவ்விதம் தீர்வு காண வேண்டுமென்ற கேள்விக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின் இந்த உரை பல தெளிவுகளையும் வழிகாட்டல்களையும் நெறிப்படுத்தல்களையும் தந்துள்ளது.
தமிழர் ஒவ்வொருவரும் பழையன சிறந்தனவென்றோ புதியன தீயனவென்றோ முடிவுசெய்து வாழாது ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்ல காலவகையினானே’ என்ற தமிழிலக்கண நூலான நன்னூலின் இலக்கணப்படுத்தலைத் தம் வாழ்வின் இலக்கணமாக்கி பழமையில் மாளாது புதுமையில் மயங்காது சிந்தித்து சமகாலத்துக்கேற்ற கொள்கைகள் கோட்பாடுகளை உருவாக்கி உயர வேண்டும். இதனைத் தமிழரின் மெய்ப்பொருளியல் கோட்பாடாகவே “ தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா – இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா” எனப் 13ம் நூற்றாண்டிலேயே, ஈழத்தில் யாழ்ப்பாண அரசு நிலவிய காலத்திலேயே தமிழகத்தில் ‘சிவப்பிரகாசம்’ என்னும் சைவசித்தாந்த மெய்ப்பொருள் நூலைத் தந்த உமாபதி சிவானார் தெளிவாகக் கூறித் தமிழர் தத்துவமாகவும் உலகுக்கு வெளிப்;படுத்தியுள்ளார்.
எனவே காலத்துக்கேற்ற சிந்தனைகளை வளர்த்து சிந்தனையைச் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தோற்றுவித்து அதை நோக்கி ஆர்வமுடனும் அக்கறையுடனும்; விடா முயற்சியுடனும் அர்பப்ணிப்புடனும் செயற்படுவதுதான்; எடுத்த காரியம் வெற்றியாகும் நிலையைத் தோற்றுவிக்கும்; எனத் தமிழர்களுக்குச் சத்தியளிக்கும் உரையாக இவ் உரையை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அமைத்துள்ளார். இது தனிமனித வாழ்வில் எண்ணத்தை வெற்றியாகச் செயற்படுத்துவதற்கான வழிமுறையாக உள்ளது.
ஆனால் ஈழதத்தமிழர்களைப் பொறுத்த மட்டில் அவர்கள் தனிமனித சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் தமிழர்கள் என்ற இனத்துவத்தன்மைக்காகச் சிறிலங்காவால் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுகிற சமகால வரலாற்றை கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற உரிமைகளை அவர்களின் வரலாற்றுத் தாயகமான இலங்கையில் அவர்கள் தங்களுக்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் இறைமையின் அடிப்படையில் பாதுகாப்பதன் மூலம் தமது அமைதி வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய மக்களாக இன்றைய உலகில் உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்கள் தங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்வை மட்டுமல்ல சமுகமாக தேசஇனமாக தேசமாக ஒன்றுபட்டு எழ வேண்டியது அவசியமாகிறது. இதனை ஒருங்கிணைப்பில் ஈடுபடுபவர்கள் அவரவரின் சுதந்திரத்தின் அடிப்படையில் அனுமதித்து உரையாடல்கள் வழி உரிய நேரத்தில் உரியது நடக்க அன்பு உறவாடல் மூலமான நட்பின் வழி நெறிப்படுத்தல் வேண்டும்.
ஈழத்தமிழர்கள் தேசமாக அவர்களின் தேசியத்தலைமையின் கீழ் 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் இலங்கைத் தீவுக்குள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொடர்ந்து வரும் இருதேச மக்களின் நாடு இலங்கை என்ற உண்மையின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் உயிர்களையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் பாதுகாக்க ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கான நடைமுறையரசை சீருடை அணிந்த முப்படைகள் சட்டவாக்க சட்ட அமுலாக்க அமைப்புக்கள் நிர்வாகம் என்ற ஒரு அரசாங்கத்துக்குரிய அத்தனை கட்டமைப்புக்களுடனும் சிறிலங்காவின் இனஅழிப்பில் இருந்து தங்களைப்பாதுகாக்கும் ஆயுத எதிர்ப்புப் போராட்டத்தினையும் உள்ளடக்கி முன்னெடுத்து அதற்கான உலக அங்கீகாரத்தை வேண்டிநின்ற நிலையில் அந்த நடைமுறையரசு சிறிலங்காவால் அதன் நட்பாளர்களாக விளங்கிய அனைத்துலக வல்லாண்மை மற்றும் பிராந்திய வல்லாண்மை நாடுகளின் நேரடியானதும் மறைமுகமானதுமான அனைத்துலகத் தலையீட்டின் படைபல மற்றும் புலனாய்வு உதவிகளுடன் 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பில் 17600 க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களைத் தேசமாகவே இனப்படுகொலை செய்த இனஅழிப்பின் மூலம் செயற்பட முடியாது அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மக்கள் மேலான யுத்தத்தின் மூலம் முடக்கப்பட்டது.
எனவே தேசமாக எழுந்த ஈழத்தமிழர்கள் அந்தத் தேசத்தை மீள் உற்பத்தி செய்வதே இன்றைய தேசமாக எழுதலாக அமைய வேண்டும். ஆயினும் துப்பாக்கிகள் மௌனித்த நிலையில் சனநாயக வழிகளின் மூலம் தங்களின் பிரிக்க்பபட முடியாத தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை உடைய மக்களாகத் தங்களை மறுஉற்பத்தி செய்தல் ஈழத்தமிழர்களின் இன்றைய வரலாற்றுக்கடமையாகவும் அனைத்துலக மக்களின் இணைப்புக்கான தேவையாகவும் உள்ளது.
இந்நேரத்தில் 2009 முதல் இன்று வரை அதே சிறிலங்காவின் நட்பு நாடுகளின் உதவியுடனும் திருகோணமலைச் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினரான திரு. சம்பந்தனின் சிறிலங்காத் தேசியக் கொடியைத் தனது தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து உள்ளக பொறிமுறை மூலம் ஈழத்தமிழின அழிப்புக்கான நீதியைப் பெறுவோம் என்ற பிரகடனத்தின் அடிப்படையிலும் இந்த இனஅழிப்புக்கான தண்டனை நீதியோ பரிகார நீதியோ பெறமுடியாத நிலை அனைத்துலக மட்டத்தில் உள்ளது.
ஆயினும் இந்த இனஅழிப்பால் தங்கள் கிட்டிய குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களும் சிறிலங்காப் படையினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு வலிந்து காhணமலாக்கப்பட்டவர்களது கிட்டிய குடும்ப உறுப்பினர்களும் இன்றுவரை நீதிக்கான ஏக்கத்துடன் வாழ்ந்து வேதனையுடன் 14 ஆண்டுகளாகத் தெருவில் நின்று போராடி மடிந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் குறித்த உலக மக்களின் பார்வையைத் திருப்புதல் தேசமாக ஒருங்கிணைந்து எழுவதற்கான தளமாக முன்னெடுக்கப்படல் முக்கியம்.
அதே நேரத்தில் இலங்கைத் தீவின் தேசஇனமான ஈழத்தமிழர்களை சிறிலங்காவில் வாழும் ஒரு சமுகம் என்று வரைவுபடுத்தி அவர்களின் இறைமையையும் தாயக தேசிய தன்னாட்சி உரிமைiயும் இல்லாதொழிக்கும் புதிய அரசியல் அமைப்பு ஒருநாடு ஒருசட்டம் என்ற விருதுவாக்கியத்துடன் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படப்போகிறது. இதற்கு எதிரான சனநாயகப் போராட்டங்களை ஒடுக்கவெனப் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் இதுவரை இருந்ததை விட மேலும் மோசமான முறையில் மனித உரிமைகளை பறித்தல் மக்கள் உரிமைகளை மறுத்தல் சட்டத்தின் ஆட்சியை நீக்கல் போன்ற அனைத்துலகசட்டங்கள் மனித உரிமைகள் எதனையும் ஈழமக்கள் நெருங்க இயலாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூடவே நிகழ்நிலைத்தடுப்புச்சட்டம் என்ற பெயரில் சமுக ஊடகங்கள்; உட்பட்ட அனைத்து ஊடகங்களுக்குமான ஊடகச்சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தல் வழி ஈழத்தமிழர்களின் அன்றைய பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பொதுக்கருத்துக்கோளம் ஒன்றை அனைத்துலக மட்டத்தில் உருவாக்காதவாறு மக்கள் கருத்துச் சுதந்திரத்தை முற்றாக இன்றைய சிறிலங்கா அரசு முடக்கியுள்ளது.
இவ்வாறு நடைமுறை உண்மைகள் வெளிவராதவாறு செய்யும் சிறிலங்கா தமிழ் பௌத்தமாகவே இலங்கைத் தீவில் பௌத்தம் தொடக்கமுற்றது என்ற வரலாற்று உண்மையைத் திரிபுபடுத்தி தமிழர் தாயகங்களில் உள்ள தமிழருக்குச் சொந்தமான காணிகளிலும் அரசுக்குரிய நிலங்களிலும் வளமான நிலங்களையும் வாழ்வாதாரத் தரைகளையும் பௌத்த தொல்லியல் பகுதிகள் என்ற தொல்லியல் திணைக்களத்தின் நியாயப்பாட்டுடன் பிக்குகளைக் கொண்டு பௌத்த விகாரங்களை படையினரின் துணையுடன் கட்டி படையெடுப்பு ஒன்றில் மண்ணை எப்படி ஒரு படைநகர்வு மெல்ல மெல்ல முன்னேறி முழுமையாக ஆக்கிரமிக்குமோ அதே பாணியில் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய நிலஙக்ளை ஆக்கிரமிப்புச் செய்வதை இன்றைய சிறிலங்கா தனது ஈழத்தமிழ் மக்கள் மீதான பண்பாட்டு இனஅழிப்பாகவும் இனத்துடைப்பாகவும் முன்னெடுத்து இவ்வாரத்தில் திருகோணமலை இலுப்பைக்குளப்பகுதி வரை முன்னேறி கிழக்கையும் யாழ் குடாநாட்டுக்கு உள் வரை முன்னேறி வடக்கையும் நில ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நில ஆக்கிரமிப்பில் பெறப்படும் நில விரிவாக்கமும் ஈழத்தமிழரின் இந்துமாக்க கடலில் தனது கடற்படை மூலம் ஆக்கிரமித்துள்ள கடல்பரப்புக்களையும் பிறநாடுகளுக்கு குத்தகைக்கு கொடுப்பதன் மூலம் ஈழத்தமிழர்களை தனது நேசநாடுகளின் சந்தை இராணுவத் தேவைகளுக்கும் தனது பொருளாதார வங்குரோத்து நிலையில் பணத்தைப் பெறுவதற்கும் பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு தமிழர் தாயகத்தின் உட்கட்டுமானங்களை உருக்குலைக்கும் சிறிலங்கா இளம் தமிழரின் கல்வியை ஒழுக்கத்தை சிந்திக்கும் திறனை ஆற்றல்களை அறிவை மழுங்கடிக்கும் வகையில் கடுமையான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்கால வாழ்வையே நாசப்படுத்துதல் கட்டற்ற பாலியல் பழக்க வழக்கங்களுக்கும் பழக்கப்படுத்தி அவர்களின் உளஉடல் நலங்களை அழித்தல் என்கின்ற இருமுனை உத்திகளையும் மகிழ்வித்தல் என்ற பெயரில் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகளை நடாத்தி இளம் தலைமுறையினரை சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக சிந்தனைகளில் இருந்து திசை திருப்பும் செயற்பாடுகளையும் இந்தியாவுடன் இணைந்து திட்டமிட்ட முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
அதேநேரம் ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பு மூலம் ஈழத்தமிழர்கள் தேசமாக எழுந்து தங்கள் மண்ணையும் மக்களையும் அவர்களின் இறைமையுடன் கூடிய அவர்களில் இருந்து யாராலும் என்றும் பிரிக்கப்பட முடியாத தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளையும மீளுருவாக்கம் செய்யும் தேசநிர்மாணத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கு ஈழத்தமிழ்த் தேசிய உணர்வை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து நீக்கும் நுட்பமான மறைமுகச் செயல்முறைகளும் வெளிப்படையான நேரடிச் செயல் முறைகளும் ஈழத்தமிழரிடையில் சிறிலங்கா இந்திய அரசுகக்களால் வேகமான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அபாயம் ஏற்படும் என்றே; ஈழத்தமிழர்கள் ஒருங்கிணைப்பு என்பதே மக்களுக்கான சத்தியளிக்கும் என்ற ஒரே நோக்கிலே 1983 ம் ஆண்டு ஆடி ஈழத்தமிழின அழிப்பை அடுத்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் ஈழத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள் தேசியத் தலைமையால் அமைக்கப்பட்டு அதன் பின்னரே நடைமுறையரசு நடைமுறைச் சாத்தியமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்கள் தான் ஈழத்தமிழர் தாயகத்தின் சத்தி வழங்கல் அமைப்புக்கள்.
இப்பொழுது இந்தக் கட்டமைப்பை ஈழத்தமிழரிடை சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் நெகிழச் செய்யும் அல்லது இல்லாதொழிக்கும் முயற்சிகள் பலவழிகளில் பலநிலைகளில் சிறிலங்காவாலும் இந்தியாவாலும் வேகப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் உள்ள கொப்புழ் கொடியுறவை அறுப்பதும் இந்த முயற்சிகளின் மற்றொரு நோக்காகவுள்ளது.
இதற்காக உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலம் பிளவுகளை ஏற்படுத்தல் என்ற உத்தி இங்கே வேகமாக வளர்க்கப்பட்டு தன் கண்ணைத் தன்விரல் கொண்டே குத்தும் உத்தி ஈழத்தமிழரிடையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ஒருங்கிணைப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருப்பினும் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டு சனநாயகவழிகளில் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நடைமுறை எதார்த்தம் ஈழத்தமிழருக்கு வாழ்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தனது அறிவு ஆற்றல் பொருளாதாரநிலை நட்பு வட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் மண்ணினதும் மக்களதும் நாளாந்த வாழ்வைப் பாதுகாக்கவும் அடக்குமுறைகள் ஒடுக்கு முறைகளில் இருந்து விடுதலை பெறவும் உழைக்க வேண்டிய காலக்கட்டாயம் உருவாகியுள்ளது.
மேலும் தேசிய விடுதலைப் போராட்ட காலத்தில் கையாளப்பட்ட கட்டுப்படுத்தி கட்டளைப்படுத்தும் அதே முறைகள் வழியாக மக்களினது சுதந்திரமான செயற்பாடுகளை நெறிப்படுத்துதல் இன்றைய காலகட்டத்தில் மக்களை ஒருங்கிணைப்பதில் செயற்திறன் குறைந்தவையாகவே அமையும் என்பது வெளிப்படையான உண்மை.
அதே நேரத்தில் ஒரு தலைமைத்துவத்தில் தாயகம் தேசியம் தன்னாட்சியை மக்களின் இறைமையின் அடிப்படையில் உறுதிப்படுத்தி, எவராலும் என்றும் மாற்ற இயலாத கொள்கையான ஈழத்தமிழர் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அவர்களின் இறைமையினை முன்னிறுத்தி வென்றெடுத்தல் என்ற உறுதிப்பாட்டுடன் சமகாலத்துக்கான கோட்பாடுகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் அனைவரையும் ஒருங்கிணைக்க ஈழத்தமிழர் ஒருங்கிணைப்பில் ஈடுபடும் அனைவரும் ஒருமித்து சுட்டொருங்கு இயக்கச் செயற்பாடுகளில் ஒவ்வொருவரது தனித்துவத்தையும் அனுமதித்த நிலையில் பொதுவேலைத் திட்டங்கள் வழி இணைந்து செயற்பட்டாலே ஈழத்தமிழர் தேசமாக எழும் பலம் நடைமுறைச்சாத்தியமாகும்.
இந்த முயற்சிக்கு ஈழத்மிழர்களுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின உரை செயற்பாட்டுப் பலமளிக்கிறது. அவர் எவ்விதமாக பெரியாரின் சிந்தனையில் உறுதியாகத் தன்னை வளர்த்தாரோ அவ்வாறே ஈழத்தமிழர்களும் தேசியத் தலைவரின் எனது மண் எனது மக்கள் இரண்டினதும் பாதுகாப்பான அமைதி என்ற சிந்தனையில் தங்களை ஆழப்படுத்திக் கொள்ளல் அவசியம்.
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அவர்கள் எவ்வாறு அமெரிக்க இரஸ்ய கொள்கைகளுக்கு மேலாகத் தன்னில் நம்பிக்கை வைத்து தனது எண்ணத்தைச் செயற்படுத்தி வல்லாண்மைகளின் கொள்கையையும் மாற்றிட முய்னறாரோ அவ்வாறு ஒவ்வொருவரும் வெளிநாடுகள் அமைப்புக்கள் எமக்கான தீர்வைத் தரவேண்டுமென்ற நினைப்பில் இருந்து விடுபட்டு நாங்கள் உறுதியாக ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம் வெளிநாடுகளை அமைப்புக்களை எங்களை நாடிவரவைக்கும் ஆற்றல்களை அறிவை வெளிப்படுத்த வேண்டும்.
விஞ்ஞானி மயில்சாமி அவர்கள் எவ்வாறு செயற்பாட்டுக்கான கொள்கைளை முறைமைகளைத் தனது அறிவால் தலைகீழாக மாற்றி அதற்கான புதிய முறைமைகளைச் செயற்படுத்தினாரோ அவ்வாறே சமகாலத்தை சமகால உலகை வெல்லக் கூடிய முறையில் எங்கள் கொள்கைகள் கோடபாடுகளை ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய தாயகம் தேசியம் தன்னாட்சி என்ற அடிப்படைக் கொள்கையில் உடைவு ஏற்படாது மாற்றி புதிய செயற்பதட்டு முறைகளை சனநாயக வழியில் உலகம் ஏற்கக் கூடிய முறையில் அமைத்து மண்ணினதும் மக்களினதும் பாதுகாப்பான வாழ்வை அனைத்துலக மக்களினது இணைப்புடன் உருவாக்க உழைக்க வேண்டும்.
உலகத் தமிழர்களாக கனடா முதல் இலங்கை வரை வாழும் ஈழத்தமிழர்கள் அவரவர்கள் வாழும் நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஒழுங்கு முறைமைகளுக்கு உட்பட்டு சனநாயக வழிகளில் தாயக – உலக – தாம் வாழும் நாட்டு ஈழத்தமிழர்கள் என்ற முக்கோண நிலைப்பட்ட தொடர்பாடல்களை வேகப்படுத்தி பொதுவெளியில் கூட்டொருங்கு செயற்பாட்டின் மூலம் ஒரு தேசமாக எழுதலே உண்மையான ஒருங்கிணைப்பாக மாறி தாயகத்தில் மண்ணும் மக்களும் பாதுகாப்பான அமைதி வாழ்வு பெற உதவும். இதற்கான செயற்பாட்டுப் பலத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை அவர்களின் பேச்சு தருகின்றது.