நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் – வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

310 Views

நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் தமது உறவுகளை நினைத்தும்,  எமது ஏக்கத்தை உணர்ந்தவர்களாக அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டு நிற்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:

வடக்கு கிழக்கில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய போராட்டம் அவர்களது உறவுகளால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை அரசால் குறித்த போராட்டத்துக்கு தீர்வு தரப்படாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியில் இருந்து தொடர்போராட்டமாக ஆரம்பித்தோம். இந்த தொடர் போராட்டத்தின் மூலம் எமது நியாயமான கோரிக்கைகளையும் துன்பங்களையும் உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.

இந்த போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் , கடந்த 11 வருடங்களாக எமக்கான நீதி கிடைக்கவில்லை, மாறாக எமது போராட்டங்களை மழுங்கடிக்கக்கூடிய வகையிலான செயற்பாடுகளே தொடர்சியாக இடம்பெற்று வருகிறது.

புலனாய்வாளர்களின் தொடர்சியான விசாரணைகள் மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியிலும் நாம் எமது போராட்டத்தை தொடரும் இந்த நேரத்தில் எமது போராட்டத்தை சிதறடிக்கும் நோக்கோடும் பலர் செயற்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. எனவே மக்கள் இதனை சரியாக புரிந்து கொண்டு எமது போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

தொடர் போராட்டத்தின் மூலமே நாம் எமக்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியும். எமது கோரிக்கைகளை சர்வதேசத்துக்கு அழுத்திச் சொல்வதற்கு நாம் பலமாக அணிதிரள வேண்டும். எமக்குள் உள்ள கட்சி ரீதியான வேற்றுமைகளை இந்த சமயத்தில் அகற்றி பொதுவான எமது உறவுகளை தேடும் போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் வடக்கிலும் கிழக்கிலும் வெளிநாடுகளிலும் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்மாவட்டத்தில் காலை 10 மணிக்கு யாழ். பிரதான பேருந்து நிலையமுன்றலில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக யாழ் மாவட்டச்செயலகம் வரை செல்லவுள்ளது. , கிழக்கு மாவட்டத்தில் காலை 10 மணிக்கு கல்லடி பாலத்தில் ஆரம்பிக்கும் போராட்டம் பேரணியாக காந்தி பூங்காவரை செல்லவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஊடாக நாம் முன்னெடுத்து வருகிறோம். மேலும் வெளிநாடுகளில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எமது புலம்பெயர் உறவுகள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமது உறவுகளை தேடி தேடி ஏக்கத்துடன் இறந்த உயிர்கள் ஏராளம். இதுவரை 72 க்கு மேற்பட்ட உறவுகளை இழந்துள்ளோம். மீதமாகவுள்ள நாம் தொடர்சியாக போராடி வருகிறோம். நாம் இறப்பதற்கு முன்னதாகவேனும் எமது உறவுகளுக்கு நீதி வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தமது உறவுகளை நினைத்தும் ,  எமது ஏக்கத்தை உணர்ந்தவர்களாக அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டு நிற்கிறோம்.

ஆ.லீலாதேவி
செயலாளர்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்

Leave a Reply