நாட்டில் நடைபெற்ற யுத்தமே சிறுவர் தொழிலாளர்கள் ஆவதற்கான காரணம் – மஹாலக்ஷ்மி குருசாந்தன்

ஜூன் 12ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இதனையொட்டி இலக்கு மின்னிதழ் 134  இல் வெளியான சிறப்பு நேர்காணல்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் திகதி, சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சிறுவர் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்தத் தினத்தின் நோக்கமாகும்.

அந்த வகையில், இலங்கையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏராளமான சிறுவர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். இலங்கையில் சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவதற்கு  பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அதில் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஒரே விதமான காரணங்களும், மலையகப் பகுதிகளில் வேறு  விதமான காரணங்களும் கூறப்பட்டாலும், அடிப்படைத் தன்மை என்பது ‘வறுமை’ என்ற ஒன்றாகத்தான் இருக்கின்றது.

இது தொடர்பில்  மன்னார் மாவட்ட மகளிர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலக்ஷ்மி குருசாந்தனை  ‘இலக்கு’ ஊடகம் வினவிய போது,

கேள்வி – வடக்கு கிழக்கு பகுதியில் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுவதற்கான காரணங்கள் எவை? 

பதில்-: வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகமாக உருவானதற்குக் காரணம், 40 வருடங்கள் இலங்கையில் நடந்த யுத்தம் ஆகும். இந்த யுத்தத்தில் நிறைய பெண்களின் கணவர்கள் காணாமல் போயிருக்கின்றார்கள். பலர் தடுப்பு முகாம்களிலும், பலர் மரணம் அடைந்தும் உள்ளார்கள். இதை விட பல சிறுவர்கள் தங்களின் பெற்றோர்களை இழந்திருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக  அக்குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.

அடுத்ததாக மது, போதைவஸ்துக்கு அடிமையான  குடும்பத் தலைவர்களினால்  அந்தக் குடும்பத்தில் உள்ள சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுகின்றார்கள். மேலும் இந்தப் போதைவஸ்துகளை விற்பனை செய்வதற்கு  சிறுவர்களை மூளைச்சலவை செய்து ஆசை வார்த்தை காட்டி  போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுத்துகின்றனர்.  இவ்வாறான  சிறுவர்கள் காலப்போக்கில்  போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாகிறனர். அத்தோடு   சிறுவர் தொழிலாளர்களாக மாறி பணம் உழைக்கும் மோகத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

அடுத்து பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் சக மாணவர்கள், ஏழை மாணவர்களை புறந்தள்ளுவது,  தண்டிப்பது  போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது, அந்த மாணவர்களுக்கு உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தி பாடசாலையை விட்டு விலகி சிறுவர் தொழிலாளர்களாக மாறுவதற்கு  வழி செய்கின்றது.

கேள்வி-: சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவது என்பது சமூகப் பிரச்சினை என்ற அளவில் இருக்கின்றது. இதனை மாற்ற என்ன செயற்பாடுகள்? யார் யாரால் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்-: இவ்வாறான சிறுவர்கள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதை நிறுத்துவதற்கும், சிறுவர்கள் பெண்கள் மேம்பாடு தொடர்பாக, அரசு பல்வேறு திட்டங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் செயற்படுத்துகின்றது. சில நிறுவனங்களும் அதற்கான முன்னாயத்த செயற்பாடுகளை செய்து வருகின்றன. என்றாலும் இவை ஆக்க பூர்வமாக இருப்பதாகத் தெரியவில்லை.  சிறுவர்களுடைய பிரச்சினையைப் பொதுப் பிரச்சினையாக மாற்றி, முதலில் குடும்ப வறுமையை ஒழிப்பதற்கு செயற் திட்டங்களை வகுக்க வேண்டும். சிறுவர்கள் மீது சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும்.

மேலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது யார் என்பதனை அடையாளப்படுத்தி அவர்களுக்குச் சட்டத்தின் மூலம் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக இல்லாமையால் தான் சிறுவர்கள் ஆங்காங்கே வேலைகளுக்குச் செல்வது சாதாரண விடயமாகக் காணப்படுகின்றது.

அரசாங்கம் சிறுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கனடா போன்ற நாடுகளில் சிறுவர்கள் கட்டாயமாகக் கல்வி கற்க வேண்டும் என்ற சட்டங்கள் இருக்கின்றன. நமது நாட்டிலும் அவ்வாறான கட்டாயக் கல்விச் சட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதே விடயத்தை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அப்போதுதான் இலங்கையில் அல்லது வடக்கு கிழக்கில் சிறுவர்கள் தொழிலாளர்களாக மாறுவது இல்லாமல் செய்யப்படும்.