போருக்கு பின்னரான தமிழர் அரசியல் தலைமைத்துவம் மிதவாத தலைமைகளிடம் விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது என ஜனநாய போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் க. துளசியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழினம் இலங்கை சோசலிசக் குடியரசாக மாற்றமடையும் வரை தனித்துவமான இனம், மொழி, கலை, கலாசாரம், மதம் நிர்ணயம் செய்யபட்ட எல்லைகளுடன் தனி அரசுகளாகவே இயங்கி வந்தமைக்கான சான்றுகள் உள்ளன.
மேலைத்தேய நாடுகளின் வியாபார நோக்கு ஆளுகைக்குள் இலங்கை அகப்பட்டதன் பின்னர் அவர்களது நிர்வாக இலகுக்காக அனைத்து அரசுகளும் ஒன்றிணைக்கப்பட்டதே வரலாறு.
இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இரு வகையான மொழிகளையும் பல வகையான மதங்களையும் வெவ்வேறு கலாசார பண்பியல்புகளையும் கொண்ட மக்கள் கூட்டத்தினையும் ஒரே குடியரசின் கீழ் கொண்டு வருவதில் ஏற்பட்ட பாதகமே இனப் பிரச்சினைகளுக்கான பிரதான காரணமானது.
கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநிலை என்பவற்றில் ஒரு இனம் இன்னுமோர் இனத்தினை அடக்கும் இழிநிலையே தமிழர்கள் தமது ஆட்சி உரிமை அதிகாரங்களை பெறும்பொருட்டு அகிம்சை போராட்டங்களை முன்னெடுக்க தலைப்பட்டனர்.
அதற்கு எதிர்வினையாற்றிய இலங்கை அரசு தமது இராணுவ மேலாண்மையினை தமது குடிகளுக்கெதிராக பயன்படுத்தியமை இவ்விவகாரம் மேலும் மோசமடைய வழிகோலியது.
தமிழினம் தமது நியாயப்பாடான பிறப்புரிமை உயிர் தப்பி வாழ்வதற்கான முன்முயற்சிகளில் இருவேறு நிலைகள் எடுக்க தலைப்பட்டது.
ஒன்று நாட்டினை விட்டு மிகப்பெரிதான புலப்பெயர்வு, அடுத்தது தங்களைத் தற்காத்து கொள்வதற்கான தமது அரசியல் இருப்பிற்கான ஆயுதப் போராட்டம்.
மூன்று தசாப்தகாலம் நீடித்த ஆயுதப் போராட்டம் தமிழினத்தை மேலும் இக் கட்டிற்குள் இட்டுச் சென்றதே நிஜம்.
ஆயுதப் போராட்டம் இலங்கை தீவில் உச்சம் பெற்ற தருணங்களில் எல்லாம் சர்வதேச நாடுகளின் இடை ஈட்டுடன் சமரச தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக மிக நீண்டகால ஆயுதப் போராட்டத்தினை நாங்கள் முன்னெடுத்து தமிழினத்துக்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியதினால் தீர்வு முனைப்பிற்கான தலைமைப் பொறுப்பு புலிகளிடமே இருந்து வந்துள்ளது.
தீர்வுக்கான சமாதான பேச்சுவார்த்தைகளில் ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகள் பிரிவினை வாதத்தை முன் நிறுத்தி பேச்சுக்களில் ஈடுபடவில்லை.
யதார்த்தத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரிவினைவாத அமைப்பே அல்ல தமிழர்களது அரசியல் தத்துவார்த்த தளத்திற்கு பலம் சேர்க்கவே நாங்கள் ஆயுதமேந்தி போராடினோம்.
துரதிஷ்டவசமாக தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் பிராந்திய நலன் சார்ந்து பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு பெரும் மனித பேரவலத்துடன் முள்ளிவாய்க்காலில் முடித்து வைக்கப்பட்டது.
போருக்கு பின்னரான தமிழர் அரசியல் தலைமைத்துவம் மிதவாத தலைமைகளிடம் விட்டுச்செல்லப்பட்டிருக்கிறது.
அதனைத் தவிரவும் மாற்று வழிகள் ஏதுமிருக்கவுமில்லை. ஆனால், தற்போதைய தமிழர் தரப்பு அரசியல் புலிகளை வசைபாடுவதும் மறுதரப்பு புகழ் பாடுவதாகவுமே செல்கிறது.
அன்பான தமிழ்த் தலைமைகளே ஒரு தேசிய தலைமையினால் போரியலையும் சமதளத்தில் அரசியல் செல்நெறி போக்கினையும் சிறப்புற கொண்டு சென்றிட முடியுமானால் ஏன் இப்போது தமிழர் அரசியல் இத்தனை அரசியல் தலைவர்கள் இருந்தும் முடியாதுள்ளது.
இனம் தத்துவார்த்த தளமின்றி பயணிப்போமேயானால் நாம் எமக்குள் நாமே சிதைவுறுவோம் என்பதில் ஐயமில்லை.
புலிகளை வசைபாடுவதும், துதிபாடுவதையும் புலிகள் வேண்டிகொண்டதில்லை அது தேவையுமில்லை அவர்கள் யாருக்காக வாழ்ந்தார்கள், யாருக்காக தம்மை ஆகுதியாக்கினார்கள். அந்த மக்களை சிந்தித்து அவர்களுக்காக ஒன்றுபட்டு செயலாற்றுவதே நீங்கள் அந்த மறவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அன்பான போராளிகளே, மிகப்பெரும் போர்க்களங்களில் பங்கெடுத்து வழிநடத்திய இனத்தின் சாதனையாளர் நாங்கள் இடம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்து முடிவெடுத்து செயலாற்றும் வல்லமையினையும் மனோதிடத்தையும் தலைவர் கற்பித்திருக்கிறார்.
நாங்கள் எடுக்கும் இந்த அரசியல் தளத்திற்கான செயலாற்றுகைக்கான முடிவுகளுக்கு மாவீரர்களும் எமது மக்களும் தோளோடுதோள் கொடுப்பார்கள்.
அஞ்சி நின்றால் ஆளப்படுவோம் எழுந்து வந்தால் ஆளுவோம். ஆயுத போராட்டம் போலவே இன்றைய அரசியல் வழியும் எம்மீது நிர்பந்தித்து திணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கடலிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டவை கேட்காமலேயே திருப்பி கொடுக்கபடுவதே வழமை. அதுதான் இயல்பு அது நந்திக்கடலுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.