செப்ரெம்பர் 20ம் திகதி, அஸர்பைஜான் துருப்புகளிடம் நாகோர்ணோ- கரபாக் (Nagorno – Karabakh) பிரதேசம் சரணடைந்த நாளிலிருந்து, ஆர்மீனியன் (Armenian) இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
அஸர்பைஜான் (Azerbaijan) இராணுவத்தினர், நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தின் மீது ஒரு இராணுவத் தாக்குதலை ஆரம்பித்ததும், இரு தரப்புத் துருப்புகளிடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, தாம் தமது ஆயுதங்களைக் களைவதாகவும் தமது இராணுவக் கட்டமைப்பைக் கலைப்பதாகவும் நாகோர்ணோ பிரதேசத்தைச் சேர்ந்த படைவீரர்கள் சம்மதம் தெரிவித்திருந்தார்கள்.
”அஸர்பைஜானிலிருந்து பிரிந்திருந்த நாகோர்ணோ கரபாக் குடியரசும் அது சார்ந்த அனைத்து நிறுவனங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து செயலிழக்கும்” என்று அந்த பிரதேசத்தின் தலைவர் அறிவித்திருக்கிறார்.
குறிப்பிட்ட அந்தப் பிரதேசம் அஜர்பைஜானின் ஒரு பகுதியாகவே பன்னாட்டுச் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. இருப்பினும் கடந்த மூன்று தசாப்தங்களாக ஆர்மீனியன் இனத்தைச் சேர்ந்தவர்களே இப்பிரதேசத்தின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள்.
உலகில் மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் மோதல்களில் இதுவும் ஒன்றாகும்
நாகோர்ணோ கரபாக் எங்கே இருக்கிறது?
கருங்கடலுக்கும் கஸ்பியன் கடலுக்கும் இடையே காணப்படுகின்ற தென் கோக்கஸஸ் மலைப்பிரதேசத்தில் நாகோர்ணோ கரபாக் பிரதேசம் அமைந்திருக்கிறது.
நாகோர்ணோ கரபாக் பிரச்சினை தொடர்பாக, அஸர்பைஜானும் ஆர்மீனியாவும் எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் தமக்கு இடையே மிகவும் கடுமையாகப் போரிட்டிருந்தன. அதற்குப் பின்னரும் இந்த நாடுகளுக்கு இடையே கடுமையான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன.
2020ம் ஆண்டு, ஆறுவாரங்கள் தொடர்ந்து நடைபெற்ற மிகவும் கடுமையான போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்.
ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட அமைதிப்படையினரின் வருகையோடு, குறிப்பிட்ட போர் ஒரு முடிவுக்கு வந்தது. ஆனால் கடைசியாக நடைபெற்ற தாக்குதல் தொடங்க முன்னர் பல மாதங்களாக இப்பிரச்சினை கொதிநிலையிலேயே இருந்து வந்தது.
தற்போது நடைபெற்ற மோதலுக்கான காரணம் என்ன? 2022 டிசம்பரில், குறிப்பிட்ட பிரதேசத்துக்குச் செல்லும் மிகவும் முக்கியமான பாதையை அஜர்பைஜான் தடுத்ததைத் தொடர்ந்து, அங்கு மோதல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானது.
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தையும் ஆர்மீனியக் குடியரசையும் இணைக்கின்ற ஒரேயொரு பாதையாக லச்சின் ஓடை மட்டுமே இதுவரை இருந்துவந்தது.
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்துக்குரிய மிகவும் முக்கிய விநியோகப் பாதையாக லச்சின் ஓடை இருந்து வந்ததன் காரணத்தினால், பாதை தடைசெய்யப்பட்ட போது, அடிப்படை உணவு மற்றும் மருந்துகளுக்கு குறிப்பிட்ட பிரதேசத்தில் மிகவும் மோசமான தட்டுப்பாடு ஏற்பட்டது.
இராணுவ விநியோகங்களுக்குக் குறிப்பிட்ட பாதையை ஆர்மீனியா பயன்படுத்தி வருவதாக அஸர்பைஜான் குற்றஞ்சாட்டியது. ஆர்மீனியாவோ அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்தது. வேறொரு பாதை வழியாக உணவையும் வேறு உதவிகளையும் வழங்கத் தாங்கள் முன்வந்ததாகவும் அதனை நாகோர்ணோ கரபாக் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அஸர்பைஜானின் தலைநகரமான பாக்கு (Baku) தெரிவித்தது.
லச்சீன் பாதையையும் அஸர்பைஜானிலிருந்து வருகின்ற அக்டாம் பாதையைப் பயன்படுத்தவும் இதுவரை ரஷ்யாவைச் சேர்ந்த அமைதிகாக்கும் படையினரே உதவி வந்தார்கள்.
ஆனால் பின்னர் மொஸ்கோவின் கவனமும் வளங்களும் உக்ரேனை ஆக்கிரமிப்பதில் குவிமையப்படுத்தப்பட்டன.
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தைத் தாங்களாகவே கைவிட்டுச் செல்வதாக ஆர்மீனியப் பிரதம மந்திரி ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தமது தரப்பில் 200 பேர் கொல்லப்பட்டதாக கரபாக் அதிகாரிகள் தெரிவித்திருக்கும் அதே நேரம், தங்கள் தரப்பில் 192 பேர் கொல்லப்பட்டதாக அஸர்பைஜான் தெரிவித்திருக்கிறது.
மக்கள் வெளியேறுவதற்கான காரணம் என்ன?
செப்ரெம்பர் 20ம் திகதி, ரஷ்யா மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, நாகோர்ணோ கரபாக் பிரதேசத்திலுள்ள ஆர்மீனியன் இனத்தவர்களும் அஸர்பைஜானும் ஓர் போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் நீடித்த போர் ஒரு முடிவுக்கு வந்தது.
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் உள்ள ஆர்மீனியன் இனத்தைச் சார்ந்த இராணுவ வீரர்கள், தங்கள் ஆயுதங்களை முழுமையாகக் களைவதாகவும், தமது இராணுவ அமைப்புகளைக் கலைப்பதாகவும் ஒப்பந்தத்தில் உடன்பாடு தெரிவித்திருந்தார்கள். குறிப்பிட்ட பிரதேசத்தை அஸர்பைஜானுக்குள் உள்வாங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமகாலத்தில் இப்பிரதேசத்தின் பிரிவினைத் தலைவரான சாம்வேல் சஹ்றமான்யன் அடுத்த வருடத் தொடக்கத்திலிருந்து தமது அரசுக்குரிய அனைத்து நிறுவன அமைப்புகளையும் கலைப்பதாக அறிவித்திருக்கிறார். இவ்வாறு நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தின் சுதந்திரப் போராட்டம் ஒரு முடிவுக்கு வருகிறது.
”தமது மக்களின் பாதுகாப்பையும் தமது மக்களின் முக்கிய தேவைகளையும் கருத்திற் கொண்டே அரசைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று சஹ்றமான்யன் தெரிவித்தார். சுதந்திரமாக, தன்னார்வமாக, எந்தவொரு தடையுமின்றி மக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அஸர்பைஜான் சம்மதம் தெரிவித்திருந்தது.
நாகோர்ணோ கரபாக் அஸர்பைஜானிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள்.
போர்நிறுத்த ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்ட ஒரு வாரத்தில், நாகோர்ணோ கரபாக்கில் தமக்கு எந்தவித எதிர்காலமும் இல்லை என்று கருதி, ஒரு இலட்சத்து இருபதினாயிரம் சனத்தொகையைக் கொண்ட ஆர்மீனியன் மக்களில் அரைவாசிப்பேர் குறிப்பிட்ட பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த மக்களது பேருந்துகளாலும் மகிழுந்துகளாலும் லச்சீன் ஓடை நிறைந்திருந்தது.
”நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியர்கள் எவரும் எதிர்காலத்தில் இருக்க மாட்டார்கள்” என்று ஆர்மீனியாவின் பிரதம மந்திரியான நிக்கோல் பஷின்யன் (Nikol Bashinyan) தெரிவித்திருக்கிறார்.
இனச்சுத்திகரிப்பு நடைபெறுவதாக ஆர்மீனியாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுதலித்த அஸர்பைஜான், ஆர்மீனிய மக்களைச் சமமாக நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.
பல தசாப்தங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த மோதல்களின் காரணமாக குறிப்பிட்ட பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்திருந்த அஸர்பைஜான் மக்கள், தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்லக்கூடியதாக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் கருத்துத்தெரிவித்தார்.
குறிப்பிட்ட இரு நாடுகளும் எந்தவித அமைதி ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லை என்பது மட்டுமன்றி, பல வருடங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் இருநாடுகளுக்கும் இடையே எந்தவித இராஜீக உறவுகளும் இருக்கவில்லை.
போருக்கு இட்டுச்சென்ற காரணிகள் எவை?
1920 ம் ஆண்டில் தற்கால ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளாக இணைக்கப்பட்டன. அதே நேரம் நாகோர்ணோ கரபாக் என வரையறுக்கப்பட்ட பிரதேசம் ஆர்மீனிய மக்கள் பெரும்பான்மையாக வதியும் பிரதேசமாக இருந்த போதிலும் அஸர்பைஜானின் ஆளுகைக்குள்ளேயே அது இருந்துவந்தது.
1980 களில் சோவியத் ஒன்றியம் உடையத் தொடங்கிய காலகட்டத்தில், தாங்கள் ஆர்மீனியாவின் ஒரு பகுதியாக மாற விரும்புவதாக நாகோர்ணோ கரபாக் பிரதேசத்துக்குரிய நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்களிப்பில் முடிவானது.
இந்தப் பிரிவினைப் போராட்டத்தை அஸர்பைஜான் அடக்க முற்பட்ட வேளை, ஆர்மீனியா அதற்குத் தனது முழுiயான ஆதரவை வழங்கியது.
இக்காரணங்களினால் நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் வாழ்ந்த இரு இனங்களுக்கும் இடையே இனமோதல்கள் ஏற்பட்டன. ஆர்மீனியா, அஸர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் முறையே தனிநாடுகளாகத் தம்மைப் பிரகடனப்படுத்திய பின்னர். மோதல்கள் போராக வெடித்தன. இந்தப் போர்களின் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு மக்கள் மோசமான துன்பங்களையும் அனுபவித்தனர்.
ஆர்மீனியாவிலே வாழ்ந்த அஸர்பைஜானிய மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, அகதிகளாக அஸர்பைஜானில் குடியேறிய நிகழ்வுகளை பிபிசி செய்திச் சேவையின் அஸர்பைஜான் பிரிவுக்குப் பொறுப்பான கோனுல் கலிலோவா நினைவுகூர்ந்தார்.
1992;ம் ஆண்டு, பெப்ரவரி மாதத்தில், நாகோர்ணோ கரபாக் பிரதேசத்துக்கு அருகில் அமைந்திருந்த அஸர்பைஜானைச் சேர்ந்த கோஜாலி என்ற நகரத்தில் வாழ்ந்த மக்கள் ரஷ்யப் படைவீரர்கள் துணைநிற்க, ஆர்மீனிய வீரர்களினால் கொல்லப்பட்டனர். அஸர்பைஜான் தரவுகளின் படி 600க்கு மேற்பட்ட அஸர்பைஜானிய மக்கள் கொல்லப்பட்டனர். இப்படுகொலை தொடர்பான தகவல்களையும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் ஆர்மீனியா மறுத்துவருகிறது.
கடந்த பல வருடங்களாக, இரு இனங்களையும் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது மட்டுமன்றி, பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வுகளையும் சந்தித்திருக்கின்றனர். இனச்சுத்திகரிப்பு மற்றும் படுகொலைகளை மேற்கொண்டதாக இரு தரப்பினர் மேலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.
1990களில் அஸர்பைஜான் துருப்புகளை ஆர்மீனிய இராணுவத்தினர் நாகோர்ணோ கரபாக் பிரதேசத்திலிருந்து வெளியேற்றியிருந்தனர்.
“இழைக்கப்பட்ட கொடுமைகளை தற்போதைய இளையோர் எவ்வளவு தூரத்துக்கு அறிந்து வைந்திருக்கிறார்கள் எனத் தனக்குத் தெரியவில்லை” என்று காலிலோவ் கூறுகிறார்.
கடந்த காலங்களில் கொல்லப்பட்ட அஸர்பைஜானிய மக்கள் தொடர்பாக ஆர்மீனியாவில் யாரும் வாய்திறப்பதில்லை. அதே போல, 1980களின் இறுதியில், சும்காயிற் மற்றும் பாக்கு நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இனக்கலவரங்கள் தொடர்பாகவும் அஸர்பைஜானிய மக்களுக்கு யாரும் எடுத்துச் சொல்வதில்லை. ஆனால் இந்த இனக்கலவரங்கள் பற்றிய அஸர்பைஜானின் பார்வை வேறாக இருக்கிறது.
ஆர்மீனிய இராணுவத்தினர் நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, முதலாவது நாகோர்ணோ கரபாக் போர் முடிவுக்கு வந்தது. ரஷ்யாவின் முயற்சியினால் அப்போது போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, நாகோர்ணோ கரபாக் பிரதேசம் அஸர்பைஜானின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இப்பிரதேசம் அக்காலத்திலிருந்து, ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்தவர்களினால் தன்னிச்சையாகக் குடியரசாக அறிவிக்கப்பட்டு ஆர்மீனிய மக்களினால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆர்மீனிய அரசு இதற்கான ஆதரவை வழங்கி வந்திருக்கிறது.
2020 இல் நடந்தது என்ன?
நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தில் ஒரு அமைதியற்ற சூழலே எப்போதும் நிலவி வந்தது. மோதல்கள் பல தடவைகள் நடைபெற்றன. இடையிடையே அமைதிச்சூழலும் நிலவியது.
மூன்று வருடத்துக்கு முன்னர் ஆறு வாரங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற மிகக் கடுமையான மோதலே, 1990ம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின்னர், இடம்பெற்ற ஆகப்பெரிய மோதலாகும்.
அஸர்பைஜான் தாம் இழந்த பிரதேசங்களை மீளவும் கைப்பற்றியது. 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவின் துணையுடன் சமாதான ஒப்பந்தம் ஒப்பமிடப்பட்ட போது, 1994ம் ஆண்டில் அஸர்பைஜான் இழந்த நாகோர்ணோ கரபாக் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து நகரங்களையும் அஸர்பைஜான் மீட்டுக்கொண்டது.
அந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப இந்தப் பிரதேசங்களிலிருந்து ஆர்மீனியா வெளியேற வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் அந்தப் பிரதேசத்தின் மிகவும் குறுகிய பகுதியையே ஆர்மீனிய படைகள் தம் வசம் வைத்திருந்தன.
ரஷ்யாவினதும் துருக்கியினதும் ஆதரவு யாருக்கு?
இப்பிரதேசத்திலுள்ள வல்லாதிக்க சக்திகள், இந்த இருநாடுகளுக்கும் இடையேயுள்ள மோதலில் கணிசமான பங்கை வகித்திருக்கின்றன.
அஸர்பைஜானுடன் மிக நெருக்கமான பண்பாட்டு ரீதியிலான பிணைப்புகளை துருக்கி கொண்டிருக்கிறது. 2020ம் ஆண்டில் நடைபெற்ற போரில் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்கு துருக்கித் தயாரிப்பான பேறாக்ரர் ஆளில்லா விமானங்கள் முக்கிய பங்கை வகித்தன.
ஆர்மீனியாவைப் பொறுத்தவரையில் அது பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நல்ல உறவைக் கொண்டிருக்கிறது. ஆர்மீனியாவில் ரஷ்யாவின் இராணுவத்தளம் ஒன்று அமைந்திருக்கிறது. சோவியத் ஒன்றியத்தில் முன்னர் அங்கம் வகித்த ஆறு நாடுகளால் உருவாக்கப்படபட்ட கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு என்ற அமைப்பில் இரண்டு நாடுகளுமே உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
அரசுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஆர்மீனியாவில் முன்னெடுத்த நிக்கோல் பஷின்யன் ஆர்மீனியாவின் பிரதமராகப் பதவியேற்ற போது, ஆர்மீனியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. தமது நாட்டின் பாதுகாப்புக்காக ரஷ்யா என்ற ஒரு நாட்டில் மட்டும் தங்கியிருப்பது மூலோபாய ரீதியிலான தவறு என்று அவர் பரப்புரை செய்து வந்திருக்கிறார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆர்மீனியா அமெரிக்காவுடன் இணைந்து இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தது.
நாகோர்ணோ கரபாக்கில் அண்மையில் நடைபெற்ற சண்டையைத் தொடர்ந்து, ரஷ்ய அமைதிப்படையினரின் பங்கு தொடர்பாக பஷின்யன் பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார். பாதுகாப்புக் கூட்டமைப்பில் ஆர்மீனியா தொடர்ந்தும் அங்கம் வகிப்பதன் பயன் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
“ரஷ்யாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுகள்” என்று கூறி பஷின்யனின் விமர்சனங்களை ரஷ்யா நிராகரித்திருக்கிறது.
ரஷ்யாவுடன் ஆர்மீனியா கொண்டிருக்கின்ற பன்முகப்படுத்தப்பட்ட, மற்றும் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த உறவைச் சீரழிக்க யெறவான் தலைமைத்துவம் வேண்டுமென்றே முயற்சி செய்வதாகவும், மேற்குலகத்தின் திருவிளையாடல்களுக்கு ஆர்மீனியாவை அவர் பணயம் வைப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஓர் உறுப்பு நாடாக மாறுவதற்கு ஆர்மீனியா எடுத்த முடிவை தமக்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கை என்று ரஷ்யா வர்ணித்திருக்கிறது. அதிபர் புட்டினைக் கைதுசெய்ய பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் ஒரு பிடிவிறாந்தைப் பிறப்பிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.