நயினாதீவு செல்லும் தமிழர்கள் மீது கெடுபிடி; சிங்களவர்களுக்கு தாராளம்; மனித உரிமை ஆணைக்குழுவில் புகார்

நயினாதீவுக்கு செல்வதற்கு சிங்களவர்களுக்கு ஒரு நடை முறையும் தமிழர்களுக்கு வேறொன்றும் பின்பற்றப்படுகின்றது. இதில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதுடன் அலைக் கழிக்கவும்படுகின்றனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தபெருந்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக திருவிழாவில் கலந்து கொள்ள மிகச்சொற்பமான பக்தர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் அனுமதி பெறவேண்டும். பொலிஸ் அனுமதி இல்லாதவர்கள் பயணிக்க முடியாது. ஆலயத்தில் மக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் இந்த நடைமுறையினால், நயினாதீவிற்கு பிற தேவைகளுக்காக செல்பவர்களும், நயினாதீவை சேர்ந்தவர்களும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

இவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பாஸ் பெற்றே, தங்கள் பயணத்தைத் தொடரவேண்டியுள்ளது. இதேவேளை, தென்னிலங்கையில் இருந்து பேருந்துகளிலும், வாகனங்களிலும் கூட்டம் கூட்டமாக வரும் சிங்கள மக்கள் பாஸ் நடைமுறை எதுவுமின்றி நயினாதீவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

நயினாதீவுக்கு செல்ல அவர்களிற்கு கட்டுப்பாடு இல்லாத நிலையில், அவர்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கும் எந்தக் கட்டுப்பாடுமின்றி சென்று திரும்புகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

பாரபட்சமாக நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறைக்கு எதிராக புங்குடுதீவு, நயினாதீவை சேர்ந்த இருவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.