தொல்லியல் ஆய்வுகள் நிறுத்தப்படாது – கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

551 Views

“தொல்லியல் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் எந்த ஆய்வு நடவடிக்கைகளும்  நிறுத்தப்படாது“ என  தேசிய மரபுரிமைகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவாதத்தில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்களால்  முன்வைக்கப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் கோவிலில் இடம்பெறும் தொல்பொருள் திணைக்களத்தினரின் அகழ்வாராய்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டுமென்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க

மேலும் அவர் கூறுகையில்,

“தொல்பொருள் விடயம் எந்த மதத்துக்கோ இனத்துக்கோ குழுவுக்கோ மட்டுப்படுத்தப்பட்டதல்ல.கௌதாரிமுனை சிவன் கோவில் உட்பட இரு சிவன் கோவில்களை நாம் இனம் கண்டுள்ளோம் .இவை இரண்டும் புராதன தன்மைகளைக் கொண்டவை. பழைய கட்டிட மரபுகளைக் கொண்டவை. இவை பௌத்த சிங்கள கட்டிடக் கலைகள் என்று கூற மாட்டோம். ஆனால் இவற்றை உறுதி செய்ய தொல்லியல் ஆய்வே உதவும். இவ்வாறான புராதனங்கள் இந்து மதத்துக்கோ பௌத்த மதத்துக்கோ மட்டும் உரித்தானதல்ல. முழு நாட்டுக்கும் முழு உலகத்துக்கும் உரித்தானது. எனவே நாம் தொல்லியல் ஆய்வுகளை செய்யத்தான் வேண்டும் .

இவ்வாறான தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழ்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன் வர வேண்டும். தென்பகுதியிலுள்ள இந்து ஆலயங்களில் ஆய்வுகளைச் செய்யாமல் வடக்கு,கிழக்கில் மட்டும் ஏன் ஆய்வுகளைச் செய்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்   கேட்கின்றார். தரவுகள், தகவல்கள் கிடைக்குமிடங்களில் நாம் ஆய்வுகளைச் செய்கின்றோம். நிலங்களுக்குள் என்ன இருக்கிறது என்பது ஆய்வு செய்தால் தானே தெரியும். தென்பகுதியில் அழிவடைந்துள்ள இந்துக் கோவில்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

தொல்லியல் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்படும் எந்த ஆய்வு நடவடிக்கைகளும் ஒருபோதும் நிறுத்தப்படாது. அவை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply