தொடர்ந்தும் கட்சித் தலைவராக ரணில்! சஜித்துடன் சமரசம் பேச குழு அமைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து தம்மை அசைக்க முடியாதவாறு கட்சிக்குள் பிடியை இறுக்கியிருக்கின்றார் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. நடப்பு ஆண்டுக்கான கட்சியின் புதிய செயற் குழுவில் தமக்கே பெரும்பான்மை இருக்கின்றமையையும் அவர் உறுதிப்படுத்திக்கொண்டார்.

நேற்று மாலை கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கவே கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தை சஜித்தரப்பினர் புறக்கணித்தனர். 72 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய புதிய செயற்குழுவில் சுமார் ஐம்பது உறுப்பினர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்குபற்றினர் என்றும்- ரணில் தொடர்ந்தும் தலைவராக நீடிக்க வேண்டும் என்ற தீர்மா னத்துக்கு 37 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர் என்றும் – தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சஜித் பிரேமதாஸ பக்கத்தில் இருந்த மங்கள சமரவீர, மலிக்சமரவிக்கிரம போன்றவர்கள் எல்லோரும் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் பங்குபற்றி ரணிலின் கையைப் பலப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய கூட்டத்தில் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐ.தே.கட்சி முன்னின்று அமைக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கவும் – தேர்தலின்போது பிரதமர் வேட்பாளர் நியமனத்தை சஜித் பிரேமதாஸ விரும்பினால் அதனை அவருக்கு வழங்கவும் – ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து சஜித் தரப்புடன் பேசி இணக்கம் காணும் முயற்சிக்கு ஒரு குழு அமைக் கப்பட்டது. நவீன் திஸநாயக்கா, லக்ஷ்மன் கிரியயல்ல, மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர ஆகியோரிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

புதிய அரசியல் கூட்டின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்க முன்வந்தாலும் அந்தக்கூட்டின் செயலாளராகக் கட்சியின் செயலாளரே இருக்க வேண்டும் என்றும், ஐ.தே.கட்சியின் தலைமையகமே புதிய கூட்டின்அலுவலகம் என்றும் ரணில் தரப்பு ஏற்கனவே நிபந்தனை விதித்திருப்பதால், சஜித்துக்கு வழங்குவதற்கு ரணில் உத்தேசித்துள்ள புதிய அரசியல் கூட்டின் தலைமைப் பதவி என்பது வெறும்பொம்மைப் பதவிதான் என்று சஜித் ஆதரவுப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளரே புதிய கூட்டின் செயலாளர் என்பதும், அந்தக் கூட்டு ஸ்ரீகொத்தாவில் இருந்து இயங்க வேண்டும் என்பதும் புதிய கூட்டின் முழுப் பிடியும் ரணிலின் கைகளில்தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகள் என்றார் அவர். ஐ.தே. கட்சியின் தலைவர் என்ற கோதாவில் தமக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய புதிய செயற்குழுவை அமைத்த ரணில் விக்கிரமசிங்க செயற்குழுவில் கொழும்பு மாநகர மேயர் றோஸி சேனநாயக்கா மற்றும் சரத்பொன்சேகா, அஜித் பெரேரா, இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோருக்கு இடமளிக்காமல் அவர்களை வெட்டிவிட்டிருக்கின்றார்.