தேர்தல் வன்முறைகள் குறைவு ; சட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட பௌத்த சமயத் தலைவர்கள் – பெப்ரல் அமைப்பு

செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புப்பட்டு உயிரிழப்பு ஒன்று கூட பதிவாகவில்லை.

அத்துடன், பெரிய வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 68 சம்பவங்களே பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு கூறுகின்றது.

கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவிக்கின்றார்.

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் சட்ட மீறல்கள் இடம்பெற்றமை தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதன்படி, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ஊடக நிறுவனங்களே அதிகளவில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் கூறினார்.

அதுமட்டுமன்றி, பௌத்த சமயத் தலைவர்கள் அரசியலில் ஈடுபட்டு, சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ரொஹண ஹெட்டியாராட்ச்சி குறிப்பிட்டார்.

அரச சொத்துகள் பயன்படுத்தியமையும் இந்த முறை குறைவாகவே காணப்படுகின்றது என அவர் கூறுகின்றார்.

பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ள பின்னணியில், சமூக ஊடகங்களின் ஊடாக தொடர்ந்தும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக அவதானித்து, அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஊடாக சமூக ஊடக நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரொஹண ஹெட்டியாராட்ச்சி தெரிவித்தார்.